ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ரணிலும் 

02 Sep, 2022 | 07:14 AM
image

'அறகலய' மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த நாட்களில் 'கோட்டா வீட்டுக்கு போ ' என்ற சுலோகத்துக்கு நிகராக ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் ' என்ற கோரிக்கைக்கும்  முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.பெரும்பாலும் சகல அரசியல் கட்சிகளுமே அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன.மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்குதல்களுக்கு ஆளான நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கத்தயாராயிருப்பதாக கூறவேண்டியேற்பட்டது.

   மக்கள் கிளர்ச்சி தணிந்துபோயிருக்கும் நிலையில், அதுவும் குறிப்பாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு மீதான கவனமும் தணிந்துபோயிருப்பது போன்று தோன்றுகிறது.

     ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்காக அரசியலமைப்பு திருத்தமொன்றைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன்நிறைவேற்றி சர்வஜனவாக்கெடுப்பில்  மக்களின் அங்கீகாரத்தையும் பெறக்கூடிய சூழ்நிலை தற்போதைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இல்லை என்பது ஒரு புறமிருக்க, முன்னென்றும் இல்லாத வகையில் அந்த ஆட்சிமுறை ஒழிப்புக்கு அமோக வெகுஜன ஆதரவு இருக்கின்ற சாதகமான சூழ்நிலை தவறவிடப்படக்கூடாது என்ற அக்கறை மறுபுறத்தில் மக்கள் கிளர்ச்சியை ஆதரித்த அரசியல் மற்றும் சிவில் சமூக சக்திகளிடம் காணப்படுகிறது.

   முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் 44 வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய நாளில் இருந்தே எதிரணி கட்சிகள் குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இடதுசாரி கட்சிகளும் அதை எதிர்த்துவந்தன. பதவிக்கு வந்தால் அந்த  ஆட்சிமுறையை ஒழித்துவிடப்போவதாகவும் அந்த கட்சிகள் கூறின.ஆனால், அந்த கோரிக்கை வெகுஜன ஆதரவைக்கொண்டதாக அப்போது இருக்கவில்லை.

   ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி வேட்பாளர்களை மக்கள் தேர்தல்களில் ஆதரித்து பதவிக்கு கொண்டுவந்த போதிலும் அவர்கள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விட்டபோது மக்கள் கிளர்ந்தெழவில்லை.

    ஜெயவர்தனவுக்கு பிறகு பதவிக்கு வந்த  ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதி ஆட்சிமுறையை முழுமையாக ஆதரித்தவர்.அவருடன் முரண்பட்டுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் காமினி திசாநாயக்க, லலித் அத்துலத்முதலி போன்றவர்கள் அவர் மீதான பகைமை காரணமாகவே அந்த ஆட்சிமுறை ஒழிப்பு கோரிக்கையின் ஆதரவாளர்களாக மாறினார்கள்.

   ஐ.தே.க.வின் 17 வருடகால ஆட்சிக்கு பிறகு 1994 ஆம் ஆண்டில்  சுதந்திர கட்சி தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக  சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க களமிறங்கியபோதே முதல் தடவையாக ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு முதன்மையான வாக்குறுதியாக முன்வைக்கப்பட்டது.ஆனால், 2005 பிற்பகுதி வரை இரு பதவிக்காலங்களுக்கு ஜனாதிபதியாக  இருந்த அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.மேலும் ஒரு வருடகாலம் தன்னால் அந்த பதவியில் இருப்பதற்கு உயர்நீதிமன்ற தீர்ப்பொன்று தடையாக வந்துவிட்டதே என்ற கவலையுடன் தான் அவர் பதவியைவிட்டு இறங்கினார்.

   திருமதி குமாரதுங்கவின் ஆட்சியில் அரசியலமைப்பு விவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்  1995 ஜூலை 14 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டுவிடும் என்று திகதி குறித்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கிறதோ தெரியவில்லை.

    ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம்  குறித்து கலாநிதி அசங்க வெலிக்கல கடந்தவாரம் ருவிட்டர் சமூக ஊடகத்தில் செய்த பதிவொன்றுக்கு பதிலளித்த திருமதி குமாரதுங்க, அந்த விடயத்தில் தான் ஒருபோதும் தடுமாறவில்லை என்றும்   2000 ஆம் ஆண்டில் தனது அரசாங்கம் நிபந்தனையற்ற முறையில் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை உள்ளடக்கிய அரசியலமைப்பு வரைவை கொண்டுவந்தபோது மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அதை நிறைவேற்றுவதற்கு தேவைப்பட்ட 7 வாக்குகளை ஐ.தே.க. வழங்க மறுத்ததாலேயே தன்னால் அதைச் சாதிக்கமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.தனது ஆட்சியில் அதைச் செய்யமுடியாமல் போனதற்கு விக்கிரமசிங்க மீதே அவர் பழியைப் போடுகிறார்.

    திருமதி குமாரதுங்கவுக்கு பிறகு 2005 ஜனாதிபதியாக  பதவிக்கு வந்த மகிந்த ராஜபக்ச தனது முதலாவது பதவிக்காலத்துக்கு பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக வாக்குறுதியளித்தார். ஆனால், பிறகு அவர்  இரண்டாவது பதவிக்காலத்தில் 18 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்து தனது அதிகாரங்களை அதிகரித்தது மாத்திரமல்ல, ஜனாதிபதிக்கு  இருந்த இரு பதவிக்கால வரையறையையும் இல்லாமல் செய்து ஜனாதிபதி ஆட்சிமுறையை மேலும் வலுப்படுத்தியதையே கண்டோம்.

   மூன்றாவது பதவிக்காலத்துக்கு மகிந்த மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக 2015 ஜனவரியில் தேர்தலை நடத்தியபோது அவரிடம் இருந்து வெளியேறி எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதே தனது பிரதான கடமை என்று வாக்குறுதியளித்தார்.ஆனால்,அவரது  ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்ட்ட புதிய அரசியலமைப்பு வரைவு செயன்முறைகளின்போது அவர் தலைமையிலான சுதந்திர கட்சி நாட்டின் ஐக்கியத்தையும்  சுயாதிபத்தியத்தையும்  பாதுகாப்பதற்கு ஜனாதிபதி ஆட்சிமுறை அவசியம் என்று யோசனை சமர்ப்பித்த விசித்திரத்தையும்  காணக்கூடியதாக இருந்தது. 

   கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து ஒருபோதும் பேசியதில்லை.2020 பிற்பகுதியில் 20 வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்த அவர் முன்னைய ஜனாதிபதிகளையும் விட  பெருமளவு அதிகாரங்களை தன்வசமாக்கிக்கொண்டார்.அவரின் இரண்டரை வருட ஆட்சியே முன்னென்றும் இல்லாத அளவுக்கு ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரான மக்கள் கிளர்ந்தெழவைத்தது.

   தற்போதைய ஜனாதிபதி விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பது தொடர்பில் பெரிதாக அக்கறை காட்டிக்கொண்டதில்லை.அவர் போட்டியிட்ட இரு ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தல்களிலும் அதைப் பற்றி பேசியதில்லை. ராஜபக்சவுக்கு எதிராக  எதிரணியின் பொது வேட்பாளர்களை ஐ.தே.க.  ஆதரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்' அந்த ஒழிப்பு 'க்கு ஆதரவானவராக தன்னையும் ஒப்பாசாரத்துக்கு  அடையாளம் காட்டினாரே தவிர, உண்மையில்  அதை விரும்பியதில்லை.ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதியை நிறைவேற்றாத எந்தவொரு ஜனாதிபதிக்கும் எதிராக விக்கிரமசிங்க குற்றச்சாட்டை ஒருபோதும்  முன்வைத்ததில்லை.

  தற்போது விக்கிரமசிங்க மக்களால் அன்றி பாராளுமன்றத்தினால் தெரிவான நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் நிலையில் ஜனாதிபதி ஆட்சிமுறை பற்றிய அவரது நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது?

    கடந்தமாத முற்பகுதியில் பாராளுமன்றத்தில்  விக்கிரமசிங்க நிகழ்த்திய கொள்கை விளக்கவுரை அதை வெளிப்படுத்தியது.

   சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க  முன்வருமாறு  பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுத்த அவர் சகல கட்சிகளினதும் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபையையும் மக்கள் சபையையும் அமைப்பதற்கு உத்தேசித்திருப்பதாக கூறினார்.

   " ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டுமா இல்லையா? நாட்டுக்கு எந்த ஆட்சிமுறை பொருத்தமானது? ஆட்சிமுறையில் செய்யப்படவேண்டிய சீர்திருத்தங்கள் எவை? என்பது குறித்து ஆராய்ந்து கருத்தொருமிப்பைக் காண்பது மக்கள் சபையின் பொறுப்பாக இருக்கும்.

  " தேர்தல்களின்போது ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக வாக்குறுதி அளித்து பதவிக்கு வந்த எவரும் அதை நிறைவேற்றவில்லை. அதேவேளை ஒரு அரசாங்கம் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்தாலும் கூட, அடுத்து பதவிக்கு வரக்கூடிய அரசாங்கம் அதை மீண்டும் கொண்டுவரலாம்.அதனால் இது விடயத்தில் தேசிய கருத்தொருமிப்பு ஒன்று அவசியம்.எனவே  மக்கள் சபை போன்ற அமைப்பு  ஊடாக  அந்த கருத்தொருமிப்பை  காணவேண்டியது அவசியம்" என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

  அவ்வாறு கூறியதன் மூலம்  மக்கள் சபையின் ஊடாக  எடடப்படக்கூடிய கருத்தொருமிப்புக்கு பின்னரே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்த அரசியலமைப்பு  சீர்திருத்தங்களை முன்னெடுக்கமுடியும் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கிறது.

அவர் அந்த உரையை நிகழ்த்தி சரியாக ஒரு மாதம் கடந்துவிட்டது.சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி வெற்றிபெறுவதற்கான சாத்தியத்தை காணவில்லை.இதனிடையே மக்கள் சபை எங்கே வரப்போகிறது?அது எப்போது ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு குறித்து தேசிய கருத்தொருமிப்பைக் காணும் முயற்சிகளை முன்னெடுக்கப்போகிறது? 

  

மக்களின் குரலுக்கு மதிப்புக்கொடுத்து ஜனாதிபதி  ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டிய பொறுப்பில் இருந்து நழுவும்  தந்திரோபாயத்தையே விக்கிரமசிங்க கடைப்பிடிக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.அந்த ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு நாட்டு மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கின்ற அரசியல் சூழ்நிலை  தவறவிடப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி செயலாளரை சந்தித்த அமெரிக்க இராஜதந்திரிகள்

2023-05-27 22:30:22
news-image

சிறுவர்கள்  கடத்தல் : பின்னணியில் நடப்பது...

2023-05-26 16:41:31
news-image

அறகலய மீதான அவதூறுகள் 

2023-05-26 12:00:54
news-image

கொரோனாவை விட கொடூர தொற்று வரப்போகிறது!...

2023-05-25 14:51:14
news-image

குறைவடையப் போகும் வட்டி வீதங்கள் ?

2023-05-24 16:43:35
news-image

ராஜபக்ஷர்களின் இலக்கு : பிரதமர் பதவியா?...

2023-05-23 21:42:25
news-image

தேசிய நல்லிணக்கத்துக்கு இருதரப்பு கருத்தொருமிப்பு அவசரமானது,...

2023-05-22 22:08:35
news-image

சுமந்திரனின் பிரேரணையை வரவேற்கும் டிலான் எம்.பி.

2023-05-22 14:01:41
news-image

ரஷ்ய வைரம் வேண்டாம் !

2023-05-19 16:12:46
news-image

அரசியல் தீர்வு பேச்சுவார்த்தை : தேர்தலுக்கானதா?

2023-05-18 17:24:35
news-image

மக்களின் விருப்பமே 'மலையகம் 200 முத்திரை' 

2023-05-18 12:51:03
news-image

மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும் ராஜபக்ஷக்களின்...

2023-05-18 10:57:50