ஆண்ட்ரியாவின் ‘கா ’ வுடன் 3 திரைப்படங்களின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

16 Aug, 2022 | 12:45 PM
image

நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்த 'கா' படத்துடன் இணைந்து,  'டிராமா', 'லாகின்' என மூன்று சிறிய பட்ஜட் திரைப்படங்களை தமிழ் திரை உலகின் புதிய தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகியிருக்கும் சசிகலா புரொடக்சன்ஸ் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த மூன்று திரைப்படங்களின் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

அறிமுக இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கா'. இதில் நடிகை ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் மறைந்த குணச்சித்திர நடிகர் சலீம் கௌஸ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா வனவிலங்குகளை புகைப்படமெடுக்கும் புகைப்படக் கலைஞராக நடித்திருக்கிறார். அறிவழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சுந்தர் சி. பாபு இசையமைத்திருக்கிறார்.ஷாலோம் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ் தயாரித்திருக்கும் இந்தத் திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியீட்டுக்காக காத்திருந்தது.

மலையாள இயக்குநர் அஜு கிழூமலா இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் தமிழ் திரைப்படம் 'டிராமா'. சிங்கிள் ஷாட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ஜெய் பாலா, காவ்யா பில்லு, கிஷோர், சார்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷினோஸ் சம்சுதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு பிஜிபால் இசையமைத்திருக்கிறார். 18 நடிகர் நடிகைகள், 80 தொழில் நுட்ப கலைஞர்கள், 180 நாட்கள் பயிற்சியும், ஒத்திகையும் மேற்கொண்டு, எட்டு மணி தியாலத்தில் சிங்கிள் ஷாட்டில் எடுத்த திரைப்படம் 'டிராமா'. தயாரிப்பாளர் அர்ஜுன் ராஜ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் மூன்று ஆண்டுகளாக வெளியீட்டிற்காக காத்திருந்தது.

அறிமுக இயக்குநர் ராஜேஷ் வீரமணி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'லாகின்'. இதில் வினோத் கிஷன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி நடித்திருக்கிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் பயன்படுத்தப்படும் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உருவாகும் சைபர் க்ரைம் திரில்லர் திரைப்படமான இதனை ஜே எஃப் எல் புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.‌ கடந்த சில ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருந்தது.

இந்த மூன்று திரைப்படங்களையும் தமிழ் திரை உலகில் புதிதாக அறிமுகமாகி இருக்கும் சசிகலா புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம், வெளியீட்டு உரிமையை கைப்பற்றி வெளியிடுகிறது.

இது தொடர்பாக இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் அண்டனி தாஸ் பேசுகையில், '' நாங்கள் எங்களுடைய சசிகலா புரொடக்சன்ஸ் எனும் நிறுவனம் மூலமாக திரைப்படங்களுக்குரிய பின்னணி பணிகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறோம். தற்போது பட விநியோகத் துறையில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த வகையில் சிறிய பட்ஜட்டில் உருவான 'கா', ' டிராமா' , ' லாகின்' என மூன்று திரைப்படங்களை முதல் கட்டமாக வெளியிடுகிறோம். தமிழ் திரையுலகில் ஏராளமான கனவுகளுடன் சின்ன பட்ஜட்டில் படைப்புகளை உருவாக்கும்  கலைஞர்களையும், அவரது படைப்புகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் நாங்கள் செயல்பட தொடங்கி இருக்கிறோம்.'' என்றார்.

'கா', 'டிராமா', 'லாகின்' ஆகிய மூன்று படங்களின் முன்னோட்டமும் இணையத்தில் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்