48 மாதங்களுக்கான ஏற்பாட்டில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம்

Published By: Digital Desk 3

01 Sep, 2022 | 09:09 PM
image

(நா.தனுஜா)

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவி செயற்திட்டத்தின்கீழ் 48 மாதங்களுக்கான ஏற்பாட்டில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கான ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இருப்பினும் இலங்கைக்கு நிதியுதவி செயற்திட்டத்தை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதிய இயக்குநர் சபையின் இறுதிக்கட்ட அனுமதியைப் பெறுவதற்கு இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்கள் நிதியியல் உத்தரவாதத்தை வழங்குவது இன்றியமையாதது என்றும்,  அந்த உத்தரவாதத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியாதவிடத்து நிதியுதவி வழங்கல் சாத்தியமற்றதாகலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதியுதவி செயற்திட்டம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான முதற்கட்ட நகர்வாக ஊழியர்மட்ட இணக்கப்பாட்டை எட்டுவதை முன்னிறுத்திய பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் பீற்றர் ப்ரூபர் மற்றும் மஸாஹிரோ நொஸாகி ஆகியோர் தலைமையிலான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு கடந்த 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது. 

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய தரப்பினருடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து மேற்படி ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிக்கும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று சர்வதேச நாணய நிதியத்தினால் நேற்று வியாழக்கிழமை மத்திய வங்கி கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக் கிளை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இலங்கையின் நிதியியல் உறுதிப்பாட்டையும் வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரையும் பாதுகாக்கும் அதேவேளை நுண்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன்களின் நிலைபேறானதன்மை (ஸ்திரத்தன்மை) ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படக்கூடிய நிதியுதவி செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது. அதுமாத்திரமன்றி ஊழல்மோசடிகளை முடிவிற்குக்கொண்டுவரக்கூடியவாறான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஏற்படுத்துவதும் இதன் நோக்கங்களில் முக்கியமானதாகும்.

'இருப்பினும் இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் நிதியிடல் இடைவெளிகளை சீரமைப்பதற்கும் இலங்கைக்கான கடன்வழங்குனர்களிடமிருந்து கடன் சலுகைகளும் ஏனைய பல்தரப்புப் பங்காளிகளிடமிருந்து மேலதிக நிதிவழங்கல்களும் அவசியமாகின்றது. அதேபோன்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவியை வழங்கவேண்டுமெனில் அதற்கு, கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல் தொடர்பில் இலங்கையின் கடன் வழங்குனர்களிடமிருந்து நிதியியல் உத்தரவாதத்தைப்பெறல் மற்றும் தனியார் கடன் வழங்குனர்களுடன் கூட்டிணைந்த இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு நம்பகத்தன்மைவாய்ந்த முயற்சிகளை மேற்கொள்ளல் என்பன இன்றியமையாதவையாகும்' என்றும் சர்வதேச நாணய நிதியம் அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இலங்கை அரசாங்கத்தினால் ஒப்புக்கொள்ளப்பட்ட நிபரந்தனைகள் உரியவாறு நிறைவேற்றப்படும் பட்சத்திலேயே தற்போது எட்டப்பட்டிருக்கும் இந்த இணக்கப்பாடானது சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்டு, நீடிக்கப்பட்ட நிதியுதவி செயற்திட்டத்தை இலங்கைக்கு வழங்குவதற்கு அனுமதிபெறப்படும். எனவே இந்த ஊழியர்மட்ட இணக்கப்பாடு என்பது மிகநீண்ட செயன்முறையொன்றின் அடிப்படை மாத்திரமேயாகும்.

நிதியியல் நெருக்கடிக்குத் தீர்வை வழங்கக்கூடியவகையில் நிதியியல் வருமானத்தை அதிகரித்தல் (பாரிய வரி மறுசீரமைப்பு செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்), அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் நட்டமடையக்கூடிய அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கு செலவை ஈடுசெய்யக்கூடிய விலையிடல் முறைமையை அறிமுகப்படுத்தல், சமூக செலவினத்தை அதிகரிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடியின் விளைவாக வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினர்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், தரவுகளை அடிப்படையாகக்கொண்ட நாணய மற்றும் நிதிக்கொள்கை ஆகியவற்றின் மூலம் விலை ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், சந்தையினால் தீர்மானிக்கப்படக்கூடிய நாணயமாற்றுவீதத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக வெளிநாட்டுக்கையிருப்பை மீளவலுப்படுத்தல், நிதியியல் ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், நிதியியல் ரீதியான வெளிப்படைத்தன்மை, பொதுநிதி முகாமைத்துவம் மற்றும் ஊழலுக்கு எதிரான மிகவும் வலுவான சட்ட வரைபை உருவாக்கல் ஆகியவற்றின் மூலம் ஊழலைக் குறைத்தல் என்பனவே சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதியுதவி செயற்திட்டத்தைப் பெறுவதற்கு நிறைவேற்றப்படவேண்டிய முக்கிய விடயங்களாகும்.

இவற்றுக்கு மேலதிகமாக நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவின் தலைமை அதிகாரி பீற்றர் ப்ரூபர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பின்வருமாறு பதிலளித்தார்:

கேள்வி - தற்போது 4 வருடகாலத்திற்கென (48 மாதங்கள்) இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் 2.9 பில்லியன் டொலர்கள் எப்போது, எவ்வாறு வழங்கப்படும்?

பதில் - இலங்கை அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவேண்டிய விடயங்கள் உரியவாறு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இந்த நிதியுதவிக்கு சர்வதேச நாணய நிதிய இயக்குநர் சபையின் அனுமதி பெறப்பட்டு, அதன் பின்னரேயே இந்நிதி இலங்கைக்கு வழங்கப்படும்.

எனவே இதற்கு இயக்குநர் சபையின் அனுமதிபெறப்பட்டு, எப்போது இறுதிக்கட்ட இணக்கப்பாடு எட்டப்படும் என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவது கடினமான விடயமாகும். ஏனெனில் இது உரிய நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் தன்மையிலேயே தங்கியிருக்கின்றது. அதுவரை நாம் காத்திருக்கவேண்டும். குறிப்பாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தின்கீழான நுண்பாகப்பொருளாதாரத் திட்டவரைபிற்கு அமைவானதாக இருத்தல், கடன் ஸ்திரத்தன்மை தொடர்பில் இலங்கையின் கடன் வழங்குனர்களிடமிருந்து நிதியியல் உத்தரவாதத்தைப்பெறல் என்பன முக்கியமானவையாகும்.

கேள்வி - கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை தொடர்பில் உத்தரவாதத்தை வழங்குவதற்கு சீனா மறுத்தால் என்ன நடக்கும்.

பதில் - நிதியுதவி வழங்கல் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளின் பிரகாரம் கடன் ஸ்திரத்தன்மை குறித்த கடன் வழங்குனர்களின் நிதியியல் உத்தரவாதம் என்பது இன்றியமையாத விடயமாகக் காணப்படுகின்றது. எனவே அந்த உத்தரவாதத்தினைப் பெற்றுக்கொள்ளமுடியாதவிடத்து, சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி வழங்கல் சாத்தியமற்றதாகலாம். இது தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதுடன் கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையை ஏற்படுத்தக்கூடும். ஆகவே இது கடன் வழங்குனர்களின் கூட்டு நிலைப்பாட்டிலேயே தங்கியிருக்கின்றது.

இலங்கையின் கடன்களில் பெருமளவானவை 'பாரீஸ் கிளப்'பில் உள்ளடங்காத நாடுகளிடமிருந்து பெறப்பட்டனவாக இருக்கின்றன. இது இலங்கையின் கடன்களில் இருக்கின்ற ஓர் பிரச்சினையாகும். எனவே இதனைக் கையாள்வது குறித்து சிந்திக்கவேண்டியிருக்கின்றது. ஆனால் இவ்விடயத்தில் சர்வதேச நாணய நிதியம் நடுநிலை வகிக்கின்றது. நாம் கடன்வழங்குனரையோ அல்லது கடன்பெறுனரையோ சாரவில்லை.

கேள்வி - இலங்கையுடன் ஊழியர்மட்ட இணக்கப்பாடு எட்டப்படுவதற்கு முன்னரான பேச்சுவார்த்தைகளின்போது அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அதுசார்ந்த விடயங்கள் தொடர்பில் எந்தளவிற்கு அவதானம் செலுத்தப்பட்டது?

பதில் - மிகமோசமான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கிலேயே நாம் இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். ஆனால் எதிர்பார்த்திருக்கும் பொருளாதார மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக ரீதியான ஒத்துழைப்பு என்பன மிகவும் அவசியமாகும்.

கேள்வி - உங்களுடைய பேச்சுவார்த்தைகளின் பிரகாரம் வரிசார் மறுசீரமைப்புக்கள் எத்தகையதாக அமையவேணடும்?

பதில் - இலங்கையைப் பொறுத்தமட்டில் அதன் வரிவருமானங்கள் மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது. ஆனால் தற்போது முகங்கொடுத்திருக்கும் நிதியியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வரிவருமானங்களை அதிகரிக்கவேண்டியது அவசியமாகும். எனினும் வரிவீத அதிகரிப்பு வறிய மற்றும் பின்தங்கிய சமூகப்பிரிவினரைப் பாதிக்காதிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக அதிக வருமானம் பெறுவோருக்கான வரி அறவீட்டுவீதத்தை உயர்த்தமுடியும் என்று தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வறட்சியால் 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586...

2026-09-08 09:27:34
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2026-09-08 09:20:15
news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்றம்...

2026-09-08 09:01:06
news-image

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்...

2026-09-08 08:32:24
news-image

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை...

2026-09-07 12:33:54
news-image

இன்றைய வானிலை 

2026-09-08 06:30:43
news-image

பஸ் லலித் வழங்கிய தகவலுக்கமைய ஹங்வெல்ல...

2026-09-08 06:28:10
news-image

இரண்டாம் உலகப் போரின் பின்னர் அண்மையகாலத்தில்...

2026-09-08 06:17:18
news-image

மூதூரில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு சக்கர...

2026-09-08 06:14:40
news-image

22 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம்...

2026-09-08 06:03:38
news-image

‘சிரிலிய சவிய’ கணக்கில் ஒரு மில்லியன்...

2026-09-08 05:45:33
news-image

மட்டக்களப்பு ஊழல் மோசடி தொடர்பாக இன்னாள்...

2026-09-08 05:39:50