குமார் சுகுணா
பாடசாலை கல்வியை கற்க வேண்டிய சிறுமிகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப் படுவதும் அவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதும் இறுதியில் அது தற்கொலை என்று மூடப்படும் சம்பவங்களும் மலையகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
எத்தனையோ வீதி நாடகங்கள், கூட்டங்கள் என விழிப்புணர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் சிறுமிகள் வீட்டு வேலைக்கு அனுபப்படுகின்ற நடவடிக்கைகள் நிறுத்தம் இன்றி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கசப்பு என்றாலும் சில உண்மைகளை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
கொழும்புக்கு வீட்டு வேலைக்கு, கடை வேலைக்கு என்று மலையக சிறுவர்கள் அழைத்து செல்லப்படுவது அல்லது பெற்றோர்களினால் விரும்பி அனுப்பப்படுவது என்பது புதிய விடயம் அல்ல.
மலையகத்தை பொருத்தவரையில் 70களில் இருந்து இன்று வரை இருக்கின்ற மாறா நிலைத்தான் கொழும்பு வேலை. 10, 12 வயது நிரம்பியவுடன் அல்லது அதற்கு குறைந்த வயதுடைய பிள்ளைகள் கொழும்புக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்படுவது வழமை. ஆண் பிள்ளைகள் கடைத்தெருக்களில் ஹோட்டல்களில் சாப்பிட்ட கோப்பைகளை கழுவுவது. மேசைகளை துடைப்பது பொட்டளம் கட்டுவது போன்ற வேலைகளிலும் பெண்பிள்ளைகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவதும் வழமை. அது போல படிப்பை இடைநடுவே விட்டு விட்டு கொழும்பை நோக்கி குறிப்பாக ஆடைத்தொழிற்சாலையில் வேலைக்கு செல்லுபவர்களும் அதிகம். இது போன்ற சம்பவங்களுக்கு தரகர்களை மட்டும் குறை கூற முடியாது. அவர்களுக்கு பணம் மட்டுமே ஆசை. இதனை ஒரு தொழிலாக செய்பவர்கள்.
பெற்றோர்கள்தான் தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு முழு பொறுப்புக்கு ரியவர்கள். ஆனால் அந்த பொறுப்பை பலரும் சரிவர செய்வதில்லை என்பதே உண்மை . அறிவு குறைந்த பெற்றோர்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் கல்வி அறிவுள்ள ஒரு சமூக அந்தஸ்த்து உள்ளவர்கள் தங்களது வீட்டில் சிறுமிகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமே
தற்போது வீட்டுவேலைக்கு சென்ற இடத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்த மஸ்கெலியா சிறுமி தொடர்பிலான செய்திகள் வெளிவந்த வன்னம் உள்ளன.
மஸ்கெலியா, மொக்கா கீழ்ப்பிரிவு தோட்டத்திலுள்ள 16 வயதான ரமணி என்ற சிறுமி ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
பிரபல அரசியல்வாதி ஒருவரின் உறவினர் ஒருவரின், கம்பஹாவில் உள்ள வீட்டிலேயே பணி புரிந்துள்ளார். சுமார் 6 மாதங்கள் வரை அங்கு வேலைசெய்து வந்த நிலையில் கடந்த 19 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். நீச்சல் தடாகத்தில் விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டதாலேயே மரணித்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டு. இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.
உயிரிழந்த சிறுமியின் தந்தை அவரை சிறுவயதிலேயே விட்டு சென்றுள்ளார். தாயும் மறுமணம் முடித்துள்ளார். இதனால் மாமாவின் அரவணைப்பிலேயே இவர் வளர்ந்து வந்தார் என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இப்போது சமூக வைலத்தளங்களில் இதுதான் பேசுப்பொருள்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் இதேபோன்ற சம்பவம் டயகம சிறுமிக்கு ஏற்பட்டதை யாரும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. டயகம பிரதேசத்தை சேர்ந்த சிறுமி முன்னாள் அமைச்சர் ரிஷாத்தின் வீட்டில் வைத்து தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபட்டமை தெரியவந்ததை அடுத்து இந்த விடயம் முழு நாட்டிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளாக சிலர் தூண்டி விட்டதனை கூட பார்த்தோம். குறிப்பாக சமூகலைத்தளங்களில் சிறுமிக்கு எதிரான மன நிலையிலும் பல பதிவுகள் காரசார விவாதங்கள் நடைபெற்றன. இறுதியாக அந்த விடயம் என்ன ஆனது என்றே தெரியாமல் அப்படியே மூடிப்போனது.
இப்போது அதேபோல மீண்டும் ஒரு சம்பவம். தாய் மறுமணம் செய்வதெல்லாம் அவர்களது சொந்த விடயம். ஆனால் ஒரு குழந்தையை பெற்று வளர்க் முடியாது, அவளது சிறு பராயத்தை அழித்து அவர்களை வீட்டு வேலைக்கு அனுப்பி அந்த உழைப்பில் தன் வயிற்றை வளர்பவர்கள் இருப்பது வேதனை. வறுமை என்றெல்லாம் இதனை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது. மலையகத்தில் இருக்கின்ற வளங்கள் அனுராதபுரத்திலோ முல்லைதீவிலோ இல்லை. மக்கள் கடும் உழைப்பில்தான் வாழ்க்கை நடததுகின்றனர். அங்கு சிறுவர்களை யாரும் வீட்டு வேலைக்கு அனுப்பு கின்றார்களா என்றால் இல்லை. இது போன்ற சம்பவங்கள் மலையகத்தில் மட்டுமே பதிவாகுவதனை நாம் தொடர்ந்து பார்க்கின்றோம்.
உண்மையில் அந்த பிள்ளைகள் என்ன பாவம் செய்தது.. அவர்களது சிறுபராயத்தை அழித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தல்.. அல்லது வேறு ஏதோ வகையில் துன்புறுத்தல்களை செய்து இறுதியாக அடையாளங்களை மறைந்து நீரிலோ,தீயிலோ, தூக்கிலோ ஏதோ ஒரு வகையில் அந்த பிஞ்சுகளை நசுக்கி விடுகின்றனர். தமது பிள்ளைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைக்கின்ற பெற்றோர் ஏனைய பிள்ளைகளை அச்சுறுத்துவது வேலைக்கார்களாக பாவிப்பது எல்லாம் எத்தனை கொடுமையான விடயம் என உணர வேண்டும்.
டயகம சிறுமியின் மரணத்தின் போது மலையக அரசியல்வாதிகளின் அறிக்கைகளில் வறுமை காரணமாக பிள்ளைகள் வேலைக்கு அனுப்படுவதாக கூறினர். இந்த வறுமையை மூன்று தலைமுறையாக மாற்ற முடியாது உள்ளமை அரசியல்வாதிகளின் தவறுதான்.
தேயிலைத் மட்டுமே தொழில் என்று இருந்தவர்களின் பிள்ளைகள் படிக்காமலா இருக்கின்றனர். அல்லது சாப்பிட கூட முடியாத வறுமையிலா இருக்கின்றனர். யோசித்து பார்க்க வேண்டும் .
100 வருடத்துக்கு முன்னர் நமது பாட்டன் உழைப்பதற்காக இந்த நாட்டுக்கு வந்தான். அவன் வந்த போது இருந்த ஒரு ஆரோக்கிய மனநிலைக்கூட இன்று இருப்பவர்களிடம் இல்லை.
குடும்ப வறுமை என்பதை இக்காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளவே முடியாது. என்னைக்கேட்டால் மலையக மக்களுக்கு விழிப்புணர்வு என்பது மிக குறைவு. இதனை ஏற்படுத்தக் கூடிய கட்டமைப்பு மலையகத்தில் இல்லை என்றே கூறுவேன்.
சிறுவயது திருமணங்கள். அது சில காலத்தில் புளித்து போக மீண்டும் இன்னொன்று.. ஆனால் பிறக்கும் பிள்ளைகள் அந்தோ கெதி. பாடசாலை செல்ல வேண்டிய வயதில் ஒரு பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என்பது பெற்றோருக்கு இருக்க வேண்டிய சராசரி அறிவாகும். பெற்றோராக ஒரு உயிரை உருவாக்குவது என்பது வெறும் கடமை அல்ல. அந்த உயிரை இந்த சமூகத்திற்கு மிக சிறந்த பொக்கிசமாக கொடுக்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையானதை செய்து கொடுக்க கூடிய திறனை முதலில் வளர்க்க வேண்டும். அதை விடுத்து கல்யாணம்.. பிள்ளைகள் அவ்வளவுதான்பா வாழ்க்கை என்று வாழ்வது நன்றல்ல.
கொழும்புக்கு சிறுவர்கள் வேலைக்கு சென்று திருவிழா, தீபாவளி போன்ற நாட்களில் ஊர்களில் செய்யும் அளப்பறைகளை நாம் பார்த்திருப்போம். இது நமக்கு அளப்பறையாக தெரிந்தாலும் சக சிறுவனுக்கோ இளைஞனுக்கோ ஈர்ப்பையும் ஆசையையும் தூண்டிவிட்டுவிடும். அவனும் இவர்களை போல கலர் கலராக புத்தாடை .. கையில் கைப்பேசி என்று வலம் வர விரும்பி கொழும்பை நோக்கி ஓடுவர். கொழும்பில் படிக்க வேண்டிய வயதில் எச்சில் கோப்பை கழுவும் சிறுவர்கள் ஊருக்கு வரும் போது பிரமிப்பாக தெரிவார்கள். இதனை பார்த்து சக சிறுவர்களும் அவர்களது பாணியை பின் தொடர்ந்து கொழும்பை நோக்கி செல்வது வழமையானதாகிவிட்டது.
பெற்றோர்களுக்கு நம்மால் மூளைச்சளவை செய்ய முடியாவிடினும் கூட இந்த சமூகத்தின் நாளைய தூண்களான அந்த பிள்ளைகளை வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் உண்டு அல்லவா... இலவச கல்வியான அரச கல்வியை பிள்ளைகள் தொடரமுடியாமல் இடைவிடுவதற்கு யார் காரணம் என்று யோசித்து பார்த்தால் சமூகத்தின் அத்தனை பேரும்தான்.
அடுத்தது அரசியல் வாதிகள், வாய்வலிக்க பேசுவார்கள் கைவலிக்க அறிக்கை விடுவார்கள். இத்தனை வருட அரசியலில் கல்வியின் முக்கியத்துவத்தை ஏன் அவர்களால் மலையகத்துக்கு புகுத்த முடியாமல் போனது... இதனை விட மலையகம் மலையகத்தின் படித்த சமூகம் என்று ஒருசாரார். புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் அவர்கள் பின் தங்கிய நிலையில் உள்ள மலையக மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் பற்றி ஏதாவது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியதுண்டா... அல்லது கல்வி கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்தியதுண்டா...
எனவே இது போன்ற சம்பவங்கள் மலையகத்தில் ஏற்படுவதற்கு காரணம் அந்த சமூகமே தவிர வேறு யாரும் அல்ல.
கொழும்பில் பல இடங்களில் நீங்கள் பார்க்கலாம். சிறுமிகள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுகின்றார்கள். அங்கேயே சிறுமிகள் பூப்பெய்த எத்தனை சம்பவங்கள் பார்த்திருகிக்றோம். அதே வயது சிறுமி தன் வீட்டில் உள்ளபோதிலும் அவளுக்கு வேலைக்கார பெண்ணாக இந்த சிறுமி இருக்க வேண்டும். அந்த வீட்டு எஜமானர்களின் வக்கிரத்தனமான மனம் சிறுவர்களை வேலைக்கு ஏற்றுக்கொள்கிறது. அதுமட்டும் அல்ல அந்த சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்ற சந்தர்பங்களும் உள்ளன. தனக்கு எதிராக ஒரு பாலியல் துஷ்பிரயோகம் ஏற்படும் போது அதனை எதிர்கொள்ள கூடிய அறிவுக்கூட சிறுமிக்கோ, யுவதிக்கோ இல்லாமல் இருப்பது எத்தனை வேதயைான விடயம்.
சமூக வலைத்தள பதிவுகளும் அரசியல் வாதிகளின் அறிக்கைகளும் சில காலம் இவ்வாறு உயிரிழக்கும் சிறுமிகளை பேசு பொருளாக மாற்றும். பின்னர் அப்படியே மறந்து போகும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
இது தொடர்பில் பேசினால் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் பேசுவதால் எந்த பயனும் இல்லை. தீர்வுகள்தான் முக்கியம். அந்த தீர்வை நோக்கி மலையக சமூகத்தை இழுத்துச்செல்லுங்கள். நூறுவருடமாக வறுமையை பேசுகின்ற அரசியல் தலைமைகள் அதனை மாற்றும் வழியை ஏற்படுத்த வேண்டும். இன்று படித்து .விட்டு வேலையின்றி எத்தனை மலையக இளைஞர் , யுவதிகள் இருக்கின்றனர். எந்த பட்டதாரிக்காவது படித்ததற்கான பிடித்த வேலை கிடைக்கின்றதா.. மலையக்தின் சில அரசியல் வாதிகள் தமது இலாபத்திற்காக உயர்தர கல்வி தகுதியை சரிவர பூர்த்தி செய்யாதவர்களை கூட ஆசிரியர்கள் ஆக்கினார்கள். சிறந்த தொழில் வாய்ப்பினை மலையகத்தில் பெற்றுக்கொடுக்காததது யாருடைய குற்றம்.
படி படி என்று கல்வியை திணிக்க முடியாது . வெறுமனே வாயால் கூறவும் முடியாது. படித்து அவன் தேர்ந்தெடுக்க வேண்டிய துறை.. அந்த இலக்கு அவனது கண்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த இலக்கு தன்னையும் தனது சமூகத்தையும் மாற்றும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கும் வர வேண்டும். அப்படி ஒரு மாற்றம் மலையகத்தில் ஏற்பட்டால் மாத்திரமே சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படும் நிலை மாறும். இல்லாவிட்டால் நாம் என்ன எழுதினாலும் பேசினாலும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துவது என்பது நாய்வாலை நிமிர்த்த முனைவது போன்றதாகவே இருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM