அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் ; முடிவுகள் சொல்லும் செய்திகள்

Published By: Priyatharshan

14 Nov, 2016 | 11:46 AM
image

சில மாதங்களுக்கு முன்பு வரை கொழும்பில் பணியாற்றிய இந்தியாவின் பிரபல ஆங்கிலத் தினசரியொன்றின் செய்தியாளரான நண்பர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முதல்நாளான கடந்த திங்கட்கிழமை முகநூலில் பதிவொன்றைச் செய்திருந்தார். ‘அபிப்பிராய வாக்கெடுப்புகள் பலவற்றில் டொனால்ட் ட்ரம்பை விடவும் ஹிலாரி கிளின்டனே முன்னணியில் நிற்பதாகத் தோன்றினாலும் மக்கள் செல்வாக்கில் இருவருக்கும் இடையிலான வெளி குறுகிக்கொண்டே வருகின்றது. 1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்களின் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால், ஹிலாரி வெற்றி  பெறுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். இருபதவிக் காலங்களுக்கு ஆட்சியிலிருந்து விட்டு  பதவிவிலகும்  ஜனாதிபதியொருவரின் கட்சியைச் சேர்ந்த  வேட்பாளர்  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஒரேயொரு தடவையே வெற்றிபெற்றதை கடந்த 68 வருடகாலத்தில் காண முடிந்தது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த றொனால்ட் றேகன்  இரு பதவிக் காலங்களுக்கு (1981 -­– 1989) ஜனாதிபதியாக இருந்த பிறகு 1988 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் அதே கட்சியின் வேட்பாளரான ஜோர்ஜ் புஷ் ஜனநாயகக்கட்சியின் வேட்பாளர் மைக்கேல் டுக்காகிஸை தோற்கடித்து ஜனாதிபதியானார். 1989 தொடக்கம் 1993 வரை அவர் பதவி வகித்தார்,' இதுவே அந்த முகநூல் பதிவாகும். 

1948 ஆம் ஆண்டுக்குப் பின்னரான அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றை  நண்பர் ஆராய்வுக்குட்படுத்தியதற்குக் காரணம் அந்த ஆண்டில் தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. மிகவும் குறிப்பாக, எவருமே இருபதவிக் காலங்களுக்கு (8 வருடங்கள்) மாத்திரமே ஜனாதிபதியாக இருக்க முடியும் என்ற எல்லைக்கோடு அப்போது வரையறை செய்யப்பட்டது. இறுதியாக இருபதவிக் காலங்களுக்கும் கூடுதலாக  (1933 தொடக்கம் 1945 வரை நான்கு பதவிக்காலங்களுக்கு) ஜனாதிபதியாக இருந்தவர்  பிராங்ளின் டி ருஸ்வோல்ட் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். 

அந்தப் பதிவுக்கு தங்களது பிரதிபலிப்பை வெளிப்படுத்திய முகநூல் நண்பர்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் காணப்படக் கூடியதாக இருக்கின்ற முன்னோடி நிகழ்வுகளையெல்லாம்  தலைகீழாக்கி (ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்த பராக் ஓபாமா இரு பதவிக் காலங்களுக்கு ஜனாதிபதியாக இருந்துவிட்ட போதிலும்), இத்தடவை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளின்டன் பெரு வெற்றிபெற்று அந்நாட்டின் முதன் முதலான பெண் ஜனாதிபதி என்ற சாதனையைப் படைப்பார் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தனர். ஹிலாரியின் வெற்றியை எவராலும், எதனாலும் தடுக்க முடியாது என்ற வகையிலான பொது அபிப்பிராயமே உலகெங்கும் காணப்பட்டது. தேர்தலுக்கு முதல் நாள் பெரும்பாலான அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பு முடிவுகள் கூட ஹிலாரி வெற்றி பெறுவதற்கு 70 சதவீதமான வாய்ப்புகள்  இருப்பதாகவே கூறியிருந்தன.  

ஆனால், எந்தவிதமான அரசியல் முன் அனுபவமும் இல்லாத குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் சகலவிதமான எதிர்பார்ப்புக்களையும் துவம்சம் செய்துகொண்டு அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு  செய்யப்பட்டிருக்கிறார். ஹிலாரி அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக மாத்திரமல்ல, அந்நாட்டின் ஜனாதிபதி பதவியை வகிக்கப்போகின்ற முதன் முதலான முன்னாள் முதல் பெண்மணியாகவும் வரலாறு படைக்கப் போகிறார் என்றெல்லாம் செய்யப்பட்ட வர்ணனைகளை றியல் எஸ்டேட் தொழிலதிபரும் முன்னாள் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ட்ரம்ப் அர்த்தமற்றவையாக்கிவிட்டார். 

ஹிலாரியைப் போன்று அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கு தகுதியுடைய வேறு எவரும் இருந்ததில்லை என்று கூட ஜனாதிபதி பராக் ஒபாமா பிரசாரங்களின் போது தனது நாட்டு மக்களுக்குக் கூறினார். அத்தகைய ஹிலாரியை முன்னர் எந்தவொரு அரசியல் பதவியையும் வகிக்காத, இராணுவத்தில் பணியாற்றி அனுபவத்தைக் கூடக் கொண்டிராத, பொது விவகாரங்கள் பற்றியோ அல்லது உலக விவகாரங்கள் பற்றியோ அறிவைக் கொண்டிராத,  தான்தோன்றித்தனமாகப் பேசுகின்ற ஒரு பேர்வழி தோற்கடித்திருக்கிறார் என்பது பலரையும் தடுமாற வைத்திருக்கிறது. 

உலக நாடுகளின் தலைவர்கள் பெரும்பாலும் ஹிலாரி வெற்றி பெறுவதையே விரும்பியிருந்தார்கள். பொது அரங்கில் முறையாகப் பேசவே தெரியாத ஒருவர் உலகில் மிகவும் வல்லமை பொருந்திய பதவிக்கு வந்தால் ஏற்படக் கூடிய விபரீதங்கள் குறித்து அவர்கள் அஞ்சினார்கள்.  ஆனால், அமெரிக்கர்கள் அவரையே தங்களது அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்திருக்கிறார்கள். ஹிலாரியை  வெற்றி பெறவைத்து அவரை தங்களது நாட்டின்  முதல் பெண் ஜனாதிபதியாக அழகு பார்ப்பது குறித்து அமெரிக்கர்கள் பெரிதாக அக்கறைப்படவில்லை. 

ஹிலாரியை வெளியுலகம் விரும்பியிருந்தாலும், அமெரிக்கர்களைப் பொறுத்தவரை அவர் தனது கணவர் பில் கிளின்டன் இரு பதவிக் காலங்களுக்கு ஜனாதிபதியாக இருந்தபோது (1993 - 2002) வெள்ளை மாளிகையில் வாசஞ்செய்தவர். 2008 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு பராக் ஒபாமாவுடன் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர். பிறகு அதே ஒபாமாவின் முதல் நிருவாகத்தில் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர். அவரை  அமெரிக்கர்களினால் புதிய ஒருவராகப் பார்க்க முடியவில்லை என்பதை அவரை விரும்புகின்ற வெளியுலத்தவர்களினால் புரிந்துகொள்ளமுடியவில்லை. ஹிலாரி பதவிக்கு வந்தால் அது ஒபாமா நிருவாகத்தின் மரபின் தொடர்ச்சியாகவே இருக்கும் என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கருதினார்கள். அத்துடன்  உள்நாட்டு விவகாரக் கொள்கைகளிலும்  சரி, சர்வதேச விவகாரக் கொள்கைகளிலும் சரி ஒபாமா நிருவாகத்தின்  தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் விலையைச் செலுத்த வேண்டிய பொறுப்பு ஹிலாரி மீதே இத்தடவை தேர்தலில் விழுந்துவிட்டது. வெள்ளை மாளிகை  நோக்கிய அவரின் பயணம் முடிவுக்கு வந்துவிட்டது.

தங்களது நலன்களைப்பற்றி அக்கறைப்படாத அரசியல் அதிகார வர்க்கத்ததைப் பிரதிநிதித்துப்படுத்துபவராக ஹிலாரியை வெள்ளையின தொழிலாளர் வர்க்க வாக்காளர்கள் நோக்கினார்கள். அவர்கள் மத்தியில் நிலவிய பாதுகாப்பின்மை உணர்வுகளை ட்ரம்ப் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

அமெரிக்கர்களின் வாழ்வில் மாத்திரமல்ல, உலகம் பூராகவுமுள்ள மக்களின் வாழ்விலும் அமெரிக்காவின் எதிர்கால ஜனாதிபதி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்பதால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்கள் எப்போதுமே அக்கறையுடன் முழு உலகினாலும் நோக்கப்படுபவையாகும். முன்னரைக் காட்டிலும் அமெரிக்கா பொருளாதார ரீதியில் பலமிழந்து விட்டபோதிலும், உலகம்பூராகவும் குறிப்பாக மேற்காசியாவில் கடுமையாக அதிகரித்திருக்கும் அமெரிக்க விரோத உணர்வுகளின் விளைவாக அமெரிக்க மேலாதிக்கம் சவாலை எதிர்நோக்குகின்ற போதிலும், இன்னமும் கூட, அந்நாட்டின் தேர்தல் உலகில் முக்கியமானதாகவே இருக்கிறது. உலகப் பொருளாதாரம் நலமார்ந்ததாக இல்லாதிருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை, மத்திய கிழக்கு ஒரே குழப்பகரமானதாக மாறியிருக்கும் நிலையில் அடுத்த அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு நிலைவரங்களைக் கையாளப்போகிறார் என்பது முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஆனால், கடந்த ஒரு வருடமாக தேர்தல் பிரசாரங்களின் போது டொனால்ட் ட்ரம்ப் கூறிய விடயங்களையும் , அவர் விடுத்த அச்சுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் நோக்கும்போது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் படுமோசமான  புதியதொரு  கட்டத்தின் தொடக்கத்துக்கு உலகம் முகம் கொடுக்க வேண்டிவருமோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. 

டொனால்ட் ட்ரம்ப் தனது வர்த்தகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவாரேயானால், பல தசாப்தங்களாக உலகின் ஏனைய பகுதிகளுடன் அமெரிக்கா வர்த்தகத்தைச் செய்து வந்த முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. பல நாடுகளுடன் அமெரிக்கா செய்திருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ரத்துச் செய்ய போவதாக அச்சுறுத்திய அவர் உலக வர்த்தக நிறுவனத்தில் இருந்து (WTO) அமெரிக்கா விலக வேண்டுமென்ற யோசனையையும் முன்வைத்திருந்தார். காலநிலை மாற்றத்தினால் ஏற்படுகின்ற அச்சுறுத்தல் என்பது சீனாவின் ஒரு கேலிக்கூத்து என்று கூறிய அவர் 2015 டிசம்பரில்  195க்கும் அதிகமான நாடுகள் கைச்சாத்திட்ட பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையை ‘ரத்துச்’ செய்யப் போவதாகவும் எச்சரிக்கை செய்தார். உண்மையிலேயே தனியொரு நாட்டினால் அந்த உடன்படிக்கையை ரத்துச் செய்ய முடியாது என்பதைக் கூட அவர் அறிந்திருக்கவில்லை. புவி வெப்ப நிலை அதிகரிப்பைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளின் செயற்திட்டங்களுக்கு அமெரிக்கா செய்கின்ற கொடுப்பனவுகளை நிறுத்தப் போவதாகவும் ட்ரம்ப் கூறினார். 

மெக்சிக்கோவுடனான அமெரிக்க எல்லையோரம் மதிலைக் கட்டப் போவதாகவும் அதற்கான செலவை மெக்சிக்கோவைக் கொண்டே செலுத்தச் செய்யப்  போவதாகவும் கூறிக்கொண்டு தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்த அவர், அமெரிக்காவில் தொடர்ந்தும் இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமையைக் கொண்டிராத குடியேற்றவாசிகளை (Undocumented immigrants) நாடு கடத்தப்போவதாக எச்சரிக்கை செய்தார். முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் பிரவேசிப்பதை  முற்று முழுதாகத் தடுக்கப் போவதாக சூளுரைத்த ட்ரம்ப் பின்னர், அது ஒரு கொள்கையல்ல யோசனையே என்று தளர்வைச் செய்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது. குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து  வருபவர்களைக் கடுமையாகச் சோதித்துச் சல்லடை போடப் போவதாகக்  கூறினார் என்றபோதிலும் நாடுகளின் பெயர்களை குறிப்பிடுவதை அவர் தவிர்த்து கொண்டார். வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பை (North Atlantic Treaty organization – NATO) பழமைப்பட்டுப்போன ஒன்று என்று வர்ணித்த அவர் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்ற நாடுகளை அமெரிக்காவின் தாராள மனப்பான்மையிலிருந்து பயனடைகின்ற நன்றி கெட்ட நாடுகள் என்று வர்ணித்தார். மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களை குண்டு வீசி நாசஞ் செய்யப் போவதாகவும் அவர் எச்சரிக்கை செய்தார். 

ஆசிய நாடுகள் அவற்றின் பிரச்சினைகளை தங்களுக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்படும். அவ்விரு நாடுகளும்  தங்கள் பாதுகாப்புக்காக அணுவாயுதங்களைத் தயாரித்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இவ்வாறு டொனால்ட் ட்ரம்ப் கிறுக்குத்தனமாக கூறிய விடயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சென். பீற்றர்ஸ் பேர்க் நகரில் இருந்து வெளியாகும் ‘ரம்பா பே ரைம்ஸ்’ என்ற பத்திரிகை அமெரிக்க அரசியல்வாதிகளினால் பேசப்படுகின்ற விடயங்களில் உள்ள உண்மை, பொய்களைக் கண்டறிவதற்காக Politifact.com  என்ற இணையத்தளத்தை செயற்படுத்துகிறது. இது டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரசார காலத்தில் விடுத்த அறிக்கைகளை ஆராய்ந்து அவற்றில் 70 சதவீதமானவை பொய்கள் என்றும் 17 சதவீதமானவை எந்த வகையிலும் கணக்கெடுக்க முடியாத  அபத்தங்கள் என்றும் கண்டறிந்து அம்பலப்படுத்தியிருக்கிறது.

 'நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதானால், குடியரசுக்கட்சியின்  வேட்பளாராகவே  களமிறங்குவேன்.  அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகவும் முட்டாள்தனமான  வாக்காளர் தொகுதியென்றால்்  அது குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் தான். FOX NEWS இல் வருகின்ற  எதையும் அவர்கள் நம்புகிறார்கள். நான் கூறக்கூடிய பொய் களை அவரகள் எந்த  யோசனையுமின்றி  ஏற்றுக் கொள்வார்கள்.   எனக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளின் எண்ணிக்கை திகிலுாட்டக் கூடியதாக இருக்கும். இது விடயத்தில் நான் பந்தயம் பிடிக்கத் தயார் ' என்று டொனால்ட் ட்ரம்ப் People  magazine இல் 18 வருடங்களுக்கு முன்னேரே  கூறியிருந்தார்  என்பது கவனிக்கத்தக்கது. 

இது இவ்வாறிருக்க, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றியையும் பிரிட்டனில் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமென்ற நிலைப்பாட்டுக்கு (Brexit) கிடைத்த வெற்றியையும்  ஒப்பிடுகின்றவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான உணர்வினைக் கொண்டவர்கள். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவது உறுதியாகிக் கொண்டிருந்தபோது, அவருக்கு முதலில் பாராட்டுத் தெரிவித்து அறிக்கை விடுத்தவர்களில் பிரான்ஸில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கைகளை முன்னிலைப்படுத்துகின்ற தீவிர வலதுசாரி தேசிய முன்னணி கட்சியின்  தலைவியான மரைன் லீ பென்னும் பிரிட்டனில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்ட ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி  (UKIP) யின் தலைவரான நைஜல் பாரேஜூம் முக்கியமானவர்கள். தென் கிழக்கு லண்டனுக்கான ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் பாரேஜ்  கடந்த  ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா சென்று டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தவர். ட்ரம்ப் வாய்ப்புத் தருவாரேயானால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அவரின் தூதுவராக புரூசெல்ஸ் நகரில்  இருந்து பணியாற்றத் தயாராயிருப்பதாக பாரெஜ்  கடந்த வாரம்  பகிடியாக கூறியிருந்தார்.  என்பது குறிப்பிடத்தக்கது.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று சர்வஜன வாக்கெடுப்பின் போது பிரசாரம் செய்த தீவிர   வலது சாரிகள் '  Take back Control  '  என்ற சுலோகத்தை முன்னிலைப்படுத்தினார்கள். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் "Make America Great Again '  என்ற சுலோகத்தை  முன்வைத்தார். இரு சுலோகங்களுமே வெளியாரின் செல்வாக்கு அதிகரிப்பை (இங்கு குடியேற்ற வாசிகளை குறிப்பதாகும்) தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில்  அமைந்தன.

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் குடியேற்றவாசிகளுக்கும்  சிறுபான்மையினத்தவர்களுக்கும் எதிரான உணர்வலைகள் பெருகுவதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. வெளிநாட்டவர்கள் பற்றிய பீதி கிளப்பப்படுகிறது ட்ரம்பின் வெற்றியையடுத்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த பிரான்ஸின் தேசிய முன்னணி கட்சியின் பிரதித் தலைவர் ஒருவர் ‘இன்று அமெரிக்கா, நாளை பிரான்ஸ்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

டொனால்ட் ட்ரம்பைப் பொறுத்தவரை குடியேற்றவாசிகளுக்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கும் குறிப்பாக கறுப்பினத்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கொள்கைகளை மாத்திரம் கொண்டவரல்ல. அவர் பெண்களுக்கு எதிராக அமெரிக்காவில் நிலவுகின்ற  ஆணாதிக்கப் போக்கைப் பிரதிபலிப்பவராகவும் கூட விளங்குகிறார். பெண்களைப் பற்றி தேர்தல் பிரசாரங்களின் போதும் தொலைக்காட்சி  விவாதங்களிலும் அவர் வெளியிட்ட படுமோசமான அருவருக்கத்தக்க கருத்துக்களை இங்கு விபரிக்க இடம் காணாது. 

தனது முன்னாள் மனைவிகளில் ஒருவருடனான  வாழ்வில்  தனக்கு பிறந்த இவங்கா என்ற 35 வயதான ெமாடல் அழகி தனது மகளாக இல்லாதிருந்தால் அவளைக்  கட்டியணைத்து காதலித்திருப்பேன் என்று 70 வயதான ட்ரம்ப் அண்மையில் கூறியிருந்தார். இது அவர் பெண்கள் பற்றியும் பெண்களுடனான தொடர்புகளைப் பற்றியும் எத்தகைய கண்ணியமற்ற அணுகுமுறைகளைக் கொண்டவர் என்பதைப் புலப்படுத்துகிறது. 

இதனிடையே, ஜனாதிபதி தேர்தலில்  ட்ரம்பின் வெற்றிக்கு எதிராக அமெரிக்காவின் 25க்கு அதிகமான நகரங்களில் கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மக்கள் வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்தியதையும் காணக்கூடியதாக இருந்தது. குடியயேற்றவாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தேர்தல் பிரசார காலத்தில் அவர் வெளியிட்ட  இன, மத வெறித்தனமான கருத்துக்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகக் கண்டனம் செய்து, ‘இன வெறுப்பு அரசியல் இனிமேலும் வேண்டாம். ட்ரம்ப் எமது ஜனாதிபதியல்ல’ என்ற சுலோகங்களை எழுப்பிய வண்ணம் காணப்பட்டனர். இது இத்தடவை தேர்தல் அமெரிக்க அரசியலையும் சமுதாயத்தையும் கடுமையாகப் பிளவுபடுத்தியிருப்பதன் தெளிவான  வெளிப்பாடாகும். இத் தேர்தல் அமெரிக்க  அரசிய.ைலயும் சமுதாயத்தையும் முன்னர் ஒரு போது இல்லாத வகையில் துருவமயப்படுத்தியுள்ளது.   

நாட்டில் சமூகங்களிடையில் தேசிய வாத  உணர்வுகளின் அடிப்படையில் வெறுப்புணர்வையும் பிளவுகளையும் ஏற்படுத்துவது சுலபம். ஆனால், அவற்றை இல்லாமல் செய்வதென்பது மிகமிகக் கடினமானது. தாராண்மைவாதப் போக்கை கொண்ட அமெரிக்கர்கள், கறுப்பு இனத்தவர்கள், ஸ்பானிய மொழி பேசும் அமெரிக்கர்கள், குடியேற்ற வாசிகள் மற்றும் பெண்ணிய வாதிகள் ட்ரம்பின்  தலைமைத்துவத்தின் கீழான அமெரிக்கா குறித்து அச்சம் கொண்டுள்ளார்கள். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ட்ரம்பின் இல்லாமியப் பீதி உணர்வு ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்து முஸ்ஸிம்  உலகம் கவலை கொண்டிருக்கிறது.

தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு ட்ரம்ப் ‘சகல அமெரிக்கர்களுக்காகவும் பணியாற்றுவேன்’ என்று பிரகடனம் செய்தபோதிலும் கூட, இரவோடிரவாக அவர் மாறிவிடுவார் என்று எவர்தான் நம்பப்போகிறார். 

பிரிட்டனின் பிரபல  சரித்திரவியலாளர் சைமன் ஷாமா அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியான உடனடியாக கருத்துத் தெரிவிக்கையில் ‘உண்மையில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு ஹிட்லர் அல்ல.  பாசிசத்தில் பலவகைகள் உண்டு. இவரை ஒரு நாஜி என்று நான் கூறவில்லை. ஆனால், நவநாஜிகள் அவரின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னார்.  ஏன் இலங்கையிலும்  சிறுபான்மையினங்களின் நியாயபூர்வமான அரசியல்  அபிலாசைகளை ஏற்றுக்கொள்ளாத கடும் போக்கு சிங்கள அரசியல் சக்திகள் ட்ரம்பின் வெற்றியைப் பெரிதும் கொண்டாடுகின்றன. 

தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பேராசிரியர்  அ. மார்க்ஸ் தனது முக நூல் பதிவொன்றில்  பின்வருமாறு கூறியிருக்கிறார்.;

அமெரிக்கத் தேர்தல் முடிவு இப்படியாகும் என எதிர்பார்க்கவில்லை. சரியாகச் சொல்வதானால் இப்படி ஆகவே ஆகாது என்றும் நினைக்கவில்லை. 

அப்பட்டமான இனவாதம், முஸ்லிம் வெறுப்பு, புலம் பெயர்ந்து வந்து வாழ நேர்ந்தவர்கள் மீதான காழ்ப்பு ஆகியவற்றை அடிப்படை நாகரிகமும், நாசூக்கும்  இல்லாமல் பேசியவர்கள்  வெற்றி பெறும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது பற்றிய பிரக்ஞையை இந்தத் தேர்தல் முடிவு   நமக்கு உருவாக்கியுள்ளது. எதிர்காலம் குறித்த எண்ணற்ற கேள்விகளை இந்த தேர்தல் முடிவு நம்மிடம்  உசுப்பியுள்ளது. வெறுப்பு, வெறுப்பு ..மற்றவர்கள் மீதான வெறுப்பு..... இனி அதுதான் உலகின் விதியா? 

மக்களை இப்படித் துருவங்களாகப் பிரித்து எதிர் எதிராக நிறுத்துவதுதான் இனி அரசியலாக அமையுமா?

அமெரிக்கச் சமூகம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டுள்ள இச்சூழலில், அதனால் விளையும் மக்களின் அதிருப்தியும் ஆத்திரமும்  இனி உலகெங்கிலும்  இப்படி மற்றவை மீதான வெறுப்பு என்பதாக மடை மாற்றப்படுவதுதான் அரசியலாக அமையப் போகிறதா? வன்முறை, வெறிப்பேச்சுக்கள் ஆகியவற்றின்  முன் இன்னொருபக்கம் பலமிழந்தவர்கள், இனி யார் வந்தாலும் எதிர்காலம் நமக்கு இப்படித்தான் என நம்பிக்கை இழந்து ஒடுங்குவது என்பதாகத்தான் வரலாறு அமையப் போகிறதா?

பத்தாண்டுகளுக்கு முன் ஒபாமா வென்றபோது  அவர் எதையும் பெரிதாகப் பிடுங்கப் போவதில்லை என்பதை அறிந்திருந்தாலும், முதன்  முதலாக ஒரு கறுப்பினப் பாரம்பரியத்தில் வந்த ஒருவர் பெற்ற வெற்றி என அது நமக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் ஆறுதல் அளித்தது. ஆனால் இன்று….!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48