ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் வெற்றியின் ‘ஜீவி2’

By Digital Desk 5

15 Aug, 2022 | 01:59 PM
image

நடிகர் வெற்றி, கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஜீவி 2' திரைப்படம், ஆஹா டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதனை முன்னிட்டு இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

'ஜீவி' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் வி. ஜே. கோபிநாத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜீவி 2'. 'ஜீவி' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி இருக்கும் இந்தப் படத்தில், முதல் பாகத்தில் கதையின் நாயகனாக நடித்த நடிகர் வெற்றி, கதையின் நாயகனாக தொடர்கிறார். 

இவருக்கு ஜோடியாக நடிகை அஸ்வினி சந்திரசேகர் நடித்திருக்கிறார். இவர்களுடன் வை. ஜி. மகேந்திரன், மைம் கோபி, ரோகிணி, கருணாகரன், ரமா, அஹமத், விஜே முபாசிர், அருவி திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

'ஜீவி 2' திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதியன்று 'ஆஹா' தமிழ் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினார்.

படத்தைப் பற்றி இயக்குநர் வி. ஜே. கோபிநாத் பேசுகையில், '' ஜீவி படத்தின் முதல் அத்தியாயம் வெளியான பிறகு ரசிகர்கள் கொடுத்த பேராதரவின் காரணமாக, தயாரிப்பாளர் பிக் பிரிண்ட் கார்த்திகேயன் கொடுத்த உற்சாகத்தில்  'ஜீவி 2' படத்தின் திரைக்கதையை உருவாக்கத் தொடங்கினேன். முதல் பாகத்தில் கதாசிரியராக பணியாற்றிய பாபு தமிழ், அவருடைய இயக்கத்தில் உருவான திரைப்படத்தின் பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால், 'ஜீவி 2' படத்தின் திரைக்கதையை வேறு ஒரு குழுவுடன் இணைந்து உருவாக்கினேன். இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூறியபோது உடனே தயாரிக்க ஒப்புக்கொண்டார். இன்று படம் நிறைவடைந்த பிறகு பட மாளிகையில் வெளியாகாமல் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பை விட கூடுதலாகவும், வித்தியாசமாகவும் இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.'' என்றார்.

இதனிடையே 'ஜீவி படத்தின் முதல் பாகம், ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியானது. இந்த படத்திற்கு தொடர்ந்து ஆதரவு கிடைத்து வருவதால், தற்போது ஆஹா டிஜிட்டல் தளம் 'ஜீவி 2' படத்தை நேரடியாக வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்