நல்லாட்சியிலும் பொதுஜன பெரமுன ஆட்சியிலும் எத்தனை வீடுகள் தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டன ? - தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள்

Published By: Digital Desk 5

28 Aug, 2022 | 04:02 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

நல்லாட்சி என்று கூறப்பட்ட 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதி வரையான காலப்பகுதியில் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தனி வீட்டுத்திட்டங்கள் தொடர்பில் இன்னும் பல சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. 

நல்லாட்சி காலமானது தனது பாராளுமன்ற காலத்தை முழுமையாக பூர்த்தி செய்ய சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. கூறப்போனால் 2018 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஆரம்பித்த அரசியல் நெருக்கடிகள் காரணமாக, 2019 ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியிலிருந்து அபிவிருத்தி பணிகள் ஸ்தம்பித்தன அல்லது முழுமையாக கைவிடப்பட்டன.

எனினும் நான்கு ஆண்டு காலப்பகுதியில் மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தின் நிதி மற்றும் இந்திய அரசாங்கத்தின் நிதியூடாக தனி வீட்டுத்திட்டங்கள் கிராமங்களாக உருவாகின. 

இந்த வீட்டுத்திட்டங்கள் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரத்தால் முன்னெடுக்கப்பட்டன. 

எனினும் இந்த வீடுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையான வீடுகளே முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டிருந்தன. 

இங்கு முழுமையாக பூர்த்தி செய்யப்படல் என்பது குடியிருப்பு, பாதை, குடிநீர் வசதி, மின்சாரம் போன்றனவாகும். 

மிகுதியானவற்றில் வீடுகள் மாத்திரமே பூர்த்தியடைந்திருந்த அதே வேளை ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்பதாக நல்லாட்சி அரசாங்கள் முடிவுக்கு வந்தது. இவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்யப்படாத வீடுகளில் இந்திய வீடமைப்புத் திட்டங்களும் அடங்கியிருந்தன.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு புதிதாக என்ன வீட்டுத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது, அவற்றில் எத்தனை வீடுகள் கட்டப்பட்டன, அதே வேளை நல்லாட்சி காலத்தில் எத்தனை வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன, ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு ,நல்லாட்சி காலத்தில் எத்தனை வீடுகள் அமைக்கப்பட்டன போன்ற விடயங்களை நாம் அப்போதைய தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சிடம் கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் கேட்டிருந்தோம். 

இராஜாங்க அமைச்சராக அப்போது விளங்கியவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான்.

எமது விண்ணப்பத்துக்கான முழுமையான பதில்கள் எமக்கு இவ்வருடத்தின் மார்ச் மாதமளவிலேயே கிடைத்தன. 

அதன் அடிப்படையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2022 முதற்காலாண்டு வரையான காலப்பகுதிகளில் பெருந்தோட்டப்பகுதி வீடமைப்பு தொடர்பில் எமக்கு சில தகவல்களை பெறக்கூடியதாக இருந்தது.தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பின்வரும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

1) நல்லாட்சி காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வீடுகள் எத்தனை?

2) குறித்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் எத்தனை?

3) பெருந்தோட்டப்பகுதிகளில் குறித்த காலத்தில் மொத்தமாக அமைக்கப்பட்ட வீடுகள் எத்தனை?

4) அதிக வீட்டுத்திட்டங்களைக்கொண்ட மாவட்டம் எது?

5) பொதுஜன பெரமுன அரசாங்கத்தினால் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் எத்தனை? அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

6) பொதுஜன பெரமுன அரசாங்கத்தால் 10 பேர்ச் காணியில் வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா? அப்படியாயின் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?

7) இத்திட்டத்தின் மூலம் எத்தனை வீடுகள் இது வரை அமைக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சியில் மொத்தமாக 6883 வீடுகள் எமக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நல்லாட்சி காலத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி பங்களிப்பில் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 3576 ஆகும். இதில் 2877 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. 699 வீடுகள் மாத்திரமே குறித்த வசதிகளுடன் பூர்த்தியாக்கப்பட்டிருந்தன. 

இந்திய வீட்டுத்திட்ட கட்டுமான பொறுப்புகள் மற்றும் வீடுகளை பூர்த்தி செய்யும் பணிகளை இந்திய அரசாங்கம் ஏற்பதென்றும் ,கட்டமைப்பு வசதிகளான நீர் ,மின்சாரம் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்கும் என்றே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

அதே வேளை இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களில் 3307 வீடுகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

அதன் படி மலையக பெருந்தோட்டப்பிரதேசங்களில் மொத்தமாக 6883 வீடுகள் கடந்த நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அதிக வீட்டுத்திட்டங்களைக் கொண்ட மாவட்டமாக நுவரெலியா விளங்ககின்றது.

பொதுஜன பெரமுன ஆட்சி காலத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் புதிய வீட்டுத்திட்டங்களுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவை மட்டுப்படுத்தப்பட்டனவாகவே இருந்தன. 

மிக முக்கியமாக நல்லாட்சி காலத்தில் அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்புத்திட்டத்தில் மின்சாரம் மற்றும் குடி நீர் வசதிகள் பூர்த்தி செய்யப்படாத வீடுகளை அடையாளம் கண்டு அவற்றை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் சவால்களே முன்னின்றன. 

ஏனெனில் வீட்டுத்திட்டங்களை இந்தியா பூர்த்தி செய்திருந்தாலும் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசாங்கமே செய்ய வேண்டியிருந்தது. 

அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட வீடுகளே இந்த அரசாங்கத்தில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டிருந்தன. அவ்வாறான வீடுகள் 19 என தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதே வேளை கூரைகள் பூர்த்தி செய்யப்பட்ட வீடுகள் 56 என்றும் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு 1143.42 மில்லியன் ரூபாய்கள் என்று தகவல் வழங்கப்பட்டுள்ளது.

10 பேர்ச் காணியில் ஆரம்பிக்கப்பட்ட வீடுகள் 

நல்லாட்சி காலத்தில் 7 பேர்ச் காணியில் தனி வீடுகள் அமைக்கப்பட்டன. இது குடியிருப்பாளர்களுக்குப் போதாது என அப்போது இ.தொ.காவின் தலைவரும் செயலாளருமான அமரர் ஆறுமுகன் தொண்டமான் கூறியிருந்தார். 

தாம் அதிகாரத்துக்கு வரும் போது வீட்டுத்திட்டங்கள் அனைத்தும் 20 பேர்ச் நிலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

எனினும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக விளங்கிய அவரது மகன் ஜீவன் தொண்டமான் 20 பேர்ச் நிலத்தில் சிலப் வைத்த வீடுகளே அமைக்கப்படும் என்று மேலதிகமான ஒரு விடயத்தை கூறியிருந்தார்.

எனினும் 7 பேர்ச் காணிக்கு மேலதிகமாக 3 பேர்ச்சை அங்கீகரித்து 10 பேர்ச் நிலத்துக்கே அப்போது அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. சிலப் வைத்த வீடுகள் பற்றிய தகவல்கள் இல்லை.

இந்நிலையில் அவ்வாறு 10 பேர்ச் காணியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளனவா எத்தனை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன, அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்ற எமது கேள்விக்கு பின்வருமாறு பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.

10 பேர்ச் காணியில் வீடுகளை அமைக்க 912.27 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 592 வீடுகள் செயற்பாட்டில் உள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியாயின் குறித்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதா அல்லது பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டனவா, இடங்கள் தெரிவு செய்யப்பட்டு 10 பேர்ச் காணி அளவீடு செய்யப்பட்டதா போன்ற விளக்கங்கள் இல்லை. 

அப்படியானால் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் புதிதாக எந்த வீட்டுத்திட்டங்களும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவில்லையெனத் தெரிகின்றது.

ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விளக்கங்களும் தேவை. ஏனெனில் செயற்பாட்டில் அல்லது நடைமுறையில் உள்ள திட்டங்கள் என்றால் அதில் பல கட்டங்கள் உள்ளன. 

வீடுகளுக்கான இடம் அடையாளம் காணல் அதற்கான அனுமதி பெறல், அளவீடு செய்தல், கட்டிட ஆராய்ச்சி நிறுவன அறிக்கைகளைப் பெறல் என இது பல விடயங்களை உள்ளடக்கியதாகும். ஆகவே செயற்பாட்டில் அல்லது நடைமுறையில் உள்ள திட்டம் என்பதற்கும் விளக்கங்கள் தேவைப்படுகின்றன.

தற்போது மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்ற அமைச்சுக்களும் இல்லை. அவ்வாறு வழங்கும் பட்சத்தில் பெருந்தோட்டப்பகுதி வீடமைப்பு திட்டம் அது சார்ந்த பொறிமுறைகள் பற்றிய செயற்பாடுகளுக்கு ஒரு அமைச்சு அவசியம். 

அதுவும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள ஒரு அமைச்சு கிடைத்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். அப்படி இல்லாவிடின் நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது தமிழ் முற்போக்குக் கூட்டணியினரால் உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபையை வலுப்படுத்துவதன் மூலம் அதனூடாக எவருடைய தலையீடும் இன்றி இவ்வீட்டுத் திட்டங்களை முன்னெடுக்கலாம். 

அதிகார சபைக்கு நிதி ஒதுக்கீட்டை செய்வதன் மூலம் அநாவசிய அரசியல் தலையீடுகளை தவிர்க்கலாம். ஏனென்றால் மலையக அதிகார சபையான இந்த சமூகத்துக்கென்றே உருவாக்கப்பட்டதொன்று. 

மலைய சமூகத்தின் வீட்டுத் திட்டங்கள் மாத்திரமின்றி சகல உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய நலன் பேணும் திட்டங்களை இதன் மூலம் முன்னெடுக்க முடியும். தற்போதைய ஜனாதிபதியும் இது குறித்த அக்கறையை கொண்டிருப்பார் என்று நம்பலாம். 

மலையக பெருந்தோட்ட  மக்களின் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு வருமா என பொறுத்திருந்து பார்த்தல் வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்