இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

முதல் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 537, இந்தியா 488 ஓட்டங்களை எடுத்தன. நான்காம் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 114 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

அலெஸ்டர் குக் (46), ஹசன் ஹமீது (62) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இன்று இறுதி மற்றும் ஐந்தாவது நாள் ஆட்டம் நடந்தது. குக், ஹமீது ஜோடி நிலையான ஆட்டத்தை தொடர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 180 ஓட்டங்களை சேர்த்தபோது, மிஸ்ரா 'சுழலில்' ஹமீது (82) சிக்கினார். பின் வந்த ஜோ ரூட் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 

சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த குக், டெஸ்ட் அரங்கில் 30ஆவது சதத்தை பெற்றார். இவர் அஷ்வின் 'சுழலில்' 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

 உணவு இடைவேளைக்குப்பின், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 260 ஓட்டங்களை எடுத்திருந்தபோது, ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. ஸ்டோக்ஸ் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 இதனையடுத்து, 310 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது.

கம்பிர் எவ்வித ஓட்டங்களும் பெறாது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ரஷித் 'சுழலில்' புஜாரா (18) சிக்கினார். முரளி விஜய் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரகானே (1) ஏமாற்றினார்.

 பின்னர் இணைந்த, கோஹ்லி, அஷ்வின் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. அஷ்வின் 32 ஓட்டங்களில் அரங்கு திரும்பினார். ரஷித் பந்தில் சகா (9) சிக்கினார். 

ஆட்ட நேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 172 ஓட்டங்களை எடுத்திருந்தது. கோஹ்லி (49), ஜடேஜா (32) ஆட்டமிழக்காமல் இருந்தனர்,

இதனையடுத்து போட்டி சமநிலையில் முடிவடைந்த.  இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி எதிர்வரும் 17ஆம் விசாகப்பட்டனத்தில் ஆரம்பமாகின்றது.