கலாநிதி ஜெகான் பெரேரா
" மனிதகுலத்தின் இயற்கையான வாழ்வுச்சூழல் ஒரு போர்நிலையில் இருந்தது.அதில் வாழ்வு தனிமையானதாக, தரம் தாழ்ந்ததாக,வெறுக்கத்தக்கதாக,கொடுமையானதாக,குறுகிய காலமுடையதாக இருந்தது.ஏனென்றால் தனிமனிதர்கள் 'எல்லோரும் எல்லோருக்கும் ' எதிரான ஒரு போர் நிலையில் இருந்தார்கள் " என்று தத்துவஞானி தோமஸ் ஹொப்ஸ் கூறினார். அதனால் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
இதை தத்துவஞானி ஜோன் லொக் சமூக ஒப்பந்தம் ( Social Contract) என்று அழைத்தார்.தனிமனிதர்கள் தங்களது சுதந்திரங்களில் சிலவற்றை விடடுக்கொடுத்து ஆட்சியாளரின் அதிகாரத்துக்கு அல்லது பெரும்பான்மை ஒன்றின் தீர்மானத்துக்கு பணிந்துபோவதற்கு வெளிப்படையாக அல்லது குறிப்பால் உணர்த்தி ஒத்துக்கொண்டார்கள் என்பதே சமூக ஒப்பந்தத்தின் வாதமாகும்.சமூகங்கள் எவ்வாறு ஆளப்படவேண்டும் என்பதற்கான விதிகளை அரசியலமைப்புகள் வகுத்தன.
ஹொப்ஸும் லொக்கும் வாழ்ந்த 17 ஆம் நூற்றாண்டில் இருந்து அரசியலமைப்புச் சிந்தனையின் பரிணாம வளர்ச்சி ஆட்சியாளர்களின் அதிகாரங்களை ஒழுங்கமைப்பதற்கும் ஆட்சியாளர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் வழிவகைகளை கண்டறிவதாகவே இருந்துவந்திருக்கிறது.
அதிகாரத்தைக் கொண்டிருப்பவர்கள் மீது மட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது.அவர்கள் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருப்பது அவசியம்.
ஆட்சியாளர்களுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால், பொறுப்புக்கூற வைக்கப்படாவிட்டால் அவர்கள் பெரும்பாலும் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
அதிகாரம் ஊழலுக்கு வழிவகுக்கும் ; முற்றுமுழுதான அதிகாரம் முற்றுமுழுதான ஊழலுக்கு வழிவகுக்கும் என்பது உண்மைநிலையாக இருந்துவந்திருக்கிறது.
ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரங்களை வகைதொகையின்றி பயன்படுத்திவந்திருப்பதை நாம் 74 வருடங்களாக பார்த்திருக்கிறோம்.சில ஆட்சியாளர்கள் மற்றைய ஆட்சியாளர்களை விட கூடுதலாக அதிகாரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
40 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னதாக தமிழ்ப் பிரிவினைவாத கிளர்ச்சியை கையாளுவதற்காக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் ஆட்சியாளர்களின் அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு இன்னமும் கூட நடைமுறையில் நிலைத்திருக்கிறது.அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட்ட 20 வது திருத்தத்தின் வாயிலாக இலங்கையின் ஆட்சியாளர்கள் முற்றுமுழுதான அதிகாரத்தைச் செலுத்திய கடந்த மூன்று வருடங்களில் நாட்டு நிலைவரம் மோசமடைந்ததகை் கண்டோம்.முதற்தடவையாக நாடு வங்குரோத்து நிலையை அடைந்திருக்கிறது.
அரசியலமைப்புக்கான 22 திருத்தம் தொடர்பான தற்போதைய விவாதத்தின் நோக்கம் ஆட்சியாளர்களாக இருக்கும் அரசியல்வாதிகளின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு சிவில் சமூகத்தின் பாத்திரத்தை விரிவுபடுத்தி உறுதிப்படுத்துவதாகும்.
அரசியலமைப்பு பேரவையில் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளாக இருக்கப்போகும் மூவர் பற்றியதே இப்போது முக்கியமான கேள்வி.சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தின் பெரும்பான்மைக்கு ஏற்புடையவர்களாக இருக்கவேண்டும் ( இதன் மூலமாக இறுதி தீர்மானம் அரசாங்கத்தினுடையதாக இருப்பதற்கே வழிவகுக்கப்படுகிறது) என்று திருத்தத்தின் தற்போதைய வரைவு கூறுகிறது.
துரதிர்ஷ்டவசமாக, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான இலங்கையின் அனுபவம் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்களின் அதிகாரங்களை வலுப்படுத்தும் திசையிலேயே அமைந்துவந்திருக்கிறது.சீர்திருத்தங்கள் என்று கூறப்படுபவை பெரும்பாலும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்களின் கரங்களை வலுப்டுத்தியிருக்கின்ற போதிலும் மக்களுக்காகவே அவ்வாறு செய்யப்பட்டதாக நியாயப்படுத்தப்படுகிறது.
தேய்வுறும் கட்டுப்பாடுகள்
1972 அரசியலமைப்பு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து நாடு பெற்றுக்கொண்ட அரசியலமைப்பை பதிலீடு செய்தது.நீதித்துறையினதும் சிவில் சேவையினதும் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய முந்தைய அரசியலமைப்பு மனித உரிமைகளுக்கும் சமூகங்களுக்கிடையில் பாரபட்சமின்மைக்குமான விசேட பாதுகாப்புக்களையும் கொண்டிருந்தது.
ஆனால், அந்த பாதுகாப்புகள் 1972 அரசியலமைப்பில் இருந்து நீக்கப்பட்டன.ஆளும் அரசியல்வாதிகள் இறைமையுடைய மக்களின் விருப்புக்களை உருவகப்படுத்துகிறார்கள் என்று நியாயம் கற்பிக்கப்பட்டு அந்த புதிய அரசியலமைப்பு அவர்களுக்கு அதிகாரமளிப்பதில் நாட்டம் காட்டியது.தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதிகள் தெரிவுசெய்யப்படாத நீதிபதிகளையும் சிவில் சேவையாளர்களையும் விட மக்களுக்கு கூடுதல் நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள் என்று வாதிடப்பட்டது.
சிவில் சேவையாளர்கள் மக்களிடமிருந்து விலகியிருப்பதால் பக்கச்சார்பற்றவர்களாக இருக்கிறார்கள்.இந்த பெறுமதி பெருமளவுக்கு விளங்கிக்கொள்ளப்படவி்ல்லை.புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததும் நீதிபதிகள் பதவி நீக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள்.1978 அரசியலமைப்பு 1972 அரசியலமைப்பின் நடவடிக்கைகளையே திரும்பவும் செய்தது.நீதிபதிகள் மீண்டும் பதவிநீக்கப்பட்டு அவமதிப்பாக நடத்தப்பட்டார்கள்.பின்னர் ஒரு கட்டத்தில் நீதிபதிகள் கல்வீச்சுக்கும் கூட இலக்கானார்கள்.
நாம் வளர்த்தெடுத்த இந்த கலாசாரங்கள்தான் இன்றைய நெருக்கடிக்கு வழிவகுத்து அறகலய மக்கள் போராட்டத்துக்கான தளத்தை அமைத்தன.1978 அரசியலமைப்பு, 1972 அரசியலமைப்பில் இருந்த மத்தியமய அதிகாரத்தை மேலும் பலபடிகள் உயர்த்திச் சென்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என்ற தனியொரு பதவியிடம் குவித்திருக்கிறது.மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக இருந்த மன்னர்களைப் போன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி சட்டத்துக்கு மேலானவராகக்கூட இருக்கமுடியும் என்றாகிறது.
ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுகின்ற அதிகாரம் ஒன்று மாத்திரமே தன்னிடம் இல்லை என்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கூறினார்.தெரிவுசெய்யப்படுகின்ற ஆட்சியாளர்களின் கைகளில் இந்த அதிகாரங்கள் போகும்போது மட்டுப்பாடு இன்றி அதிகார துஷ்பிரயோகமும் ஊழலும் வளரும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளிடம் இருந்து சுதந்திரம் அடைந்தபோது ஆசியாவின் உச்சியில் இருந்த நாடு இன்று அடிப்பரப்புக்கு அண்மையாக நிற்கிறது.அதன் மக்களின் வாழ்நாள் சேமிப்புகள் ஒரு அரை வருடத்திற்குள் அரைவாசியாக்கப்பட்டு விட்டது.இதற்காக ஒரு அரசியல்வாதியேனும் சட்டரீதியான பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படவில்லை.
22 வது அரசியலமைப்பு திருத்தம் 2001 ஆம் ஆண்டின் 17 வது அரசியலமைப்பு திருத்தத்துடன் ஆரம்பித்த அரசியலமைப்பு திருத்தங்கள் குழாமைச் சேர்ந்ததாகும்.அரசாங்கம் பலவீனமடைந்ததன் காரணமாக முன்னாள் ஜனாதிபதி அந்த திருத்தத்துக்கு இணங்கினார்.இப்போது போன்றே அப்போதும் சமுதாயத்தின் வசதிகுறைந்த மக்களின் கட்சியான ஜே.வி.பி. திருத்தத்தை கொண்டுவருந்ததில் முன்னணியில் நின்றது.அந்த திருத்தத்தின் விளைவாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துடனும் அரச நிறுவனங்களுடனும் சிவில் சமூகத்துடனும் அந்த அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
தடுப்புக்கள் மற்றும் சமப்படுத்தல்கள் (Checks and Balances ) முறைமையை பலப்படுத்தி அதன்முலமாக தேசிய நலன்களுக்காக நல்லாட்சியை மேம்படுத்துவதே 17 வது திருத்தத்தின் பின்னால் இருந்த எண்ணமாகும்.இதை ஒத்ததாகவே 19 திருத்தமும் அமைந்தது. ஒரு கூட்டணி கட்சிகள் தாங்கள் மக்களின் தேர்தல் ஆணையூடாக பதவி கவிழ்த்த ஆட்சியாளரின் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு எதிராக இந்த திருத்தத்தை கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றின.
உயர்மட்ட ஊழல்
ஆனால், ஆட்சியாளர்களின் அதிகாரங்கள் மீதான மட்டுப்பாடுகளை பிறகு ஆட்சியாளர்களாக வரவிருப்பவர்களோ அல்லது அவர்களது கட்சியைச் சார்ந்தவர்களோ மறுப்பின்றி ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.17 வது திருத்தம் 2010 ஆண்டில் கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தத்தினால் தலைகீழாக மாற்றப்பட்டது.
அந்த திருத்தம் ஜனாதிபதி பதவி இழந்த அதிகாரங்களை மீட்டுக்கொடுத்ததுடன் மேலும் சில அதிகாரங்களையும் வழங்கியது.இதனால் ஆட்சியாளர்களின் அதிகார துஷ்பிரயோகம் கடுமையாக அதிகரித்தபோது அடுத்து வந்த அரசாங்கம் 19 வது திருத்தத்தைக் கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்களை மீண்டும் ஒரு தடவை குறைத்தது.
2015 ஜனாதிபதி தேர்தலில் பெறப்பட்ட மக்கள் ஆணையின் பிரகாரமே இவ்வாறு செய்யப்பட்டது.ஆனால் மீண்டும் 2019 ஆம் ஆண்டில் அடுத்த அரசாங்கத்தை அமைத்தவர்கள் 19 வது திருத்தத்தை நிராகரித்து 20 வது திருத்தத்தை கொண்டுவந்தனர்.இது ஜனாதிபதி இழந்த அதிகாரங்களை மீண்டும் வழங்கியதுடன் மேலும் சில அதிகாரங்களையும் கொடுத்தது.
ரத்துச் செய்யப்படவிருக்கும் இந்த 20 வது திருத்தத்தின் கீழ் தான் நாட்டில் ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் உச்சநிலையை எட்டி மக்களை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார இடர்பாடுகள் மற்றும் வறுமைக்குள் மூழ்கடித்தன.
இந்த இடர்பாடுகள் தான் அறகலய அல்லது போராட்ட இயக்கம் தோன்றுவதற்கு வழிவகுத்தன.இந்த இயக்கம் ஜனாதிபதி மாளிகையை மக்கள் முற்றுகையிடுவதிலும் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அமைச்சரவையை பதவிவிலக வைப்பதிலும் முடிந்தது.
வாழ்நாள் பூராவும் கஷ்டப்பட்டு உழைக்கும் நடுத்தர வர்க்கம் மூன்று வருட காலத்திற்குள் சுருங்கிப்போய் வறியவர்களின் அணியில் சேர்ந்திருக்கிறது. ஆனால் ஆட்சியாளர்களோ வாழ்நாள் சேமிப்பை இழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு முன்னுரிமை கொடுப்பது குறித்து சிந்திப்பதாக தெரியவில்லை. அவர்களது கவனம் எல்லாம் 2015 - 2019 காலகட்டத்தில் ஆட்சியாளர்களில் சிலருக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் நேர்ந்தவற்றிற்கும் அறகலய போராட்டத்தின்போது தீக்கிரையாக்கப்பட்ட ஆட்சியாளர்களின் வீடுகளுக்கும் நஷ்டஈடு வழங்குவதிலேயே இருக்கிறது.
" அறகலய ராஜபக்சாக்கள் போன்ற அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, பரந்தளவில் ஊழல் அரசியல் சக்திகளையும் இலக்குவைத்தது.கோட்டா வீட்டுக்கு போ,225 பேரும் வீட்டுக்கு போ என்ற சுலோகங்கள் மூலம் இது வெளிப்பட்டது.அரசியல் அதிகாரத்தில் இருந்து குறிப்பிட்ட சில தனிநபர்களை அகற்றுவதில் மக்களின் சக்தி முற்றுமுழுதாக கவனம் செலுத்தியது.குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் பதவிகவிழ்க்கப்பட்ட பின்னரும் ஆளும் அதிகாரவர்க்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கிறது.கெட்டவர்கள் நீக்கப்பட்ட அதேவேளை மோசமானவர்கள் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.இது இஞ்சியைக் கொடுத்து மிளகாயை வாங்குவது என்ற சிங்கள பழமொழியை ஒத்ததாகும்.ராஜபக்சாக்கள் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அதே ஆளும் கும்பலும் அரசியல் முறைமையும் அப்படியே தொடர்ந்து - மேலும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மறுபிறப்பாக -- இருக்கின்றன" என்று இந்திய அரசியல் ஆய்வாளர் கலாநிதி மாயா ஜோன் எழுதியிருக்கிறார்.
பொருளாதார இடர்பாடுகள், பொருட்கள் தட்டுப்பாடு, அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசைகள் மற்றும் கடுமையான விலை அதிகரிப்பு மற்றும் சமூக சகிப்புத்தன்மையின் மட்டுப்பாடுகளின் ஒரு பிரதிபலிப்பே போராட்ட இயக்கமாகும். விலை அதிகரிப்புகள் மக்களின் வருமானத்தை உண்மையில் அரைவாசியாக்கிவிட்டது.சமுதாயத்தில் சில பிரிவினர் மற்றைய பிரிவினரையும் விட கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.ஆனால் போராட்ட இயக்கத்துக்கு எதிராக ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் நுட்பமானவையாகவும் கடுமையானவையாகவும் இருந்தன.போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்கள் ஒவ்வொருவராக கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள்.மீண்டும் போராட்டத்தை நடத்த அவர்கள் துணிச்சல் கொள்ளாதிருப்பதை உறுதிசெய்யும் நோக்குடனேயே இவ்வாறு செய்யப்படுகிறது.
சடடத்தை நிலைநாட்டுவது என்ற வெளித்தோற்றத்தை காட்டிக்கொண்டு போராட்ட இயக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்தமாத கூட்டத்தொடரின் கண்காணிப்பில் இருந்து தங்களை காப்பாற்றும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் அரசாங்கம் நம்பிகிறது போலும்.
2018 பிற்பகுதியில் அரசியலமைப்புச் சதியொன்றை( நீதித்துறை உறுதியாக நின்றதால் அந்த முயற்சி தோல்விகண்டது) அரங்கேற்றுவதற்கு முயற்சித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரை பலவந்தமாக விரட்டிவிட்டு அவரின் ஆசனத்தில் அமர்ந்தார்கள்.கதிரைகளைத் தூக்கியெறிந்தார்கள்.மைக்ரோபோன்களை பிடுங்கிவீசினார்கள்.ஆனால் சதிமுயற்சி தோல்வி கண்டபோதிலும் கூட அவர்களில் எவரும் இதுவரையில் தண்டிக்கப்படவில்லை.
ஆனால், போராட்ட இயக்கத்தில் இணைந்து ஜனாதிபதியின் கதிரையில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதியின் பியர் குவளையை எடுத்த ஆர்ப்பாட்டக்காரர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால் ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள், குற்வாளிகளாக காணப்பட்ட அமைச்சர்கள் இன்னமும் அரசாங்கத்தில் இருக்கிறார்கள்.இத்தகைய பாரபட்சமான நடவடிக்கைகள் விலைவாசி உயர்வினாலும் பொருட்கள் தட்டுப்பாட்டினாலும் கஷ்டங்களை அனுபவிக்கின்ற மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
அரசியலமைப்பு பேரவையில் உறுப்பினர்களாக இருக்கக்கூடிய சிவில் சமூகத்தவர்களை தெரிவுசெய்வதற்கான அதிகாரத்தை ஆட்சியாளர்களுக்கு வழங்கும் அரசியலமைப்புக்கான 22 வது திருத்தத்தின் தற்போதைய வடிவம் மக்களின் குரலுக்கு அரசாங்கம் செவிமடுக்கும் என்பதற்கான ஒரு சமிக்ஞை அல்ல.பொறுப்புக்கூற வைக்கப்படுவதையும் அதிகாரத்தை நீதியான முறையில் பயன்படுத்தவேண்டிய அவசியத்தையும் ஏற்றுக்கொள்வதில் உள்ள தயக்கம் எதிர்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுவதற்கே வழிவகுக்கும்.அத்ததைய நிலை உருவாகும்போது மக்களைப் பொருட்படுத்தாமல் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதே ஆட்சியாளர்களின் பதிலாக இருக்கும்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்ற போதிலும், இராணுவ பட்ஜெட்டுக்கு ஏன்முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்பதை இதில் இருந்து புரிந்துகொள்ளமுடியும்.புதிய தேர்தல்கள் ஊடாக மாத்திரமே வரக்கூடிய பாராளுமன்றத்திலும் அரசியல் செயன்முறைகளிலும் மக்கள் குரல் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத பட்சத்தில் ஆட்சிமுறைமையில் பொறுப்புக்கூறலை எதிர்பார்ப்பது கஷ்டமேயாகும்.இது வரைவில் அனர்த்தத்துக்கே வழிவகுக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM