சுதந்திர போராட்டக்கள பின்னணியில் பான் இந்திய படைப்பாக தயாராகும் ‘1770’

Published By: Digital Desk 5

17 Aug, 2022 | 08:25 PM
image

வங்க மொழி எழுத்தாளரான அமரர் பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘ஆனந்தம் மடம்’ எனும் நாவலைத் தழுவி, ‘1770’ என்ற பெயரில் பான் இந்திய அளவிலான திரைப்படமொன்று தயாராகிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேகமான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜியின் எழுத்திலும் எண்ணத்திலும் உருவாகியிருக்கும் ‘1770’ என பெயரிடப்பட்ட புதிய திரைப்படத்தை ‘ஆகாஷ்வாணி’ எனும் தெலுங்கு படத்தை இயக்கிய இயக்குநரான அஷ்வின் கங்கராஜு இயக்குகிறார். 

இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்தாக அமைந்த ‘வந்தே மாதரம்’ எனும் மந்திர சொல் இடம்பெற்ற ‘ஆனந்த மடம்’ எனும் புதினத்தைத் தழுதி தயாராகும் இந்த படத்திற்கு ‘பாகுபலி’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்’ ஆகிய வெற்றிப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய கதாசிரியர் விஜேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் வங்காள மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் இந்த திரைப்படத்தை எஸ் எஸ் 1 என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பி. கே. என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் ஒன்றிணைந்து தயாரிக்கிறார்கள்.  

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும், சுதந்திர வேட்கை வீரியத்துடன் ஊட்டிய ‘வந்தே மாதரம்’ எனும் பாடல் பிறந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் பின்னணியில் ஒலிக்க, இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

மேலும் ‘1770’ படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு நவராத்திரி திருவிழாவின் போது வெளியிடப்படும் என்றும், தீபாவளி திருநாள் கொண்டாட்டத்தின் போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய முழு விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.  

இதனிடையே படத்தின் இயக்குநரான அஷ்வின், தன்னுடைய குழுவுடன் இணைந்து, 1770 ஆம் ஆண்டு காலகட்டத்தை ஆராய்ந்து, தனித்துவமான காட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right