கட்சியரசியலுக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்த் தேசியம்

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 03:34 PM
image

சி.அ.யோதிலிங்கம்

தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லாத நிலையில், இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் சிக்குண்டிருக்கும் காரணியைப் பார்க்கலாம்.

தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலும் ஒரேநேர்கோட்டில் செல்வது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தேசவிடுதலைப் போராட்ட அரசியல் தேக்க நிலைக்கு செல்லும். நீர்த்துப்போகும் நிலை உருவாகும். இதனால் ஒடுக்குமுறையாளர்கள் எப்போதும் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் போராட்டத்தை முடக்கவே முனைவர். நேபாளத்தில் மாவோஜிஸ்டுகளின் போராட்டம், ஈழத்தமிழர்கள் போராட்டம், ஜே.வி.பியின் போராட்டம் என்பன இதற்கு நல்ல உதாரணங்களாகின்றன. 

தமிழர் போராட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்த்தேசிய அரசியலை முதன்முதலாக முன்னெடுத்த அமைப்பு தமிழரசுக் கட்சி தான். 1947ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி யாப்பும், அதனைத்தொடர்ந்து வந்த 1948 இன் சுதந்திரமும் இலங்கைத்தீவின் ஆட்சி அதிகாரத்தை பெரும்பான்மை ஜனநாயகம் என்ற பெயரில் சிங்கள தேசத்திடம் ஒப்படைத்தது. தமிழ் மக்கள் ஆட்சி அதிகாரக்கட்டமைப்பிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். 

இந்நிலையில் தான் தந்தை செல்வா அதுவரை கால தமிழ்த்தரப்பின் சமவாய்ப்பு அரசியலைக்கைவிட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழர் தாயகமாக வரையறுத்து அதற்கு அதிகாரத்தைக் கோருகின்ற சமஷ்டி அரசியலை முன்னெடுத்தார். தாயகம் வரையறுக்கப்பட்டவுடன் தமிழ்த்தேசியம் தானாக வளர்ந்தது. தந்தை செல்வா மனுக்கள் வழங்குதல், சட்ட மன்றத்தில் பேசுதல் என்கின்ற தமிழர் அரசியல் வழிமுறைகளை மக்களை இணைத்த போராட்ட அரசியலாக மாற்றினர். 

எனினும் தந்தை செல்வாவின் பாதை தேர்தல் மையக்கட்சி அரசியலாகவே இருந்தது. இதனால் ஆரம்பத்தில் போராட்டங்களை நடாத்தினாலும் அவற்றைத் தொடர முடியவில்லை. தமிழரசுக்கட்சியின் பொற்காலம் என்பது 1956 தொடக்கம் 1961 வரையான 5 வருட காலப்பகுதி தான். 

இக்காலப்பகுதிக்குள் தான் காலி முகத்திடல் சக்தியாக்கிரகப்போராட்டம் (1956), திருமலை யாத்திரை (1956), சிங்கள ஸ்ரீ எதிர்ப்பு போராட்டங்கள் (1957 – 1958), மாவட்ட அரசாங்க செயலகங்கள் முன்னால் சத்தியாக்கிரக போராட்டம் (1961) என்பன இடம்பெற்றன. இதற்கு பின்னர் மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் என எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

கட்சி அரசியலினால் தேசிய விடுதலைக்போராட்டத்தை முன்னெடுக்க முடியாது எனக் கருதிய இளைஞர்கள் கட்சி அரசியலுக்கு வெளியே விடுதலை இயக்கங்களை கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆயுதப்போராட்ட வரலாறு இப்படித்தான் பரிணமித்தது.

தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலின் பிரதான நோக்கம் தேர்தலும், கதிரைகளும் தான். தேச விடுதலைப்போராட்டம் எல்லாம் அதற்கு இரண்டாம் பட்சமானவை. இலங்கையைப் பொறுத்தவரை நான்கு வகையான தேர்தல்கள் உள்ளன. போதாக்குறைக்கு கூட்டுறவுச்சங்கத்தேர்தலும் வேறு உள்ளது. இத்தேர்தலுக்கு முகம் கொடுப்பதே கட்சிகளுக்கு பெரும் வேலையாகி விடுகின்றது. நிதி, மனித வளங்களும் அதிகளவு அதற்கு விரயமாகின்றன. 

தேச விடுதலை போராட்ட செயற்பாடு என்பது மக்களை அரசியல் மயப்படுத்துதல் உள்ளிட்ட பல பணிகளைக் கொண்டது. தேர்தலை நோக்கிய கட்சி அரசியலினால் அப்பணிகளை வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியாது. எனவே இந்த விடயம் தேர்தல் மையக்கட்சி அரசியலினால் ஏற்படுகின்ற முதலாவது பாதிப்பாகும். 

இரண்டாவது பாதிப்பு தேசமாக ஒன்று திரள்வதை தேர்தல் மையக்கட்சி அரசியல் தடுப்பதாகும். தமிழ்த்தேசிய அரசியலின் தற்போதைய நிலையைப் பொறுத்தவரை இரண்டு பெரும் பணிகள் முக்கியமானவையாகும். பெருந்தேசியவாதத்திற்கு முகம் கொடுத்தல், சர்வதேச அரசியலைக்கையாளல் என்பனவாகும். இவ்விரண்டு பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமாயின் தமிழ் மக்கள் வலிமையாக இருக்க வேண்டும். 

தேசமாக ஒன்றுதிரண்டு ஒருங்கிணைந்த அரசியலைப் பின்பற்றும் போதே வலிமை நிலையை உருவாக்க முடியும். தேர்தல் மையக்கட்சி அரசியல் தேசமாக ஒன்றுதிரள்வதையும் அதன் வழி வலிமைநிலை பெறுவதையும் தடுக்கின்றது. இதன் வெளிப்பாட்டைக் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெளிவாகப்பார்க்கக் கூடியதாக இருந்தது. இத்தேர்தலில் மூன்று தமிழ்த்தேசியக்கட்சிகளும் மூன்று வகையாக நிலைப்பாடுகளை எடுத்திருந்தன.

மூன்றாவது தேர்தல் மையக்கட்சி அரசியல் ஐக்கிய முன்னணி ஒன்றைக்கட்டியெழுப்புவதை தடுக்கின்றமையாகும். தேசிய இன ஒடுக்குமுறை என்பது அத்தேசிய இனத்திற்கு வெளியே இருந்து வரும் ஒடுக்கு முறையாகும். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தேசிய இனத்திலுள்ள அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். ஒருதேசிய இனத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கலாம். 

அதன் வழி பல்வேறு அமைப்புக்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாதது. இதனால் ஒடுக்கு முறைக்கு முகம் கொடுப்பதற்கு பொதுஇலக்கு, பொதுக்கொள்கை, அடிப்படையிலான ஐக்கிய முன்னணி அவசியமானதாகும். தேர்தல் மையக்கட்சி அரசியல் பொதுஇலக்கு, பொதுக்கொள்கை அடிப்படையிலான ஐக்கிய முன்னணி உருவாகுவதற்கு தடையாக இருக்கின்றது.

ஐக்கிய முன்னணி சிறப்பாக செயற்பட வேண்டுமாயின் கொள்கை உடன்பாடு, சம அந்தஸ்து, அமைப்புப் பொறிமுறை என்பன அவசியம். தமிழ் அரசியல் வரலாற்றில் இந்தப்பண்புகளைக் கொண்ட ஐக்கிய முன்னணி உருவாகவில்லை. 

மாறாக தேர்தல் கூட்டணியே உருவானது. சம அந்தஸ்து என்ற பண்பு அறவே இருக்கவில்லை. ஒரு கட்சியின் மேலாதிக்கம் எப்போதும் இருந்தது. இதனால் அனைத்து ஐக்கிய முன்னணிகளும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை, விக்கினேஸ்வரனின் கூட்டணி, என்று அனைத்தும் தோல்விகளையே தழுவின.

நான்காவது தேர்தல் மையக்கட்சி அரசியல் மக்களைக் கூறுபோடுகின்றமையாகும். தமிழ்த்தேசியப்பரப்பில் உள்ள மக்களே கூட்டமைப்பு, முன்னணி, விக்கினேஸ்வரன் கட்சி என்று மூன்று கூறுகளாக உள்ளனர். இவற்றிற்கிடையே சண்டைகளும் அதிகம். 

1975ஆம் ஆண்டு தமிழ் இளைஞர் பேரவையில் இருந்த பெரும்பான்மையோர் தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதிக்கம் காரணமாக வெளியேறி தமிழ் ஈழ விடுதலை இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். (தற்போதைய ரெலோ அல்ல) அவ்வமைப்பு ‘எரிமலை’ என்ற பத்திரிகையை நடாத்தியது. 

பிற்காலங்களில் ஈரோஸ் இயக்கத்தின் மத்திய குழுவில் இருந்தவரும் கவிஞருமான கி.பி.அரவிந்தன் என்று அழைக்கப்ட்ட குருநகரைச் சேர்ந்த பிரான்சீஸ் என்பவரே அதன் ஆசிரியராக இருந்தார். அப்பத்திரிகை தேர்தல்கள் தமிழ் மக்களை கூறுபோடுவதால் விடுதலை கிடைக்கும் வரை தேர்தலே வேண்டாம் எனப்பிரச்சாரம் செய்தது.

ஐந்தாவது எதிரிகள் உள் நுழைவதற்கான இடைவெளிகளை தேர்தல் மைய அரசியல் கட்சிகள் உருவாக்குகின்றன. ஒருங்கிணைந்த அரசியல் நடைமுறையில் இருப்பின் எதிரிகள் நுழைவது கடினம். கடந்த பாராளுமன்றத்தேர்தலின் போது தமிழ்த்தேசியக்கட்சிகள் பிளவு பட்டுப்போட்டியிட்டன.  இதுசிங்கள தேசத்தின் கட்சிகளும், சிங்கள அரசாங்க சார்புக் கட்சிகளும் கணிசமான ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கின. 

ஆறாவது மிக முக்கியமானது தேர்தல் மைய அரசியல். தமிழ் மக்களின் பேரம்பேசும் சக்தியை பலவீனப்படுத்துகின்றது என்பதே அதுவாகும். தேசிய இன ஒடுக்குமுறைக்கான அரசியலை துண்டு துண்டாக முன்னெடுக்க முடியாது. அவ்வாறு முன்னெடுப்பின் எவருமே அதனைக் கணக்கெடுக்க மாட்டார்கள். தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசிய இனம். அது தன் விடுதலையைப் பெற்றுக் கொள்ள அக ஆற்றல் மட்டும் போதாது. உலகத்தமிழர்  ஆதரவு, உலக முற்போக்கு ஜனநாயகசக்திகள் ஆதரவு என்கின்ற புற ஆற்றலையும் இணைக்கின்ற போதே வலிமையாக நின்று நெஞ்சை நிமிர்த்தி பேரம் பேசலை மேற்கொள்ள முடியும். இந்தப்புற ஆற்றலுக்கான நிபந்தனை அக ஆற்றலை வலுவாக வைத்திருப்பது தான். துண்டு, துண்டான அணுகுமுறையால் ஒருங்கிணைந்த அக ஆற்றல் சிதைக்கப்படுகின்றது. இதுசிதைக்கின்ற போது புற ஆற்றலும் கிடைக்காமல் போகின்றது. தாயகத்தில் ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல் உலகத்தமிழர்களோ, உலக முற்போக்கு ஜனநாயக சக்திகளோ எம்முடன் இணையப்போவதில்லை.

மொத்தத்தில் தேர்தல் மையக்கட்சி அரசியல் தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையே சிதைக்கின்றது. இந்த சிதைப்பைத்தடுப்பதற்கு ஒரேவழி தேர்தல் மையக்கட்சி அரசியலுக்கு வெளியே தேசியப் பேரியக்கம் ஒன்றை உருவாக்குவது தான். தேர்தலில் போட்டியிடுவது அவசியமானதாக இருந்தால் தேசியப்பேரியக்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் அரசியல் கட்சிகளைக் கொண்டு வரலாம். தமிழத்தேச அரசியலை தேர்தல் மைய அரசியல் கட்சிகளை நம்பி ஒருபோதுமே ஒப்படைக்க முடியாது.

சிலர் தமிழ் மக்களிடம் தற்போது இருப்பது தேர்தல் மைய பிரதிநிதித்துவ அரசியல் மட்டுமே எனக்கூறப்பார்க்கின்றனர். இது மிகவும் தவறானதாகும் சிங்கள தேசத்தின் பாராளுமன்றத்திற்கு செல்வதால் தமிழ் மக்களுக்கு எதுவும் கிடைத்து விடப்போவதில்லை. இது மக்களிலும், மக்கள் போராட்டங்களிலும் நம்பிக்கையற்றவர்களின் கருத்தாகும். 

ராஜபக்ஷக்களின் பதவி இறக்கம் பிரதிநிதித்துவ அரசியலினால் இடம் பெறவில்லை. மக்கள் இயக்கத்தினாலேயே சாத்தியமானது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவித்தூபி மீளக்கட்டி எழுப்பப்பட்டதையோ, கனடா மத்திய அரசாங்கம் இன அழிப்பு தீர்மானத்தை நிறைவேற்றியமையோ, தமிழநாடு சட்ட மன்றம் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையோ ஈழத்தமிழர்களின் பிரதிநிதித்துவ அரசியல் சாத்தியமாக்கியிருக்கவில்லை.

தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியக்கீழிறக்கலைத் தடுப்பதற்கான ஒரேயொரு கருவி உலகம் தழுவிய தேசியப் பேரியக்கமே.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எதிர்மறையை சாதகமாக்கிய ஜூலி சங்

2026-01-18 05:55:10
news-image

வெறுங்கையுடன் வந்த வாங் யி

2026-01-18 05:47:45
news-image

தமிழர்களை இலக்கு வைத்த பாலியல் வன்முறைகள்

2026-01-18 05:42:29
news-image

அர­சி­யல்­வா­திகள் பொய்­க்கூ­று­வதை சட்­ட­வி­ரோ­த­மாக்கும் முயற்­சியில் வேல்ஸ்

2026-01-18 05:39:45
news-image

சுவிசில் பெருந் துயராக மாறிய புத்தாண்டுக்...

2026-01-18 05:33:08
news-image

ஆய்வுக்கு உட்­ப­டுத்த வேண்­டிய அனர்த்த வரை­ப­டங்கள்

2026-01-18 05:29:35
news-image

தடம்புரண்ட சர்வதேச உறவு

2026-01-18 05:21:14
news-image

இலங்கையில் வாகன பதிவு மற்றும் உரிமம்...

2026-01-18 05:15:24
news-image

துரோகங்களால் நிறைக்கப்பட்டுள்ள கட்சிகள்

2026-01-18 04:54:44
news-image

இந்தியாவை மேலெழ வைக்கும் அமெரிக்கா

2026-01-18 04:40:56
news-image

யூத ஜெபஆலயமாக மாற்றப்பட்டு வரும் பலஸ்தீனத்தின்...

2026-01-18 05:59:18
news-image

ஈரான்: பொருளாதார அதிருப்தியில் இருந்து தகவல்...

2026-01-18 04:30:24