ஹக்கீம் - ரிஷாத்திற்கு அக்கினிப் பரீட்சை

Published By: Digital Desk 5

27 Aug, 2022 | 11:50 AM
image

எம்.எஸ்.தீன் 

உள்ளூராட்சிமன்றங்களின் காலத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் ஒரு வருடம் நீடித்துள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் உள்ளூராட்சிமன்றங்களை கலைத்து விரைவில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அரசியல் கட்சிகள் யாவும் உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தலை எதிர்கொள்வதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட தயாராகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் முஸ்லிம் காங்கிரஸையும் அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தவரை அதன் அரசியல் பலம் கிழக்கு மாகாணத்திலேயே தங்கியுள்ளது. அதிலும் அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் இதயம் எனும் அளவுக்கு முக்கியத்துவமானது. 

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு இம்மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சியும், தேசிய காங்கிரஸின் செல்வாக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் பிரதான காரணம் எனலாம். அம்பாறை மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். தற்போதையே பாராளுமன்றத்தில் 2 பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளார்கள். 

இந்த மாவட்டத்தில் கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, இறக்காமம், பொத்துவில் ஆகிய பிரதேச சபையின் அதிகாரங்களை கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துவமாகப் பெற்றிருந்தது. 

ஆனால், இறுதியாக கலப்பு தேர்தல் முறையில் நடைபெற்ற உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம் ஆகிய பிரதேச சபைகளின் அதிகாரங்களை இழந்தது. இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அதிகாரங்களை மாற்றுக் கட்சிகளின் உதவியுடன் பெற்றுக்கொண்டது. 

இதேவேளை, கல்முனை மாநகர சபை, பொத்துவில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் மாற்றுக்கட்சிகளின் உதவியுடன் பெற்றுக்கொண்டது. 

இந்நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமது செல்வாக்கை நிலை நிறுத்தி உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற திட்டத்தை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கொண்டுள்ளார். அதற்குரிய திரைமறை நடவடிக்கைகளையும் அவரது வழக்கமான பாணியில் மேற்கொண்டுள்ளார். 

ஆயினும், உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் அதே வேளையில் தமக்கு விசுவாசமானவர்களை அதிகாரங்களில் அமர்த்த வேண்டிய கட்டாயத்திலும் ரவூப் ஹக்கீம் உள்ளார். முஸ்லிம் காங்கிரஸிற்குள் உள்ளக முரண்பாடுகள் வலுத்துக் கொண்டு வருகின்றன. 

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கு முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்க வேண்டுமென்ற கருத்தாடல்களை முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களே பொதுவெளியில் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இக்கருத்தாடல்களின் பின்னணியில் புதியதோரு அரசியல் நகர்வும் உள்ளது. அதாவது, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கதிட்டமிட்டுள்ளார்கள். 

அதன் பிரதான கோஹமாக கிழக்கு முஸ்லிம்களுக்கு கிழக்கைச் சேர்ந்தவரே அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டுமென்பதனை முன்வைக்கவும் உள்ளனர். இத்திட்டத்திற்குரிய ஆட்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிலர் மேற்கொண்டுள்ளனர். 

இதற்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைமையோடு ஏற்கனவே முரண்பட்டு பிரிந்து மாற்றுக் கட்சிகளில் உள்ளவர்களையும், மக்கள் காங்கிரஸின் முரண்பாட்டாளர்களையும் இணைத்துக் கொள்வதற்குமுரிய முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்தப் பின்னணியில் உள்ளூராட்சிமன்றங்களின் அதிகாரங்களை தமக்கு விசுவாசமானவர்களுக்கு வழங்கும் போது மாத்திரமே அம்பாறை மாவட்டத்தில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம் காங்கிரஸினதும், தமது தலைமைத்துவ செல்வாக்கையும் பாதுகாத்துக் கொள்ள முடியுமென்ற கணிப்பில் ரவூப் ஹக்கீம் கூட்டல் கழித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். 

இதற்காக முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து மாற்றுக் கட்சிகளை பலப்படுத்தியவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கும், அவர்களுக்கு கட்சியில் தகுந்த அந்தஸ்தை வழங்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றன.  

இதனால், உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை போட்டியிடச் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. 

முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றன. முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் தங்களின் தலைமைத்துவ விசுவாசத்தை முகநூல்களின் ஏலம் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

அது மட்டுமன்றி இவர்களைக் கொண்டு உள்ளூராட்சிசபையின் அதிகாரங்களை கைப்பற்றியதன் பின்னர் அவர்களை மாகாண சபை தேர்தலில் அல்லது பாராளுமன்ற தேர்தலில் களமிறக்கவும் ரவூப் ஹக்கீம் திட்டமிட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும், பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்திசைகளில் நின்று கொண்டு உள்ளூராட்சிமன்றங்களின் தேர்தலை எதிர்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஹாத் பதியூதீன், தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோர்கள் அதுகுறித்து எந்தவொரு சமிக்கையையும் காட்டாதவர்களாகவே இருக்கின்றார்கள். 

தேசிய காங்கிரஸைப் பொறுத்தவரை அதன் அதிகாரப்பரப்பு பெரும்பாலும் அக்கரைப்பற்றை மையப்படுத்தியதாகவே இருக்கின்றது. அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேசசபை ஆகியவற்றின் அதிகாரங்களை தேசிய காங்கிரஸின் வசமாகவே இருக்கின்றது. எதிர்வரும் உள்ளூராட்சிதேர்தலிலும் இவ்விரு சபையின் அதிகாரங்களையும் தேசிய காங்கிரஸ் கைப்பற்றுவதில் பெரிய சிரமங்கள் இருக்கப்போவதில்லை. அதுமட்டுமன்றி இவ்விரு சபைகளைத் தவிர ஏனைய சபையின் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதில் தேசிய காங்கிரஸின் தலைமைக்கும் அக்கறையுமில்லை. 

ஆனால், மக்கள் காங்கிரஸைப் பொறுத்தவரை எதிர்வருகின்ற உள்ளூராட்சிசபைத் தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தில் அதன் செல்வாக்கை மீண்டும் பரிசோதித்துப் பார்ப்பதற்கான ஒன்றாகவே இருக்கப்போகின்றது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சியோடு இல்லை.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான பின்னடைவைக் கண்டிருந்தது. கிழக்கு மாகாணத்தில் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரை மாத்திமே பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மக்கள் காங்கிரஸின் முன்னால் அரசியல் சவால்கள் உள்ள போதிலும் அக்கட்சியோ அதன் தலைமையோ அல்லது உயர்பீட உறுப்பினர்களோ எந்தவொரு ஆயத்தமுமில்லாது இருக்கின்றார்கள். கட்சியின் ஆதரவாளர்களை சந்திப்பதற்குரிய நடவடிக்கைகளை அக்கட்சி எடுக்காதிருப்பது ஆதரவாளர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாண ஆதரவளர்கள் விசனமடைந்துள்ளார்கள்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌசாட், கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிவு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார்கள். 

ஆகவே, மக்கள் காங்கிரஸ் நடந்து கொண்டிருக்கின்றவைகளை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்த நிலையில் உள்ராட்சிசபைத் தேர்தலை சந்திக்குமாயின் அதன் செல்வாக்கை பாதுகாத்துக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஏற்படும். ஆகவே, உள்ளூராட்சிசபைத் தேர்தல் என்பது முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கை அளவீடு செய்யும் கருவியாகவே அமையவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளும் பொறுப்புக்களும்

2024-12-11 17:06:28
news-image

சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்...! - சித்திரவதை...

2024-12-11 13:22:24
news-image

சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவை பெறுதல்

2024-12-11 11:18:31
news-image

இனவாதத்தை ஒழிப்பது குறித்த அரசாங்கத்தின் கருத்துக்களும்...

2024-12-11 11:05:09
news-image

இலங்கையை அதிர்ச்சிக்குள்ளாகிய விமான விபத்து -...

2024-12-10 12:27:56
news-image

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு குறுக்கே நிற்கும்...

2024-12-10 09:04:49
news-image

தமிழரசு கட்சி மட்டக்களப்பில் பெற்ற பெருவெற்றியும்...

2024-12-09 10:45:04
news-image

அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது...

2024-12-09 09:48:21
news-image

ஐந்தாண்டுகளுக்கு ஆளுகை தொடரும் - பிரதியமைச்சர்...

2024-12-08 15:45:45
news-image

ரஷ்ய-உக்ரேன் போர் முனைக்கு வலிந்து தள்ளப்பட்டுள்ள...

2024-12-08 15:48:28
news-image

அநுர அரசின் அணுகுமுறை தமிழ் கட்சிகளை...

2024-12-08 12:41:32
news-image

கல்முனை விவகாரம் பிச்சைக்காரன் புண்ணாக தொடரக்...

2024-12-07 11:51:32