குடந்தையான்
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை நாடு முழுவதிலும் உள்ள மக்கள் மூன்று நாட்கள் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இந்தியாவில் சுதந்திர உணர்வு வேட்கையை முதலில் விதைத்தது தமிழகம் தான் எனப்பல ஆதார குறிப்புகளுடன் பேசினார்.
இது வழக்கம் போல் தேசபக்தி குறித்து பா.ஜ.க. முன்வைக்கும் ‘இந்துத்துவா’ சார்ந்த தலைவர்களுக்கு எதிரான விடயம் என்றாலும், பிஹார் அரசியலில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒற்றை குரலில், பா.ஜ.க.விற்கு எதிரான விடயங்களை உரத்து பேசுவதன் முதற்கட்ட அறிகுறியாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தி.மு.க., பா.ஜ.க.விற்கு எதிரான அரசியலை இதுபோன்ற பொது நிகழ்வில் பேசுவது தற்போது அக்கட்சி பின்பற்றி வரும் உத்தியாகவுள்ளது. அதேதருணத்தில் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற எதிர்மறையான விடயங்களை தொடர்ந்து கையிலெடுத்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற வன்முறையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரின் பங்களிப்பு குறித்து இதுவரை காவல்துறை எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை.
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த இலட்சுமணன் என்ற இராணுவ வீரரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு மாறாக, பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கு பற்றியதும், இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அவரை வாழ்த்தும் கோஷங்கள் பா.ஜ.க.வால் திட்டமிட்டு எழுப்பியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துக்க வீட்டில் அரசியல் கட்சியின் ஆதரவு கோஷங்கள் எதற்கு? என்று கேட்ட மாநில நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மீது பா.ஜ.க.வினர் காலணிகளை வீசியுள்ளனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு புள்ளி விவரங்களை தெரிவித்து விளக்கம் கேட்க, அதற்கு நேரடியாக பதிலளிக்காத அவர், ஆத்திரமடைந்து தி.மு.க. ஆட்சி குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார்.
அதேநேரம், பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் மீது ஏற்கனவே கோபத்தில் இருந்த பா.ஜ.க.வினர், இதுதான் தருணம் என்று அவர் மீது காலணிகளை வீசி தாக்குதலை நடத்தினர். இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றாமல் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு காலணி வீசிய நபர்களை தமிழக காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.
பா.ஜ.க., தமிழகத்தில் வன்முறை, கலவரம் போன்றவற்றை உருவாக்கி, அதனூடாக ஆட்சி மீது மக்களிடத்தில் அதிருப்தியான எண்ணத்தை உருவாக்கி, உளவியல் ரீதியாக கவர்வதற்கு திட்டமிட்டு தயாராகி வருகிறார்கள். இதனை உளவுத்துறை மூலமாக கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின், பா.ஜ.க.விற்கு எதிராக தீவிர எதிர்வினையை ஆற்றாமல், நிதானித்து நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றதாக கூறப்படுகின்றது.
மேலும் தமிழகத்தில் கடலூர், மதுரை, தர்மபுரி, திருவாரூர், பொள்ளாச்சி என்று பல இடங்களில் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஆதிக்க மனப்பான்மையில், அடாவடி அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களின் நோக்கம் தமிழகத்தில் ஏதேனும் ஒரு வகையில் அரசியல் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி, அதற்கு ‘திராவிட முறைமையிலான’ அரசை காரணமாக்கி, அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்பதாகும்.
ஆனால் பா.ஜ.க.வின் காலணி அரசியல், வெறுப்பு அரசியல் போன்றவற்றுக்கு அதற்கே உரிய பாணியில் முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்து வருவதாக தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ள சிலர் பங்கு பற்றியது அரசிகள் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே தருணத்தில் இந்த தேநீர் விருந்தில் பன்னீர்செல்வம் அவருடைய ஆதரவாளர்களுடன் பங்கு பற்றியதும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் பங்குபற்றாததும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
முதல்வரை பொறுத்தவரை மத்திய அரசுடன், மாநில மக்களின் நலங்களுக்காக மட்டுமே இணக்கத்துடன் பயணிக்க வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், பா.ஜ.க.வின் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அவர் சரியான தருணத்தில் உரிய பதிலடியை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகன்றது.
ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது ஆளுநர் அளித்த விருந்தில் பங்குபற்றாத தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அமைச்சர்கள், தற்போது ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் பங்குபற்றியிருப்பது தமிழக மக்கள் நலன் சார்ந்த அரசியல் நடவடிக்கை என்ற வாதங்களே அதிகமாகவுள்ளது.
குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்ட தேநீர் விருந்தின் போது தி.மு.க. பங்குபற்றாததற்கு, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் என்ற மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பாதது ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டது.
அந்தத் தீர்மானம் தற்போது இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு விட்டதால் ஆளுநர் மீதான அதிருப்தி நீங்கியது. அதன் காரணமாகவே அவர் அளித்த சுதந்திர தின விழா தேநீர் விருந்தில் முதல்வர் பங்குபற்றினார் என்று முதல்வரின் தரப்பில் அர்த்தம் கற்பிக்கப்படுகின்றது.
ஆனால் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பொறுத்தவரை ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில் பன்னீர்செல்வம் மட்டும் பங்கு பற்றியதன் மூலம் மத்திய அரசு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது தரப்பினருக்கு மறைமுகமாக ஒரு எச்சரிக்கையை வெளிப்படுத்தப்பட்டுள்ளமை புலனாகிறது.
அ.தி.மு.க. ஒன்றுபட வேண்டும். அ.தி.மு.க. ஒற்றைத் தலைமையில் இயங்குவதை விட, அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று தான் பா.ஜ.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி செயற்பட்டு வருவதால், அவரை முடக்குவதற்கான அல்லது அவரை வழிக்குக் கொண்டுவருவதற்கான காரியங்களில் பா.ஜ.க.வின் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை அக்கட்சியில் சேர்வதற்கு முன் ரஜினி அரசியல் இயக்கத்தை தொடங்கியிருந்தால், அதில் இணைவதற்கு ஆர்வமாக இருந்தவர் என்றும், அவர் கட்சி தொடங்காததால் வேறு வழியில்லாமல் பா.ஜ.க.வில் இணைந்ததாகவும், தகவல்கள் உள்ளன.
அதனால் விரைவில் அண்ணாமலை, அவரைச் சார்ந்த கட்சியினர் விரிக்கும் வலையிலேயே வீழ்ந்து அரசியல் ரீதியாக ஆதரவற்றவராக மாறக்கூடும் என்று தெரிவிப்பவர்களும் உண்டு. பா.ஜ.க. தொடர்ந்து தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் திராவிட முறைமை பாணியிலான அரசையும், அதன் தலைவரான ஸ்டாலினின் பொறுமையை சோதிக்கும் வகையிலும் தங்களுடைய நடவடிக்கையை அமைத்துக் கொண்டு, தி.மு.க. அரசை தொடர்ந்து சீண்டும் என்பது மட்டும் உறுதியாக தெரிய வருகிறது.
இந்நிலையில் இதற்கு உரிய முறையில் பதிலளித்து வரும் தி.மு.க., எப்போதும் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கும் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. அக்கட்சியின் தொண்டர்கள் ஆதங்கத்துடன் தலைமையிடம் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை. இதனால் இனி வரும் காலங்களில் பா.ஜ.க. தி.மு.க.வை தொடர்ந்து சீண்டும். ஆனால் அதற்கு தி.மு.க. உரிய முறையில் பதிலளிக்கிறதா? அல்லது தீவிரமான முறையில் எதிர்வினையாற்றுகிறதா? என்பதைப் பொறுத்தே தமிழகத்தின் அரசியல் நகரவுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM