(ஆர்.ராம்)
அன்று ஆகஸ்ட் 3ஆம் திகதி, கிழக்கு மாகாண பிராந்திய அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன் மற்றும் செயலாளர் பரஞ்சோதிப்பிள்ளை பரமேஸ்வரன் “ஆலயத்தினை அண்மித்துள்ள கீழ் பகுதி சமதரையில் 58 வியாபார நிலையங்களை நிரந்தரமாக அமைக்கவுள்ளோம். அவற்றுக்கு மின்சார மற்றும் நீர் வழங்கல் வசதிகளையும் வழங்கவுள்ளோம்” என்ற தகவலை பரிமாற்றுகிறார் தொல்பொருளியல் திணைக்களத்தின் திருமலை மாவட்ட அதிகாரி.
“அவ்வாறான தீர்மானமொன்று எங்குமே எடுக்கப்படவே இல்லையே”என்று பதிலுரைகின்றனர் ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் மற்றும் செயலாளர்.
அச்சமயத்தில், “நாங்கள் உங்களிடத்தில் அனுமதி கோரவில்லை. அவ்வாறு கோர வேண்டிய அவசியமும் இல்லை. சம்பிரதாயபூர்வமாக உங்களுக்கு தகவலொன்றை பரிமாற்றுகின்றோம்”என்று பதிலளிக்கின்றார் தொல்பொருளியல் திணைக்களத்தின் அந்த அதிகாரி.
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பரிபாலனசபைத் தலைவர் திலகரட்ணம் துஷ்யந்தன், ஒரு சட்டத்தரணி. ஆதலால் அவர், “தொல்பொருளியல் சட்டத்தின் சரத்து 20இன் பிரகாரம், அடையாளப்படுத்தப்படும் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளதே தவிரவும், அங்கு நிர்மாணங்களைச் செய்ய முடியாதல்லவா” என்று வாதிடுகின்றார்.
ஆனால் அவரது வாதம் வெற்றிபெறவில்லை. ஏனென்றால், பிராந்திய அதிகாரி வெறுமனே 'அம்பு' மட்டும் தான். 'தொல்பொருளியலின் பெயரால் தமிழின தொன்மைகளை ஆக்கிரமிக்கும் தென்னிலங்கையின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்' என்ற வில்லால் எய்யப்பட்ட அம்பேமாவட்ட அதிகாரி. அதனால் தர்க்கம் செய்வதால் பயனில்லை.
தொல்பொருள் பிரகடனம்
தமிழர் தேசத்தின் தலைநகரான திருகோணேமலையில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தரால் பதிகம்பாடப்பெற்ற திருத்தலமாகவும், பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் திகழ்வது திருக்கோணஸ்வரம். இவ்வாலயத்தின் வரலாற்ற சிறப்பம்சங்களின் பட்டியல் நெடியது.
அத்துணை பெருமைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த ஆலயம் 1981ஆம் ஆண்டு மிகப்பெறுமதியான தொல்பொருளியல் பகுதியாக அடையாளம் காணப்பட்டு வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து, இந்த ஆலயத்தில் சிறுகல்லொன்றை அகற்றுவது கூட சட்டத்திற்கு முரணான விடயமாகும். இதனை, நன்குணர்ந்த பரிபாலன சபையினர் அதன்பிராகரமே ஆலயத்தை நிருவகித்தும் வந்துகொண்டிருக்கின்றனர்.
அளவிடை
அவ்வாறிருக்க, திருகோணேஸ்வர ஆலயம் இரண்டு பிரதான பகுதிகளைக் கொண்டது. அதில் முதலாவது பிரதான ஆலயம் அமைந்திருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதி 18ஏக்கர்கள் ஒரு ரூட் 29பேர்ச்சஸ் அளவு நிலப்பரப்பைக் கொண்டதாகும்.
இரண்டாவது, பாவநாசம் தீர்த்தத்தை அண்மித்துள்ள 3ஏக்கர் 2ரூட் ஒருபேர்ச் அளவு நிலப்பரப்பைக் கொண்டதாகும். இதனைவிடவும், பிரதான ஆலயத்தின் கீழ்பகுதியில் உள்ள கோட்டை வாசலில் 26பேர்ச்ஸ் நிலப்பரப்பு ஆலயத்திற்குச் சொந்தமானதாகவே உள்ளது.
ஆலயத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பு பற்றிய விபரங்கள், 1971ஆம் ஆண்டு, அப்போதைய பரிபாலனத் தலைவர் எம்.கே.செல்வராசாவின் பெயரில் காணப்படும் ‘உரித்து வரைபடத்தில்’ மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.
‘நிலமே’யும் கடைகளும்
இந்நிலையில், 2008ஆம் ஆண்டு ஐ.தே.க.விலிருந்து வெளியேறிய சுசந்த புஞ்சிநிலமே சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளவும், அவர் தேர்தலில் களமிறங்குவதற்கு திருகோணமலை தொகுதி வழங்கப்படுகின்றது.
இரத்தினபுரியில் இருந்து ஆதரவாளர்களுடன் வந்து திருமலை கச்சேரிக்கு அருகில் தங்கியிருந்த காலத்தில், அவரது ஆதரவுக்குழாத்தில் இருந்த பெரும்பான்மை சமூகத்தவர்களால் ஆலய வளாகத்தினுள் மூன்று வியாபார நிலையங்கள் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, நகரசபையிடத்தில் எவ்விதமான அனுமதியையும் குறித்த வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் பெற்றிருக்கவில்லை. அப்போதைய ஆலய நிருவாகத்தினரும், அந்த விடயத்தில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 'வயிற்றுப்பிழைப்புக்காகத்தானே' என்ற மனோநிலையில் பொருட்டாக அவர்கள் கொண்டிருக்கவில்லை.
அதன்விளைவு, அவை 58 வியாபார நிலையங்களாக விரிவடைந்து நிற்கின்றது. அதுமட்டுமன்றி அத்தனை வியாபார நிலையங்களினதும் உரிமையாளர்கள் பெரும்பான்மை சமூகத்தவர்கள்.
ஆரம்பித்த தலையிடி
வியாபர நிலையத்தை அடியொற்றி ஆலயப்பகுதிக்குள் பெரும்பான்மை சமூகத்தினரின் அதீதமான பிரசன்னம் ஏற்படவும், யதார்த்தத்தை உணர்ந்த பரிபாலன சபையினர், கடைகளை அகற்றுவதற்கு காய்களை நகர்த்தினார்கள். அதனால், வியாபார நிலைய உரிமையாளர்கள் மல்லுக்கட்ட ஆரம்பித்தனர்.
பின்னர் இவ்விடயம் 2018இல் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் எதிர்கட்சித்தலைராக இருந்த சம்பந்தனும் அவருடன் நல்லுறவில் இருக்கும் சுசந்த புஞ்சிநிலமேயும் பிரசன்னமாகியிருந்தனர்.
அவர்களின் முன்னிலையில் விடயம் ஆராயப்பட்டு, குறித்த வியாபரா நிலையங்களை ஆலயத்தின் முகப்பில் உள்ள ‘கிளிப் கொட்டேஜ்’ பகுதிக்கு இடமாற்றுவதெனவும், அங்கு நகரசபையினரால் வியாபார நிலையங்களுக்கான நிர்மாணம் செய்யப்பட்டு கையளிக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
துரத்திய துரதிஷ்டம்
ஆனால், குறித்த தீர்மானம் நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் ஏற்பட்டன. முதலில் நகரசபையிடத்தில் போதிய நிதி காணப்பட்டிருக்கவில்லை. பின்னர், ஆலயம் அதற்கான நிதியை நகரசபைக்கு வழங்குவதற்கு முன்வந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது, மத்திய அரசில் ஆட்சிக்குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. பின்னர் கொரோனா நிலைமைகள் என்று காலம் கடந்துவிட்டது.
தலைதூக்கிய நெருக்கடி
வடக்கு, கிழக்கில் அபிவிருத்திக்கான உதவிகளை மேற்கொள்வதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் ‘இந்தியா’ திட்ட வரைவுகளை அண்மையில் கோரியிருந்தது.
அதற்கு அமைவாக, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனால் வழங்கப்பட்ட வரைவில், 'திருக்கோணஸ்வரத்துக்கான இராஜகோபுர முன்மொழிவும்' செய்யப்பட்டிருந்தது.
கோணஸ்வரத்திற்கான இராஜகோபுரத்தினை அமைப்பதற்கு இந்தியத் தரப்பில் சாதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்ட நிலையில் அண்மையில் சிற்பசிற்பாசாரிகள் ஆலயத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.
சிற்பாசாரிகளின் விஜயம், ஆலயப்பகுதியில் வியாபார நிலையங்களை கொண்டிருப்பவர்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. தமது, வியாபார நிலையங்கள் அகற்றப்படப்போகின்றன என்பதை குறிப்பால் உணர்ந்துள்ளனர்.
அதன்பின்னரே, ஆலயத்தின் தலைவரும், செயலாளரும், தொல்பொருளியல் திணைக்கள மாவட்ட அதிகாரியால் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் தொல்பொருளியல் திணைக்களத்தின் வகிபாகம் என்னவென்பது வெளிச்சமாகின்றது.
முரண்நகை
அண்மைய காலங்களில் தேரோடும் வீதி விஸ்தரிப்பதற்கும் ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அழிந்துபோன அன்னதான மடத்தினை மீளமமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் தொல்பொருளியில் திணைக்களம் அனுமதிகளை வழங்கவில்லை. ஆலமரக்கிளையொன்று அகற்றப்பட்டதற்காக ஆலய பரிபாலன சபையினருக்கு 'தொன்மங்களை சீர்குலைத்தால் சட்டநடவடிக்கை' என்று இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், தொன்மங்களை உடைய ஆலயப்பகுதியில் வியாபார நிலையங்களை நிரந்தமாக அமைத்துக்கொடுப்பதற்கும் அப்பணியை தானே முன்னெடுப்பதற்கும் தொல்பொருளியல் திணைக்களம் எவ்வாறு இணங்கியது. அச்செயற்பாட்டை அத்திணைக்களம் எந்த சட்ட அதிகாரத்தின் கீழ் மேற்கொள்கின்றது என்பது பிரதான கேள்வியாகிறது.
பூச்சியநிலை
அண்மைக்காலமாகவே, கோணேஸ்வரர் ஆலயத்தின் திருப்பணிகள் முன்னெடுப்பதற்கு தொல்பொருளியல் திணைகளம் முட்டுக்கட்ட போட்டுவருகின்றது. இந்த நிலையில், இராஜகோபுர நிர்மாணம் சாத்தியமாகுமா என்ற ஐயப்பாடுகளும் அதிகரித்துள்ளன.
திருகோணேஸ்வர ஆலய நிலைமைகள் குறித்து கரிசனை கொள்ளுமாறு, சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஐயப்பதாச குருக்கள், அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவரும் செஞ்சொற்செல்வருமான கலாநிதி.ஆறு.திருமுருகன், ஆகியோர் பிரதமர் மற்றும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் கோரியுள்ளனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றிலும், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரம் பொது வெளியிலும் நிலைமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் எந்தவிரதமான பிரதிபலிப்புக்களும் இதுவரையில் கிடைக்கவில்லை. பூச்ச நிலைமையே நீடிக்கின்றது.
பேராபத்தான திட்டங்கள்
திருக்கோணேஸ்வர ஆலயத்தில் வியாபார நிலையங்களை நிர்மாணத்தல் என்ற விடயம் தான் தற்போதைக்கு வெளிப்பட்டாலும், இதன் பின்னால் பேராபத்தான திட்டங்கள் மறைந்துள்ளன.
அதாவது, கோணேஸ்வர ஆலத்திற்கு கீழ்ப்பகுதியில் சங்கமித்த விகாரை காணப்படுகின்றது. இதுவரலாற்று முக்கியத்துவமானதாக கூறப்படுகின்றது. ஆனால் கோணேஸ்வரர் ஆலயத்தினை மையப்படுத்தியே வீதி நிர்மாணங்கள் செய்யப்பட்டிருப்பதால் குறித்த விகாரை பிரசித்தமடையாது காணப்படுகின்றது என்ற சிந்தனை விகாராதிபதி உள்ளிட்டவர்களுக்கு உண்டு.
எனவே, கோட்டைவாசல் அருகிலிருக்கும் இராணுவ முகாம் ஊடாக சங்கமித்த விகாரைக்கு செல்கின்ற போக்குவரத்து ஏற்பாடுகளை தவிர்த்து, விகாரையை நேரடியாக மையப்படுத்தும் வீதியை பிரதானப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுகின்றது.
குறித்த வீதி பிரதானப்படுத்தப்பட்டால், கோட்டை வாசல் பாதுகாப்பு காரணங்களை காண்பித்து நிரந்தரமாக மூடப்படும். அதன்பின்னர் சங்கமித்த விகாரைக்கான வீதியே பிரதானப்படுத்தப்படும். பின்னர், தொல்பொருளியல் திணைக்களத்தால் முன்மொழியப்பட்டுள்ள வியாபார நிலையங்கள் அமைக்கப்படும் பகுதியை குறித்த வீதியூடாக பயணித்து, படிகள் மூலமாகவே ஆலயத்திற்குள் பிரவேசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அவ்வாறாயின், சங்கமிதத விகாரையைக் கடந்தே கோணேஸ்வரை அடையவது நியதியாகிவிடும். இதுதான் திட்டத்தின் முதலாவது அங்கம்.
இரண்டாவது, சங்கமித்த விகாரைக்கான குறித்த வீதியை விஸ்தரித்து கடற்கரை வீதியுடன் இணைப்பதாகும். இதன்மூலமாக, ஏற்கனவே, மத்தறை, காலி மற்றும் தங்கல்ல ஆகிய பகுதியில் இருந்து வருகை தந்து 'கொரியாவத்த' என்னும் பெயரில் உருவாகியுள்ள சிங்கள மீனவக்கிராமத்துடன் தொடர்புபடுத்த முடியும். அத்துடன், அக்கிராமத்துக்கு அருகில் உள்ள ஏனைய வெற்றுநிலங்களில், கோணேஸ்வரர் ஆலய வியாபார நிலையத்தை சேர்ந்தவர்கள் மற்றும் இதர தரப்பினர்களுக்கான குடியேற்றங்களையும் தாரளமாகவே மேற்கொள்ள முடியும்.
ஆக, தமிழரின் தொன்மம் நிறைந்த பகுதியில் வாழ்வாதரத்தின் பெயரால் வியாபார நிலையங்களை அமைத்து, ஆக்கிரமிப்புக்கான வாழிடங்களை உருவாக்குவாக்குவதற்கு, தொல்பொருளியல் திணைக்களம் தூபமிடுகின்றது என்பது தான் அப்பட்டமான உண்மை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM