நல்லூர் கந்தசாமி பெருங்கோயில் ‘ஶ்ரீ குமார கோபுர கலசாபிஷேகம்’ இன்று

By Vishnu

18 Aug, 2022 | 09:45 PM
image

உமாச்சந்திரா பிரகாஷ்

நல்லூர் கந்தசாமி பெருங்கோயிலில் குமாரதாஸ் மாப்பாண முதலியாரால் 1965 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த திருப்பணி மரபை, குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் மறைவுக்குப் பின்னர் 11 ஆவது கோயில் அதிகாரியாக கடந்த வருடம் பொறுப்பேற்ற அவரது மகனான குமரேஷ் சயந்தன் குமாரதாஸ் மாப்பாண முதலியார் இந்த வருடமும் நிறைவேற்றியுள்ளார். 

நல்லூர் கந்தசாமி பெருங்கோயிலின் வடக்கு திசையில் அமைந்துள்ள குமார இராஜகோபுரத்திற்கு உள்ளக கோபுரமாக குபேர திக்கு குமார கோபுரம் மற்றும் குமார மணிக்கோபுரம் ஆகியன இந்த வருட திருப்பணியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நல்லூர் கோயிலின் தெற்கு வாசலில் மிகப்பெரிய இராஜகோபுரம் அமைந்துள்ளதுடன், அதன் உள்ளே சண்முகருக்கு சிறிய இராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. நல்லூர் கோயிலில் மூலஸ்தானத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் வேற்பெருமானுடன், சண்முக பெருமான், முத்துக்குமாரசுவாமி மற்றும் பழனியாண்டவர் ஆகிய சந்நிதிகளில் முருகப் பெருமான் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

 சண்முகப் பெருமானுக்கு தெற்கிலே பெரிய மற்றும் சிறிய என இரண்டு கோபுரங்கள் திருப்பணி ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுபோன்று முத்துக்குமாரசுவாமிக்கு நேராக பின்புறமாக வடக்கு (குபேர) திசையில் அமைந்துள்ள குமார இராஜகோபுரத்திற்கு உள்ளக கோபுரமாக குபேர திக்கு குமார கோபுரம் மற்றும் குமார மணி கோபுரம் ஆகியன முருகன் அருளால் இந்த வருட பெருந்திருவிழா காலத்திற்கு உரிய திருப்பணியாக நிறைவேற்றப்பட்டு, நாளை (19.08.2022) வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ‘ஶ்ரீ குமார கோபுரம் கலசாபிஷேகம்’ இடம்பெற இறையருள் கூடியுள்ளது.  

தெற்கில் அமைந்துள்ள இராஜகோபுரத்திற்கு உட்புறமாக சண்முகப் பெருமானுக்கு அமைக்கப்பட்ட சிறிய இராஜகோபுரம் போன்று, வடக்கு திசையில் உள்ள பெரிய குபேர இராஜகோபுரத்திற்கு உட்புறமாக முருகப்பெருமான் உள்வீதி வலம் வரும் வகையில் குபேர திக்கு குமார கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 

குறித்த திருப்பணிக்கான அத்திபாரம் கடந்த வருடம் இடம்பெற்ற கந்தசஷ்டி விரத காலத்தில், சண்முகப்பெருமான் வீதிவலம் வந்து எழுந்தருளியபோது இடப்பட்டது. நல்லூரின் திருப்பணிகள் அனைத்தையும் முருகப்பெருமானே ஆரம்பித்து வைப்பது பாரம்பரியமாகும். கொவிட் 19 தொற்று காரணமாக அரசாங்கம் அறிவித்த சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கடந்த வருடம் சஷ்டி விரத காலத்தில், முருகப்பெருமானின் திருக்கல்யாண தினத்தன்று ஆலய அந்தணர்கள் மற்றும் ஆலய ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன், மிகவும் அமைதியாக திருப்பணி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 9 மாதங்களில் குறித்த திருப்பணி முருகன் அருளால் நிறைவடைந்துள்ளது. 

நல்லூர் கந்தசாமி பெருங்கோயிலின் வடக்கு திசையில்  10 ஆவது கோயில் அதிகாரியான அமரர் குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலத்தில் திருப்பணி செய்யப்பட்ட மணிக்கூட்டு கோபுரம் உள்ளது. குறித்த மணிக்கூட்டு கோபுரமானது 4 ஆவது இரகுநாத மாப்பாண முதலியார் கட்டிய மணிக்கூட்டு கோபுரத்திற்கு பின்னர், முதலாவதாக கட்டப்பட்ட மணிக்கூட்டு கோபுரமாக அமைகின்றது. 

அதன் அருகில் சண்முகதாஸ் மாப்பாண முதலியார் கட்டிய சாகரச் செம்மனை அமைந்துள்ளது. அதற்கு அருகில் குமாரதாஸ் மாப்பாண முதலியார் திருப்பணி செய்த 2 ஆம் கால மணிக்கூட்டு கோபுரம் அமையப் பெற்றுள்ளது. அதனை அண்டிய பகுதியிலே உள்ள இடைவெளியில் குறித்த குமார மணிக்கோபுரம் தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. 

நல்லூர் ஆலயத்திற்குள் இருந்து பூந்தோட்டத்திற்கு செல்லும் குமார வாசல் உள்ளது. அந்த குமார வாசலையும் மணிக்கூட்டு கோபுரத்தையும் நேராக இணைக்கும் வகையிலே ஏற்கனவே ஆலயத்தில் புழக்கத்தில் இருந்த மணி ஏற்றப்பட்டு இன்னும் ஒரு மணிக்கூட்டு கோபுரம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. 

குமார மணிக்கோபுரத்தின் ஒரு பக்கம் 1960 களின் பிற்பகுதியில் குமாரதாஸ் மாப்பாண முதலியார் திருப்பணி செய்த 2 ஆம் கால மணிக்கூட்டு கோபுரமும், மறுபுறத்திலே புதிதாக கட்டப்பட்ட குமார மணிக்கோபுரமும் அழகன் முருகன் வாழும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. கிட்டத்தட்ட 9 மாத காலத்தில் நல்லூரில் இந்த வருட மகோற்சவத்திற்கான திருப்பணி முருகன் அருளால் சிறப்பாக நிறைவு பெற்று இன்றைய தினம் கும்பாபிஷேகம் இடம்பெறுகிறது. 

கோயில் அதிகாரிகள் வடிவமைக்கின்ற திருப்பணிகளை தினக்கூலி வேலை செய்பவர்கள் மிகச் சிறப்பாக ஒவ்வொரு வளைவுகளையும் சுழிவுகளையும் கலையம்சங்களையும் முருகனுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையிலே நிறைந்த கலையம்சத்துடன் செய்வது நல்லூரின் சிறப்பாகும். நல்லூர் ஆலயத்திற்கும் கந்தசாமியாருக்கும் உரித்தான தனித்துவமான கட்டட வடிவமைப்புக்களை கோயில் அதிகாரிகள் ஒப்பந்தகாரர்களிடம் கொடுக்காமல், பக்தியுடன் திருப்பணியாக நிறைவேற்றும் ஸ்தபதிமார்களிடம் கொடுப்பது நல்லூர் மரமாகும். நல்லூர் ஆலயத்தில் ஒப்பந்த அடிப்படையில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதுடன் வருடத்தின் 365 நாட்களும் நல்லூரில் உளிச்சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கும். குறித்த உளிச்சத்தம் பலருக்கு படியளப்பதுடன், இன்றும் வருடாந்த திருப்பணி மரபு முருகன் அருளால் தொடர்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'அழுவதற்கு நேரமில்லை' - நூல் பார்வை

2022-11-24 09:50:38
news-image

அடம்பனில் ஓர் ஆற்றல் கலைக்கல்லூரி

2022-11-23 15:47:20
news-image

'நிலைமாற்றத்திற்கான பயணம்' மேடை நாடக விழா

2022-11-23 14:25:16
news-image

‘இலக்கிய வித்தகர்’ விருது பெற்றார் சம்மாந்துறை...

2022-11-22 15:04:03
news-image

திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி...

2022-11-16 14:40:44
news-image

இராஜேந்திரசோழன் பொலனறுவையில் நிறுவிய 7 சிவாலயங்கள்

2022-11-15 15:05:04
news-image

நிலத்தொடர்பற்ற சமூகம் - சிரேஷ்ட விரிவுரையாளர்...

2022-11-14 12:25:05
news-image

நிசாந்தம் கவிதை நூல் ஒரு கண்ணோட்டம்

2022-11-12 11:22:08
news-image

பாரம்பரியத்தை போற்றும் 'கோவார்' சுவரோவியக் கலை

2022-11-10 21:37:20
news-image

கர்நாடக சங்கீதம் தவிர்ந்த இசைப் பாடல்களை...

2022-11-05 19:51:13
news-image

உங்களது 'நீங்கள்' பயங்கரமானவர்கள்! - கவிதாயினி...

2022-10-27 16:51:30
news-image

காயத்ரி சித்தரின் 89 ஆவது ஜெயந்தி

2022-10-26 16:27:05