(எம்.ஆர்.எம்.வஸீம்)

விலைகுறைக்கப்பட்ட அத்தியாவசிய மருந்துபொருட்களின் விலை கட்டுப்பாட்டை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு  அதிகாரிகள் போதுமானதாக இல்லை. எனவே   புதிதாக அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுஇ

மருந்து பொருட்களின் விலை கட்டுப்பாட்டை மீறுவோர் தொடர்பாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு தற்போது சேவையில் இருக்கும் உணவு மற்றும் ஔடத பரிசோதகர்கள் போதுமானதாக இல்லை. அதனால் புதிதாக உணவு மற்றும் ஔடத பரிசோதகர்களை இணைத்துக்கொள்ள சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தீர்மானித்துள்ளார். அத்துடன் இதுதொடர்பாக அமைச்சரவைக்கு அனுமதிப்பத்திரம்  வழங்கவிருக்கின்றார்.

மேலும் அத்தியாவசிய மருந்துப்பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டவிரோதமாக மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை. அவ்வாறான செய்திகள் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டாலும் அது பொய்யாகும். அத்துடன் தொழிநுட்ப ரீதியிலான சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்படும்போது விலை கட்டுப்பாடு தானாகவே இடம் பெறும்.

அத்துடன் சுகாதார அமைச்சு 48வகையான மருந்து பொருட்களின் விலை குறைப்பு தொடர்பாக அறிவித்ததன் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்  முறைப்பாட்டு பிரிவுக்கு கடந்த சனிக்கிழமை வரை 150க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அது தொடர்பாக உணவு மற்றும் ஔடத பரிசோதகர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளைஇ விலை குறைக்கப்பட்ட மருந்துப்பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்யாத ஒசுசல மற்றும் மருந்தகங்களை மூடிவிடுவோம்.