வீட்டில் தெரியப்படுத்துங்கள் !

Published By: Devika

25 Aug, 2022 | 10:53 AM
image

கேள்வி

நான் ஒருவரைக் காதலிக்கிறேன். இந்த விடயம் என் வீட்டாருக்­குத் தெரியும். நான் அவருடைய வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி­யிருந்தேன். இதுவும் என் வீட்டாருக்குத் தெரியும். அங்கு இருக்கும்­போது இரண்டு முறை தவறிழைத்துவிட்டோம். இப்போது என் அண்ணா எனக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து திருமணம் செய்துவைக்க நினைக்கிறார். என்ன செய்வதென்று அறியாமல் குழம்பியிருக்கிறேன். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்.

பதில்

நேரடியாக உங்கள் அண்ணணிடமே கதையுங்கள். உங்கள் காதல் வீட்டில் தெரிந்திருக்கும் பட்சத்தில், உங்கள் அண்ணனுக்கும் தெரிந்தி­ருக்கும். தெரிந்தும் உங்கள் காதலர் வீட்டில் மூன்று மாதங்கள் தங்கி­யிருக்க அனுமதித்திருக்கிறார்கள். இப்போது திடீரென்று ஏன் இந்த முடிவு என்று கேளுங்கள்.

நீங்கள் உங்கள் மனதை மட்டுமன்றி உங்களை முழுதாகவே அவரிடம் கொடுத்துவிட்டதைச் சொல்லுங்கள். இது கடினமான விடயம்தான் என்றாலும், நீங்கள் காதலித்தவரே உங்களுக்குக் கணவனாக வாய்க்க வேண்டும் என்றால், இந்த உண்மையை உங்கள் வீட்டில் தெரியப்படுத்தத்தான் வேண்டும்.

வேறொரு மாப்பிள்ளையைப் பார்த்துத் திருமணம் செய்துவைத்­தால், எதிர்காலத்தில் பிரச்சினைகள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதை விளக்கிச் சொல்லுங்கள். இதற்கு உங்கள் தாய் மற்றும் சகோதரிகளை (இருந்தால்) துணைக்கு அழைத்துக்கொள்ளுங்கள். திருமணத்தின் பின் இந்த விவகாரம் தெரிந்தால் என்னவாகும் என்பதை அவர்கள்தான் அதிகமாக அறிவார்கள். 

நிச்சயமாக உங்கள் காதலரின் குடும்பத்தை உங்கள் வீட்டார் நன்­கறிந்து வைத்திருப்பார்கள். எனவே, உங்கள் காதலரிடம் சொல்லி, அவர் வீட்டில் இருந்து உங்களைப் பெண் கேட்கச் சொல்லுங்கள். 

இப்படியாக உங்கள் தரப்பு நியாயத்தை நீங்கள் மட்டுமன்றி, பல­ரும் உங்கள் அண்ணனிடம் கதைக்கும் பட்சத்தில், அவரது மனம் மாற வாய்ப்புகள் உண்டு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்