(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம். வசீம்)
அரச பயங்கரவாதத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வரும் வரை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு பண அனுப்பலை மேற்கொள்ள கூடாது.
சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவும் கூடாது. சிறந்த எதிர்காலத்திற்காக போராட்டம் தொடர வேண்டும். மக்கள் போராட்டம் நிச்சயம் வெற்றிப்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றில் வியாழக்கிழமை (1) இடம்பெற்ற இடைக்கால வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார பாதிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு ஆகிய காரணிகளினால் நாட்டு மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமது பிள்ளைகளின் தேவைகளை கூட பெற்றோரினால் நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுகிறது. உலகில் மந்த போசனை வீதம் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தில் உள்ளது.
மொத்த சனதொகையில் 50 சதவீதமானோர் பட்டினியில் வாடுகிறார்கள். நீர்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் ஆறுகளிலும், வாவிகளிலும் குதிக்க நேரிடும்.
நாட்டில் பெரும்பாலான தொழிற்துறைகள் மூடப்பட்டுள்ளன. முக்கிய நிறுவனங்களில் சேவையாளர்கள் எதிர்வரும் காலங்களில் தொழில்களில் இருந்து நீக்கப்படும் பாரதூர நிலை காணப்படுகிறது.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் துயர நிலையினை அரசாங்கம் அவதானிக்காமல் இருப்பது கவலைக்குரியது. பொலிஸ் அதிகாரிகள் கூட தங்க நகைகளை அறுக்கிறார்கள். நாட்டில் இவ்வாறான நிலைமையே காணப்படுகிறது.
இடைக்கால வரவு செலவு திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களை வியாபாரிகளுக்கு விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பது தெளிவாக விளங்குகிறது. அரசாங்கத்தின் உறுப்பினர்களும் வியாபார நடவடிக்கையில் ஈடுப்படுகிறார்கள். நிலக்கரி கொள்வனவிலும் முறைக்கேடுகள் காணப்படுகின்றன.
தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு அதனூடாகவும் மோசடி இடம்பெறுகிறது. இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், சமுர்த்தி கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும்.
ஊழல் நிறைந்த அரசியல் கட்டமைப்பில் இருந்து நாட்டை மீட்டெடுப்பது போராட்டத்தின் பிரதான இலக்காகும். ஊழல் மோசடியாளர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஊழல்வாதியாயின் அவருக்கும் போராட்டம் தாக்கம் செலுத்தும். காலி முகத்திடலில் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் போராட்டம் இல்லை என கருத கூடாது மக்கள் மனங்களில் போராட்டம் உள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மனங்களில் போராட்டம் இல்லாமலிருக்கலாம் ஆனால் அவர்களின் வயிற்றில் போராட்டம் உள்ளது.
ஆகவே போராட்டத்தின் நோக்கம் ஒருபோதும் இல்லாமல் போகாது. போராட்டத்தின் மீது அடக்குமுறையை பிரயோகித்து மக்கள் போராட்டத்தை ஒருபோதும் முடிவுக்கு கொண்டு வர முடியாது.
எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுக்க வேண்டுமாயின் போராட்டம் தொடர வேண்டும். போராட்டத்தை தவிர்த்து ஊழல் மோசடி அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க முடியாது. ஆகவே போராட்டத்தை பலப்படுத்துவோம்.
போராட்டத்தில் ஈடுப்படுபவர்கள் மீது வன்மையான முறையில் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் இவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எதிர்கால தலைமுறையினரை பாதுகாக்க வேண்டும்.
போராட்டகாரர்கள் மீது பொலிஸார் மிகவும் மிலேட்சத்தனமான முறையில் தாக்குதலை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.
இவர்கள் ஒரு நாள் நிச்சயம் பதிலளிக்க நேரிடும். முறையற்ற வகையில் செயற்படும் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய சட்டத்தரணிகள் அவதானம் செலுத்த வேண்டும்.
நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். இலங்கையில் பொலிஸார் செயற்படுவதை போன்று இங்கிலாந்து நாட்டு பொலிஸார் செயற்பட்டால் அந்நாட்டு மக்கள் பொலிஸாமா அதிபர் பதவி விலகும் வரை வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுப்படுவார்கள். ஆகவே எமது நாட்டு மக்களும் சிறந்த மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
அரச தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச சமுகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரச தீவிரவாதத்தை அரசாங்கம் நிறுத்தும் வரை இலங்கைக்கு பண அனுப்பல்களை மேற்கொள்ள வேண்டாம்.
அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைப்பது பெருமைக்குரியது. அது பிச்சைக்காரனுக்கு அதிஷ்டலாப சீட்டு கிடைப்பது போன்றது.
இராணுவம், பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தற்போது பிரயோகிக்கும் தாக்குதல்களுக்கு ஒருநாள் பதிலளிக்க வேண்டும்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். போராட்டத்திற்காக குரல் கொடுப்போம், போராட்டம் வெற்றிப்பெறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM