இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரி சர்வதே கிரிக்கெட் மைதனத்தில் இடம்பெற்று வருகின்றது.

முதல் போட்டியில் வெற்றிக்கொண்டது போல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தும் இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் மூன்று விக்கட்டுகளே தேவைப்படுகின்றன.

சிம்பாப்வே அணிக்கு இமாலய வெற்றியிலக்காக 491 ஓட்டங்களை நிர்ணயித்த இலங்கை அணி, பந்துவீச்சிலும் சிம்பாப்வே அணியை மிரட்டி வருகின்றது.

இரண்டாவது இன்னிங்ஸை நேற்று நான்காவது நாள் உணவு இடைவேளைக்கு பின்னர் ஆரம்பித்த சிம்பாப்வே அணி இலங்கை அணித்தலைவர் ஹேரத்தின் பந்துக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆரம்பத்திலேயே தடுமாறியதுடன், முதல் விக்கட்டினை 16 ஓட்டங்களுக்கு இழந்தது.

முதல் இன்னிங்ஸில் 80 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சிம்பாப்வே அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் செரி 8 ஓட்டங்களுடன் ஹேரத்தின் பந்தில் ஆட்டமிழக்க, மவோயோ 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் அடுத்தடுத்து வந்த வீரர்களும் சீரான  இடைவேளையில் ஆட்டமிழக்க, சிம்பாப்வே அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவின் போது விக்கட்டுகளை இழந்தது 180 ஓட்டங்களை பெற்றக்கொண்டது.

இறுதிவரையில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய எர்வின் 65 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், திரிபனோ 4 பந்துகளுக்கு முகங்கொடுத்து எவ்வித ஓட்டங்களும் பெறாமல் களத்தில் உள்ளார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகளில் தனது 6 ஆவது பத்துவிக்கட்டினை கைப்பற்றியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

மேலும் தனஞ்சய டி சில்வா மற்றும் லஹிரு குமார ஆகியோர் தங்களது பங்கிற்கு தலா ஒரு விக்கட்டினை கைப்பற்றினர்.

இதனடிப்படையில் சிம்பாப்வே அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த வேண்டுமானால் போட்டியின்  5 ஆவது நாளாகிய இன்று மூன்று விக்கட்டுகள் கைவசமிருக்க  311 ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றது.

இதனை தவிர்த்து இந்த போட்டியை சமப்படுத்த சிம்பாப்வே அணி சிந்திக்குமானால், இன்று ஆட்டநேரம் முடியும்வரை எஞ்சியிருக்கும் விக்கட்டுகளை கைவிடாமல் களத்தில் நிற்க வேண்டும்.

இதேவேளை இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை 2-0 என கைப்பற்ற வேண்டுமாயின் எஞ்சியிருக்கும் மூன்று விக்கட்டுகளை இன்றைய ஆட்ட நேர முடிவுக்குள்  இலங்கை அணி  கைப்பற்ற வேண்டும்.

எவ்வாறாயினும் சிம்பாப்வே அணியின் முயற்சிக்கு ஹேரத்தின் பந்துவீச்சு தடையாக இருக்கும் என்பது கிரிக்கெட் ஆர்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.