சிந்திக்கின்ற எதையும் எழுதிவிட முடியாது - எழுத்தாளர் மதிவதனி (வாணமதி)

By Nanthini

26 Aug, 2022 | 08:50 PM
image

சுவிற்ஸர்லாந்தில் வசிக்கும் திருகோணமலையை சேர்ந்த கவிதாயினி, எழுத்தாளர் வாணமதி என்கிற மதிவதனி வழங்கிய நேர்காணல்...

* உடல், உள நல பராமரிப்பாளர், புலம்பெயர் பெண்களுக்கான சமூக நல ஆலோசகர், எழுத்தாளர், கவிதாயினி, தமிழாசிரியை, பேச்சாளர்... உங்களை இவர்களில் யாராக அடையாளம் காட்ட விரும்புகிறீர்கள்? 

சமூகத்தின் பிரஜைகளில் ஒருத்தியாக நான்   அடையாளம் கொள்ளப்படுவதையே பெருமையாக கருதுகிறேன். ஏனென்றால், சமூகத்துக்கு சேவை செய்யும் எண்ணத்தின் வெளிப்பாடே நீங்கள் எனக்கு கொடுத்த அடைமொழிகள். அந்த பணிகளுக்கேற்ப நான் செயற்பட, உந்துசக்தியை கொடுப்பது இந்த சமூகமல்லவா! 

* உங்களுக்குள் ஓர் எழுத்தாளர், கவிதாயினி பிறந்தது எப்படி, எப்போது? 

அப்படியொரு சூழ்நிலையை இன்று வரை இனங்காண முடியவில்லை. எப்போது எனது எண்ணங்களை இயற்கை, சுற்றுச்சூழல், சமூகம் சார்ந்து ஒப்பிடத் தொடங்கினேனோ, அவை பற்றி சிந்திக்க ஆரம்பித்தேனோ, அந்த நிமிடம் தொடங்கி எனக்குள் ஓர் எழுத்தாளர், கவிஞர் இன்னும் பலர் உருவாகியிருக்க வேண்டும். 

ஆயினும், எனது எண்ணக்கருக்களுக்கு சவால்விடும்படியாக சம்பவங்கள் (குடும்பம், சமூகம் குறித்த விடயங்கள் எதுவாயினும்) இடம்பெறுகிறபோது ஏற்படும் அந்த வெறித்தனம், பேனாவை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வரிகளை வரைய வைத்தது. 

தவிர, 16 வயதில் நான் சந்தித்த குடும்ப சூழ்நிலை, பெண்ணடிமைத்தனம், ஏற்றத் தாழ்வான வாழ்க்கை முறைகள் தொடர்பாக எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டதும் எழுத காரணமாகின்றன. மேலும், பருவ வயதில் பொங்கியெழுந்த உணர்வலைகள் கவிதை எழுத தூண்டின எனலாம்.

"கவிதைகளை வாசிக்கிற போது நீங்கள் என்னை தேட மாட்டீர்கள்... காட்சியையும் காட்சிப் பிழைகளையும் பிரித்தறிவீர்கள்." 

* இதுவரை வெளியிட்ட நூல்கள்? 

* 'ஒரு புன்னகை போதும்' - உளவியல் கட்டுரை தொகுதி. 

* 'எச்சங்கள்' - புலம்பெயர் சிறுகதை தொகுதி  

* 'குழவிப் பூங்கா' - சிறுவர் கதை நூல் 

* 'கொக்கோவும் மிங்கியும்', 'லொற்றோ' - சிறுவர்களுக்கான 'பொக்கெட்' கதை நூல்கள் 

* 'காட்சிப் பிழைகள்' - கவிதைத் தொகுதி 

* 'ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு' - உளவியல் கட்டுரை தொகுதி (நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் அறக்கட்டளையின் 'யாதும்' என்ற சஞ்சிகையில் எழுதியவை) 

* சமீபத்தில் வெளியான 'காட்சிப் பிழைகள்' மூலம் நீங்கள் கூற விழைவது என்ன? 

புதுக்கவிதை வடிவில் அமைந்த 'காட்சிப் பிழைகள்', எனது தூக்கத்தை தொலைக்கின்ற வீரம், காதல், கோபம் என எந்தவொரு விடயப்பொருளும் ஓர் எழுத்து வடிவம் பெற்று, ஜதி பிறழாமல் வாசகர்களை ஊடுருவிச் செல்ல வேண்டுமென்ற நோக்கில் எழுதப்பட்டது. 

காண்கின்ற எதுவும் நிஜமென நாம் நம்புவதாலேயே பல தருணங்களில் சோர்ந்து போய்விடுகிறோம். அதனால் 'தவறு நம்மில் தானோ' என்றும் எண்ணுகிறோம். அதற்கான காரணமும் அங்கே தொக்கி நிற்கிறது. இவற்றுக்கெல்லாம் 'காட்சிப் பிழைகள்' விடையளிக்கின்றன. 

இந்த கவிதைகளை வாசிக்கிற போது நீங்கள் என்னை தேட மாட்டீர்கள்... காட்சியையும் காட்சிப் பிழைகளையும் பிரித்தறிவீர்கள். 

* ஒரு கதையின் சிறப்பு என்பது....?

பெண்களின் பிரச்சினைகளை, துயர சம்பவங்களை 'எச்சங்கள்' நூல் வழியே வாசிக்கின்றபோது வாசகர்கள் கதாசிரியரான என்னை அந்த கதைகளின் நாயகியாய் பார்த்தனர். இது சிறுகதைகளுக்குரிய தவறான பொருளென ஒரு காலத்தில் கற்பிக்கப்பட்டது. ஆனால், இன்றைய சூழல் அப்படியல்ல. 

உண்மையில் ஒரு வாசகர் கதாசிரியரை கற்பனை செய்துகொண்டு வாசிக்கிறார் என்றால், அந்த கதை வெற்றி அடைந்ததாகத் தான் அர்த்தம். ஏனென்றால், அந்த இடத்தில் கதாசிரியர் வாசகரின் மனக்கண்ணில் கதையின் பாத்திரமாக நெருங்கி வந்திருக்கக்கூடும். 

* உங்களது நூல்களை தற்போது வசிக்கும் தேசத்தில் வெளியிடாததற்கு என்ன காரணம்? 

புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் எங்களுக்கென ஒரு தொழில் இருக்கிறது. அந்த தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. எழுதுவது கூட ஒரு பொழுதுபோக்கே. எழுதுவதை நூலாக்கம் செய்வதற்கோ, இந்நாட்டில் பதிப்பகத்தில் நூல்களை அச்சிடுவதற்கோ, நூல்களை வெளியிட விழாவினை ஏற்பாடு செய்வதற்கோ ஆள்பலம், பொருளாதார பலம் தேவைப்படுகிறது. எனினும், நூல் வெளியிடுவதை நூலாசிரியர் வியாபாரம் ஆக்கிவிடக் கூடாது என்பதை பின்னாளில் பட்டறிவு, பிறர் அறிவுரைகளை பெற்ற பிறகே புரிந்துகொண்டேன். 

'சந்தைப்படுத்தலுக்காக' நானே பொருளாதார முதலீடு செய்து, நூலினை அச்சடித்து, விற்பது தவறான விடயமே. எனது எழுத்துக்களுக்கு வீரியம் இருந்தால், அவை பதிப்பகங்களால் அங்கீகரிக்கப்பட்டு, சமூகத்துக்கு கொண்டு செல்லப்படும். அதற்கு எனது எழுத்தின் தரத்தை நான் உயர்த்திக்கொள்ள நினைத்தேன். 

அதன் நிமித்தமாக புலம்பெயர்ந்த நாட்டில் அதிக செலவு செய்து, விழாக்களை நடத்துவதை தவிர்த்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இலக்கிய சமூகத்தினரின் மத்தியில் எனது நூல்கள் அறிமுகம் பெறுவதையும், இலக்கியங்களை நேசிக்கின்ற மக்களோடு கலந்துரையாடுவதையும், எழுத்துப் பணிகளை நிறைவேற்றுவதையுமே நான் விரும்புகிறேன். 

* பிற மொழிகளின் ஆதிக்கம் நிறைந்த புலம்பெயர் தேசங்களில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் பெருமளவில் வரவேற்பு கிடைக்கிறதா?

தமிழ்மொழி சார்ந்த இலக்கியங்கள் புலம்பெயர் தேசத்தில் கொண்டாடப்படுகின்றனவா, இல்லையா என்பதை தாண்டி, 'என்னால் கொண்டாடப்பட வேண்டும்' என்ற எண்ணத்தில் தான் புலம்பெயர் எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அதற்கான அங்கீகாரத்தை அவர்கள் தாய்மொழியில் இருந்து எதிர்பார்க்கின்றனரே தவிர, அந்நிய மொழியிலிருந்து அல்லது அந்நிய நாட்டிலிருந்து அல்ல என்பதற்கு தொடர்ச்சியாக வெளிவருகின்ற புலம்பெயர் இலக்கியங்கள் சான்றாகின்றன. 

* சிறுவர்களுக்கென கதை நூல்களையும் எழுதியுள்ளீர்கள். அந்நாட்டில் தமிழ் சிறுவர் நூல்களுக்கான தேடல் எந்த மட்டத்தில் உள்ளது?

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் பாடசாலைகளில் தாய்மொழிக் கல்வியை கற்கின்ற எமது பிள்ளைகள் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களை தமது பாடத்திட்டத்தில் கொண்டிருப்பதால், அவர்களுக்கு தமிழ் கதைகள், இலக்கியங்கள் எதுவும் புதிதல்ல. அந்த வகையில் தமிழ் பேசுகின்ற, தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ள புலம்பெயர் பிள்ளைகள் மத்தியில் தமிழ் சிறுவர் இலக்கியங்கள் வீரியம் மிகுந்தனவாய் உள்ளன. அதனால் தான் சிறுவர்களுக்கான இலக்கியங்களை எம்மால் படைக்கவும் முடிகிறது.  

* புலம்பெயர் பெண்களுக்கான ஆலோசனைகளை எழுதுகின்ற முயற்சியில் நீங்கள் காணும் சாதக நிலை? 

உளவியல் சிக்கலில் அகப்பட்ட பெண்களை விட அவர்களை துன்பத்தில் வீழ்த்தியவர்களும், அவர்களை காப்பாற்றும் எண்ணம் உள்ளவர்களும், இனி இந்த சிக்கல்களை ஏற்படுத்தக் கூடாது என எண்ணுபவர்களும் உளவியல் ஆக்கங்களை வாசித்து, தங்கள் மனோநிலையை மாற்றிக்கொள்வதற்கு இது வாய்ப்பாக அமையலாம். உளவியல் பாதிப்புக்குள்ளானோரை காப்பாற்றி, மீண்டும் அவர்கள் அந்த பாதாளத்துக்குள் வீழாதபடி மீளெழும்பச் செய்யும் துணைக் கருவியாகவும் எழுத்தாக்கங்கள் செயற்படும். 

* புலம்பெயர் தேசத்து எழுத்தாளரின் வெற்றி எதில் தங்கியுள்ளது? 

எழுத்துக்கள் அச்சுக்கு செல்வதே பெரும் வெற்றிதான். 'அவ்வாறாயின், அச்சுக்கு செல்லாத ஆக்கங்கள் எல்லாம் வெற்றி பெறாதவையா' என நீங்கள் கேட்டால், வெற்றி அடைந்தவை தான். ஆனால், பெயர் சூட்டப்படாத குழந்தை போல. சமூகத்தில் பெயர் சூட்டப்பட்ட குழந்தைக்கு சற்று மரியாதை அதிகமாயிற்றே.

* எழுதுவதற்கு மிகக் கடினமான விடயமாக நீங்கள் கருதுவது எதை? 

கடின நிலை எனப்படுவது எங்கே, எதனை எழுதுகிறோம் என்பதை பொறுத்தது. ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர் தமிழர்களை நோக்கி பாலியல் கல்வி பற்றி வெளிப்படையாக எழுத முடியும். அது சார்ந்த கேள்விகளை எழுப்ப முடியும். ஆனால், அதே விடயப் பரப்பினை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் என்னால் எழுத முடியாது. இதற்கு அந்த நாடுகளில் காணப்படும் கலாசார முட்டுக்கட்டைகளே காரணம். அதை தவிர, அவ்வாறு எழுதப்படும் விடயங்கள் தணிக்கையும் செய்யப்படலாம். ஒவ்வொருவர் உணர்வுகளும் வாழ்கிற சமூகத்தை பொறுத்து மாறுபடுவதால் சிந்திக்கின்ற எதையும் எழுதிவிட முடியாது. 

* எழுத்துத்துறையில் உங்களது இலக்கு? 

சமூகத்துக்கு நன்மையான விடயங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் எனது கைகள் தமிழ் என்ற வரி வடிவத்தை தொடுகின்ற தருணங்களில், நான் பெற்ற சிறந்த விடயங்களை ஆக்கபூர்வமாக, ஊட்டமாக சமூகத்துக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். 

* உங்களது நூல்களை இலங்கையில் எவ்வாறு பெற்றுக்கொள்வது? 

விரைவில் எனது நூல்கள் இலங்கை வாசகர்களின் கைகளிலும் தவழும் வகை செய்வேன். தமிழ்ப் பற்றும் சமூக ஆர்வமும் கொண்ட அனைவருமே அந்த நூல்களை வாசித்து பயன் பெற முடியும். வாசகர்களின் வார்த்தைகளே என்னை மேலும் உற்சாகப்படுத்தும் என நம்புகிறேன்.

நேர்கண்டவர்: மா. உஷாநந்தினி 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right