(நா.தனுஜா)
நாடு மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அதிலிருந்து மீள்வதற்காக உரிய தருணத்தில் இந்திய அரசாங்கத்தினாலும் அந்நாட்டு மக்களாலும் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் தமது நன்றியை வெளிப்படுத்தியிருப்பதுடன் அதனைப் புலப்படுத்தும் வகையிலான விருதொன்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் வழங்கிவைக்கப்பட்டது.
அதனையடுத்து ஏற்புரையாற்றிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இராஜதந்திரியொருவர் பேசுவதற்கு வார்த்தைகளின்றி இருப்பது புதிது என்றும், இருப்பினும் தான் அந்த நிலையிலேயே இருப்பதாகவும் உணர்ச்சிப்பெருக்குடன் தெரிவித்தார்.
அதுமாத்திரமன்றி இலங்கையின் மூத்த சகோதரன் என்ற வகையில் இலங்கை கடினமான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் இந்தியா எப்போதும் உடன்நின்று ஆதரவு வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்களுக்கு உதவும் நோக்கில் எரிபொருள் கொள்வனவிற்கான கடனுதவித்திட்டம், உரக்கொள்வனவிற்கான கடனுதவித்திட்டம் உள்ளடங்கலாக இவ்வருடத்தில் மாத்திரம் இந்தியாவினால் சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமன்றி தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட 40,000 மெட்ரிக்தொன் அரிசி, 500 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் மருந்துப்பொருள் உதவிகள் கப்பல் மூலம் 3 கட்டங்களாக நாட்டை வந்தடைந்தன.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இந்திய அரசாங்கத்தினாலும் மக்களாலும் உரிய தருணத்தில் வழங்கப்பட்ட உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் நோக்கில் 'நன்றி இந்தியா' என்ற தலைப்பிலான நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே பங்கேற்றுக்கொண்டிருந்ததுடன், இலங்கை மக்களின் நன்றியை வெளிப்படுத்தும் வகையில் அவரிடம் விருதொன்றும் கையளிக்கப்பட்டது.
அதுமாத்திரமன்றி கலாநிதி கொஸ்கொட சிறி சுபுதி அனுநாயக்க தேரர், கலாநிதி எம்.விமலசார தேரர், பேராசிரியர் மல்லாவ ஹன்டி ஜகத் ரவீந்திர, கிமார்லி பெர்னாண்டோ, கலாநிதி வின்யா ஆரியரத்ன, நவீன் குணரத்ன, ஏ.பால்ராஜ், நயோமினி வீரசூரிய, மஹேந்திர அமரசூரிய, சுலோச்சன சேகர மற்றும் கே.ஆர்.ரவீந்திரன் ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகாலத்தொடர்புகள் குறித்தும், இந்தியாவினால் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட உதவிகளின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றியதுடன் அவற்றுக்காக இலங்கை மக்களின் சார்பில் மனபூர்வமான நன்றியையும் வெளிப்படுத்தினர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM