(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும். அதற்காக அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டிய தேவை கிடையாது.
தொடர்ந்தும் அடக்கு முறைகளை பிரயோகித்துக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்க முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் 18 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
ஐக்கிய மக்கள் சக்தி சர்வகட்சி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று ஏற்கனவே தெளிவாக அறிவித்துள்ளது.
இதற்கு அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சர்வகட்சி வேலைத்திட்டம் இதுவரையிலும் முன்வைக்கப்படவில்லை.
இதற்கான காரணம் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாது என , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உறுதியளித்துள்ளமையாகும்.
அடுத்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. எனினும் அவர் அதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு தயாராக இல்லை.
சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்பதற்கு பலரும் தயாராகவுள்ளனர். எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் இந்த அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்கப் போவதில்லை.
பாராளுமன்ற தெரிவுக்குழுக்கள் ஊடாக அரசாங்கத்தின் சிறந்த வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
அதனை விடுத்து அமைச்சுப்பதவிகளை ஏற்க வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அடக்குமுறைகளைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்திற்கு எவ்வாறு ஒத்துழைப்புக்களை வழங்குவது ?
ரணில் விக்கிரமசிங்க தற்போது ரணில் ராஜபக்ஷவாகியுள்ளதால் , அவரது அரசாங்கத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை இழக்க நேரிடும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்.
பொதுஜன பெரமுன உறுப்பினர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எமது பொறுமைக்கும் எல்லையுண்டு.
பாராளுமன்றத்தில் நிதித் தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிற்கு வழங்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.
அதனை வழங்க மறுக்கும் அரசாங்கம் அமைச்சுப்பதவிகளை ஏற்குமாறு அழைப்பு விடுக்கிறது. நாம் எதிர்க்கட்சி என்ற ரீதியில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதே வேளை , அரசாங்கத்தின் சிறந்த திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்று செயற்படுபவர் எனில் , ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு , பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள வழக்குகளை மீள விசாரணைக்கு எடுக்க வேண்டும்.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். நாட்டில் தற்போது 20 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை போதுமானது. அத்தோடு இராஜாங்க அமைச்சுக்கள் , பிரதி அமைச்சுக்கள் தேவையற்றவை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM