(நெவில் அன்தனி)
குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இ.போ.ச. கழகத்துக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டியை 1 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்ட ஜாவா லேன் கழகம் மிகவும் அவசியமான 2 புள்ளிகளை இழந்தது.
அதேவேளை, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூ ஸ்டார் கழகத்தை 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிகம்போ யூத் கழகம் வெற்றிகொண்டது.
இ.போ.ச. கழகத்துடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்ததன் காரணமாக ஜாவா லேன் கழகம் சம்பியனாவதற்கு இருந்த வாய்ப்பு சற்று குறைவடைந்துள்ளது.
இ.போ.ச.விடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஜாவா லேன் கழகம் ஒரு கோல் பின்னிலையில் இருந்து மீண்டுவந்து போட்டியை வெற்றி தோல்வியின்றி முடித்துக்கொண்டது.
ஒரு வாரத்துக்கு முன்னர் நிகம்போ யூத் கழகத்துடனான போட்டியில் முழுமையான திறமையை வெளிப்படுத்தி அபார வெற்றியை ஈட்டிய ஜாவா லேன் கழகம் நேற்றைய போட்டியில் ஆரம்பவியலாளர்கள் போன்று தடுமாற்றத்துடன் விளையாடியது.
போட்டியின் 32ஆவது நிமிடத்தில் இ.போ.ச. வீரர் சிவராஜா கிருசாந்தன் மத்திய களத்திலிருந்து பரிமாறிய பந்தை நோக்கி வேகமாக ஓடிய விஜயசுந்தரம் யுகேஷ் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு தனது அணியை முன்னிலையில் இட்டார்.
இடைவேளையின்போது இ.போ.ச. 1 - 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.
இடைவேளையின் பின்னர் இ.போ.ச. கோல்காப்பாளரின் கோல் கிக் முறையாக அமையாததைப் பயன்படுத்திக்கொண்ட ஜாவா லேன் கழகம் ரிஸ்கான் மூலம் கோல் நிலையை சமப்படுத்தியது.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு முயற்சித்த போதிலும் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் ஜாவா லேன் கழகத்துக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
நிகம்போ யூத் வெற்றி
நியூ ஸ்டார் அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் போட்டியில் சொந்த கோல் ஒன்றின் உதவியுடன் நிகம்போ யூத் கழகம் 2 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் எதனையும் போட்டிருக்கவில்லை.
எவ்வாறாயினும் இடைவேளையின் பின்னர் ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் நியூ ஸ்டார் வீரர் சமீர கிரிஷான்த சொந்த கோல் ஒன்றைப் போட்டுக் கொடுத்து எதிரணி நிகம்போ யூத்தை முன்னிலையில் இட்டார்.
தொடர்ந்து திறமையாக விளையாடிய நிகம்போ யூத் கழகம் 73ஆவது நிமிடத்தில் அன்தனி இக்வெக்புவோ போட்ட கோல் மூலம் மேலும் முன்னிலை அடைந்தது.
நான்கு நிமிடங்கள் கழித்து நியூ ஸ்டார் சார்பாக மூத்த வீரர் நதீக்க புஷ்பகுமார கோல் ஒன்று போட்டு அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
போட்டியின் கடைசிக் கட்டத்தில் நிகம்போ யூத் கோல் காப்பாளர் கனேஷ் கிருசாந்தா எல்லைக்கு வெளியே வைத்து பந்தை கையால் பிடித்ததால் மத்தியஸ்தரின் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
எவ்வாறாயினும் ப்றீ கிக்கை மொஹமத் அனாஸ் முறையாக பயன்படுத்தத் தவறியதால் கோல் நிலையை சமப்படுத்தும் வாய்ப்பை நியூ ஸ்டார் இழந்து போட்டியில் தோல்வியைத் தழுவியது.
நான்கு போட்டிகள்
இன்று (21) ஞாயிற்றுக்கிழமை நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.
அவற்றில் செரெண்டிப் கழகத்துக்கும் மாத்தறை சிட்டி கழகத்துக்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள போட்டி முக்கியம் பெறுகிறது.
ஜாவா லேன் கழகம் இரண்டாவது தடவையாக போட்டி ஒன்றில் வெற்றி பெறத் தவறியதால் இன்றைய போட்டி மாத்தறை சிட்டி கழகத்துக்கு தீர்மானம் மிக்கதாக அமையவுள்ளது.
இன்றைய போட்டியில் மாத்தறை சிட்டி கழகம் வெற்றி பெற்றால் அணிகள் நிலையில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் மாத்தறை சிட்டி கழகம் முதலிடத்தை அடைவதுடன் அதன் சம்பியனாகும் வாய்ப்பு சற்று அதிகரிக்கும். எனவே அதற்கான முயற்சியில் மாத்தறை சிட்டி கழகம் இறங்கும் என நம்பப்படுகிறது.
இதேவேளை சோண்டர்ஸ் கழகத்துக்கும் பெலிக்கன்ஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி குருநாகல் மாலிகாபிட்டி மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைவிட சொலிட் கழகத்துக்கும் கிறிஸ்டல் பெலஸ் கழகத்துக்கும் இடையிலான போட்டி அநுராதபுரத்திலும் மொரகஸ்முல்லை கழகத்துக்கும் சுப்பர் சன் கழகத்துக்கும் இடையிலான போட்டி காலியிலும் இன்று நடைபெறவுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM