மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெறவுள்ள கிரிக்கெட்போட்டிகளில் இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து

Published By: Digital Desk 5

17 Aug, 2022 | 03:18 PM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள  6ixty  (ரி10) மற்றும் கரிபியன் பிறீமியர் லீக்  (CPL)  இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தப்பத்து விளையாடவுள்ளார்.

இந்த இரண்டு வகை சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 9 வெளிநாட்டு வீராங்கனைகளில் சமரி அத்தப்பத்துவும் ஒருவராவார்.

மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றுள்ள சமரி அத்தப்பத்து, இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் கயானா அமேஸன் வொரியர்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

98 மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விளiயாடி 96 தடவைகள் துடுப்பெடுத்தாடியுள்ள சமரி அத்தப்பத்து ஒரு சதம், 5 அரைச் சதங்கள் அடங்கலாக 2,079 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட 200 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆரம்ப வீராங்கனை சமரி அத்தப்பத்து, மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6 சதங்களைக் குவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 2017இல் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் குவித்த ஆட்டமிழக்காத 178 ஓட்டங்களே அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகும்.

சமரி அத்தப்பத்து, அயாபொங்கா காக்கா (தென் ஆபிரிக்கா), ஐசானி வகேலா (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரே ஸ்டெபானி டெய்லர் தலைமையிலான கயானா  அமேஸன் வொரியர்ஸ் அணியில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீராங்கனைகளாவர்.

இரண்டு வகை சுற்றப் போட்டிகளில் பார்படொஸ் றோயல், ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் விளையாடவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் தலா 3 வெளிநாட்டவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

6ixty என்றழைக்கப்படும் 60 பந்துகளைக் கொண்ட ரி10 மகளிர் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 24ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை நடைபெறும். கரிபியன் பிறீமியர் லீக் ஆகஸ்ட் 31ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 4ஆம் திகதி நிறைவடையும்.

6ixty  கிரிக்கெட் போட்டி வித்தியாசமான விதிகளுடன் விளiயாடப்படவுள்ளது.

ஒவ்வொரு அணிக்கும் 10 விக்கெட்களுக்கு பதிலாக 6 விக்கெட்களே வழங்கப்படும். 6ஆவது விக்கெட் வீழ்ந்ததும் அந்த அணி சகல விக்கெட்களையும் இழந்ததாக கருதப்படும்.

துடுப்பாட்டத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் 2 பவர் ப்ளே ஓவர்கள் வழங்கப்படும். முதல் 12 பந்துகளில் 2 சிக்ஸ்கள் அடிக்கப்பட்டால் அந்த அணிக்கு 3ஆவது பவர் ப்ளே கிடைக்கும். 3ஆவது பவர் ப்ளேயை 3ஆவது ஓவரில் இருந்து 9ஆவது ஓவர் வரை எந்த நேரத்திலும் எடுக்கலாம்.

முதல் 5 ஓவர்கள் ஒரு பக்கத்திலிருந்து பக்கம் மாறாமல் வீசப்படும். கடைசி ஓவர்கள் மற்றைய பக்கத்தில் இருந்து வீசப்படும். ஒரு பந்துவீச்சாளருக்கு 2 ஓவர்கள் மாத்திரமே வழங்கப்படும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓர் அணி ஓவர்களை நிறைவு செய்யத் தவறினால் கடைசி ஓவரின் போது களத்தடுப்பில் இருந்து ஒருவர் நீக்கப்படுவார்.

இவ்வாறான புதிய விதிகளுடன்  6ixty  கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்