உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்  Haircut  மக்களை எவ்வாறு பாதிக்கும்? 

14 Aug, 2022 | 08:34 PM
image

 ரொபட் அன்டனி 

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் அதனை முகாமைத்துவம் செய்வதற்கும் நாட்டில் உள்நாட்டு கடன்மறுசீரமைப்பு செயற்பாடு ஒன்றுக்கு செல்ல வேண்டி இருக்கின்றது என்ற அர்த்தம் பொதிந்த  வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்தவாரம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இலங்கை அரசாங்கம் சர்வதேச கடன்மறுசீரமைப்பு செயற்பாட்டை மேற்கொண்டுள்ள நிலையில் உள்நாட்டு ரீதியிலும் இவ்வாறு கடன்மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளமை பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக அமைந்திருக்கின்றது.

இதனையடுத்து குறிப்பாக வங்கிகள் நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் வைப்பு செய்துள்ள தரப்பினர் மற்றும் ஊழியர் சேமலாப  நிதியத்தின் பயனாளர்களும் தமது வைப்புக்களுக்கு என்ன நடக்கப்போகின்றது என்று சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.  ஆனால் அவ்வாறு  உடனடியாக இது குறித்து அச்சப்படவேண்டியதில்லை. காரணம் உள்நாட்டில் கடன் மறுசீரமைப்பு என்பது பாதிப்பு மிக்கது என்பது சகலருக்கும் தெரியும்.  மத்திய வங்கியின் ஆளுநர் கூட கடந்த மாதம் இலங்கை உள்நாட்டு மறுசீரமைப்புக்கு செல்லாது என்று குறிப்பிட்டிருந்தார்.   ஆனால்  இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுமானால் அது  எதிர்மறை தாக்கங்களை கொண்டுள்ளது என்பதனை மறுக்க முடியாது.  எனவே இதனை செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்ற தொனியில் பொருளாதார நிபுணர்கள் கருத்து  வெளியிட ஆரம்பித்துள்ளனர். 

முதலில் உள்நாட்டில் கடன் மறுசீரமைப்பு செய்வது என்பது என்ன? அது எவ்வாறு நடைபெறும். அதனால் பாதிக்கப்படுகின்ற தரப்பினர் யார் என்பது தொடர்பில் பார்க்கவேண்டியுள்ளது.

அரசாங்கம் அதாவது திறைசேரி  வர்த்தக  வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம்  போன்றவற்றிடம் கடன்களை பெற்றிருக்கும்.  பிணைமுறிகள் ஊடாக இந்தக் கடன்கள் பெறப்படும். அதாவது குறிப்பிட்ட வீத வட்டிக்கு பிணைமுறிகளைப் பெற்று   அரசாங்கத்துக்கு வங்கிகள் நிதி நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியம் கடன்களை வழங்கும். இதனை அரச துறையிலான 100 வீத பாதுகாப்பான முதலீடுகள் என்றும் கூறமுடியும்.  குறிப்பிட்ட வீத வட்டி இலாபத்தை பெறும் நோக்கில்    இந்த பிணை முறிகளிலான முதலீடுகள் முன்னெடுக்கப்படும்.  அதாவது பிணைமுறிகளை பெற்றுக்கொண்டு வங்கிகள் நிதி நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியம் என்பன அரசாங்கத்துக்கு கடன் வழங்கும் நிலையில்  பின்னர்  வட்டியுடன் தவணைப்பணம் பெறப்படும். 

ஆனால் இந்த வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம்   என்பன மக்கள் தமது நிறுவனங்களில் வைப்புச் செய்திருக்கின்ற நிதியின் ஊடாகவே   இந்தப் பிணை முறி முதலீடுகளை செய்கின்றன. உதாரணமாக மக்கள் வர்த்தக வங்கிகளில் நீண்டகால மற்றும் நிலையான வைப்புக்களைச் செய்வார்கள். அந்த நிதியைக்கொண்டே வங்கிகள் திறைசேரியிடம்   பிணைமுறிகளைக் கொள்வனவு செய்யும். அதேபோன்று தொழிலாளர்களின் பணமே ஊழியர் சேமலாப   நிதியத்தில் வைப்பிலிருக்கும்.  அந்த நிதியைக்கொண்டே இந்த நிதியம்  இவ்வாறு பிணைமுறிகளில் முதலீடு செய்யும்.

இந்நிலையில் தற்போது அரசாங்கம் நிதிநெருக்கடியிலிருப்பதால் பிணைமுறிகளை வழங்கி பெற்றுக்கொண்ட நிதியை மீளசெலுத்த முடியாமலும் அவற்றுக்கான வட்டியை செலுத்த முடியாமலும் திணறிக்கொண்டிருக்கின்றது.  எனவே தம்மிடம் பிணைமுறிகளைப் பெற்றுக்கொண்ட வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம்   என்பனவற்றுடன் கடன் மறுசீரமைப்பை செய்துகொள்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இதற்கான சமிக்ஞையையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் எட்வகார்ட்டா நிறுவனம் ஏற்பாடு செய்த பொருளாதார மாநாட்டில் வெளியிட்டிருந்தார். 

கடன் மறுசீரமைப்பு என்றால்? 

இதனை விளங்கிக்கொள்வது  இலகுவானது. நாம் ஒருவரிடம் கடன் பெறுகிறோம். குறிப்பிட்ட காலத்துக்கு வட்டியையும் தவணைப்பணத்தையும் செலுத்துகிறோம்.  ஆனால் தற்போது நிதி நெருக்கடியினால் செலுத்த முடியவில்லை. என்ன செய்வது?  உடனே எமக்கு கடன் வழங்கியவரிடம் சென்று என்னால் செலுத்த கடனை முடியவில்லை , எனவே கடன் மறுசீரமைப்பு செய்து எனக்கு நிவாரணம் தாருங்கள் என்று கேட்கலாம்.  வட்டி வீதம் குறைக்கப்பட்டு, மீள்செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டு பெற்ற கடனில் ஒரு தொகையை குறைத்து கடன் மறுசீரமைப்பு செய்யலாம். இதில் மூன்றதாவது   முறை ஊடாக  கடன் கொடுத்தவருக்கு ஒரு நிதியிழப்பு  ஏற்படும். 

 

வட்டி வீதத்தை குறைத்தல்

இந்நிலையிலேயே  இந்த கடன் மறுசீரமைப்பு எந்த வழிகளில்  நடைபெறும் என்பது இங்கு முக்கியமாகும். அதாவது வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம்  நிதியம் என்பனவற்றுடன் அரசாங்கம் கடன்மறுசீரமைப்புத் தொடர்பில் முதலில் பேச்சு நடத்தும் .அதில் மூன்று முறைகள் கையாளப்படலாம். முதலாவது வழங்கப்பட்ட பிணைமுறிகளுக்கான ஏற்கனவே இணக்கப்பாட்டுக்கு வந்த வட்டி வீதத்தைக்குறைத்துக்கொள்வதன் ஊடாக  கடன் மறுசீரமைப்பு செய்யப்படலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர் சேமலாப   என்பன பெற்றுக்கொண்ட பிணைமுறிகளுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வட்டி வீதம் குறைவடையும்.

 மீள் செலுத்தும் காலம் நீடிப்பு

இரண்டாவதாக கடன் பிணை முறிக்கடன்களை மீளசெலுத்துவதற்கான காலத்தை நீடிக்குமாறும் இடையில் ஒரு நிவாரண காலப்பகுதியை வழங்குமாறும் அரசாங்கம் வங்கிகள் நிதி நிறுவனங்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம்  தி என்பனவற்றிடம் கோரலாம். இதனால் இந்த நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட ஒரு காலம் தாமதமாகியே தாம் பிணை முறியில் முதலீடு செய்த நிதி கிடைக்கும்.

கடனில் ஒரு தொகையை கழித்தல் (Haircut)

மூன்றாவதாக அரசாங்கம் இந்த நிதி நிறுவனங்களிடம் பிணைமுறி ஊடாக பெற்ற கடன்களில்  ஏற்கனவே செலுத்திவிட்ட தொகையை கழித்துவிட்டு மீதி நிலுவையிலிருக்கின்ற தொகையில் ஒரு குறிப்பிட்ட விகிதத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்படலாம். உதாரணமாக ஒரு வங்கிக்கு   அரசாங்கம்  10 கோடி ரூபாவுக்கு பிணைமுறி விற்பனை செய்திருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதில் ஏற்கனவே 2 கோடி ரூபா வட்டியுடன் செலுத்தப்பட்டிருந்தால் எஞ்சியிருக்கின்ற 8 கோடி ரூபாவிலிருந்த ஒரு தொகையை கழித்துக்கொள்ளுமாறு கேட்கலாம்.    இதனை Haircut  என்று கூறுவார்கள். இந்தமுறையின் கீழ் வழங்க வேண்டிய கடன்தொகை குறைக்கப்படும். அப்படியானால் பிணைமுறியை பெற்று கடன்வழங்கிய நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை குறைவாகவே கிடைக்கும். இதனால் வங்கிகள் ஊழியர் சேமலாப நிதியம் என்பன நிதி இழப்பை எதிர்கொள்ளும். இதுவே அபாயகரமான நிலைமையாக இருக்கின்றது. இந்த செயற்பாடுகளே கடன் மறுசீரமைப்பு என கூறப்படுகின்றது.  

மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவர்? 

ஆனால் இங்கு உள்நாட்டு கடன்மறுசீரமைப்புக் காரணமாக மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது முக்கியமாகும். உதாரணமாக மக்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வைப்பு செய்கின்ற நிதியைக்கொண்டே அந்த நிறுவனங்கள் அரச  பிணை முறிகளில் முதலீடு செய்கின்றன. இந்நிலையில் அந்த முதலீட்டு நிதி தொகை மறுசீரமைப்பின் ஊடாக குறைவாக கிடைக்கும் பட்சத்தில் அதன் ஊடாக ஏற்கனவே வங்கிகளில் பணம் வைத்திருக்கும் மக்கள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. காரணம் வங்கிகளுக்கு நிதி  இழப்பு ஏற்படும்போது திரவத்தன்மை குறையும்.  அதனூடாக வைப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள்.  இதனால் வங்கிகள் வெளிநாடுகளிடம் கடன் பெறவேண்டிய நிலை ஏற்படும். 

மேலும் வைப்பாளர்களுக்கான வட்டிவீதமும் குறைக்கப்படலாம்.  மீளப்பெறுகின்ற தொகை குறைக்கப்படலாம். வங்கியின் நிதித்திரவத்தன்மை பாதிக்கப்படலாம். எனினும் இவ்வாறு நடைபெறாதவாறு  வங்கிகள் முகாமைத்துவ பொறிமுறைகளை பிரயோகிப்பது முக்கியமாகும். எனினும் இது குறித்து மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் வகையில் மறுசீரமைப்பு நடைபெறாது என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேபோன்று ஊழியர் சேமலாப நிதியத்தில்   இந்த நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் பணமே காணப்படுகின்றது. அந்தப் பணமே அரச பிணைமுறைகளில் முதலீடு செய்யப்படுகின்றது. அதனால் மறுசீரமைப்பின் ஊடாக ஊழியர் சேமலாப   நிதியத்துக்கு கிடைக்க வேண்டிய நிதி குறைவடையும்போது அவற்றில் தொழிலாளர் வர்க்கத்தினர் பாதிக்கப்படலாம்.  எனவே  மக்கள் பாதிக்கப்படும் வகையிலான மறுசீரமைப்புக்கு  செல்வது குறித்து அவதானத்துடன் இருப்பது  அவசியமாகும். 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பொருளியல் துறை நிபுணர் கலாநிதி கணேசமூர்த்தி உள்நாட்டில் கடன்மறுசீரமைப்பு செய்யப்படும் பட்சத்தில் வங்கிகள் நிதிநிறுவனங்கள் பாதிக்கப்படும்.  அத்துடன் மக்களின் முதலீட்டு ஆர்வம் குறையும்.  இதனால் பொருளாதார ரீதியிலான நெருக்கடி ஏற்படும். நாட்டின் பணப்புழக்கமும் பாதிக்கப்படும். முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வதில் தயக்கம் ஏற்படும் என்று குறிப்பிட்டார்.

அதன்படி உள்நாட்டில் கடன் மறுசீரமைப்பு செய்யும் பட்சத்தி்ல் வங்கிகள் பாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் எந்தளவில்  இந்த மறுசீரமைப்பு  இடம்பெறும் என்பது பார்க்கப்படவேண்டும்.  ஆனால்  இதன் ஊடாக வங்கிகள் வெளிநாட்டு நிதி மூலங்கள் குறித்து அவதானம் செலுத்தும் நிலையும் காணப்படுகின்றது. எப்படியிருப்பினும்  இதனால் ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் சிந்திக்க வேண்டும்.

இதுகுறித்து சிரேஷ்ட சர்வதேச பொருளாதார துறை  ஊடகவியலாளர் ஷிஹார் அனிஸ் குறிப்பிடுகையில்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபடுவதாக தெரிகின்றது. இது வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியம் என்பவற்றின் நிதி நிலைமைகளைப் பாதிக்கும். முக்கியமாக Haircut   எனப்படுகின்ற முறையூடாக மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இந்த Haircut   முறையூடாக அரசாங்கம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்றுக்கொண்டுள்ள கடனில் 80 வீதத்தையே திருப்பி செலுத்த முடியும் என்று கூறினால்  அதனால் அந்த நிறுவன்களே பாதிப்படையும். அதேபோன்று அவற்றில் வைப்பு செய்த மக்களும் பாதிக்கப்படலாம்  என்று குறிப்பிட்டார். 

இலங்கையானது மொத்தக் கடன்களில்  உள்நாட்டில் 53 வீதத்தை கொண்டுள்ளது. மேலும் உள்நாட்டுக் கடன்களை பொறுத்தவரை  மொத்தத் தேசிய உற்பத்தியில் 74 வீதமாக காணப்படுகின்றது. அதாவது அரசாங்கமானது  12000 பில்லியன் ரூபா கடனை உள்நாட்டில் பெற்றுள்ளது. பொதுவாக  உலக நாடுகளில் மொத்த தேசிய உற்பத்தியில் 70 வீதத்துக்கும் அதிகமாக உள்நாட்டு கடன்கள் வரும்போது இவ்வாறு உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செய்யப்படும்.  அதனால்தான் தற்போது இலங்கையின் உள்நாட்டு கடன் மொத்தத் தேசிய உற்பத்தியில் 74 வீதமாக உள்ளதால் கடன் மறுசீரமைப்புக்கு செல்வது குறித்து ஆராயப்படுகின்றது. 

இலங்கையில் குறிப்பாக 5 அரச நிறுவனங்கள் வருடாந்தம் எதிர்கொள்கின்ற கடன் சுமை காரணமாகவே இவ்வாறு உள்நாட்டு அதிகரித்துச் செல்கின்றது. மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களைக் குறிப்பிட முடியும்.

தற்போது கடன் பெறப்பட்டுள்ள துறை மற்றும் வீதங்களைப் பார்க்கும்போது மொத்த உள்நாட்டு கடனில் 35 வீதம் வர்த்தக வங்களிடம் பெறப்பட்டுள்ளது. இதேபோன்று ஊழியர் மேலாப நிதியத்திலும் 27 வீதமான கடன் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடன்மறுசீரமைப்பின்போது  Haircut எனப்படுகின்ற கடன்தொகையை குறைக்கின்ற செயற்பாடு முன்னெடுக்கப்படும் பட்சத்தில் வங்கிகள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் நிதி இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படலாம். இது பாதிப்பைக்கொண்டு வரும்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள  பிரபல நிதி ஆய்வாளர் ரவி அபேயசூரிய இலங்கையர்கள் ஏற்கனவே நிதி ரீதியாக பாரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். ரூபாவின் வீழ்ச்சி 74 வீதமாகவும் பணவிக்கம் 60 வீதமாகவும் காணப்படுகின்றது. அதனூடாக மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். இந்நிலையில் மேலும் கடன் மறுசீரமைப்பு செய்து Haircut போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் அது மக்களை மேலும் பாதிக்கும். எனவே உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு மக்கள் இடமளிக்கக்கூடாது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொருளாதார நிபுணர்கள் இதனை வலியுறுத்த வேண்டும். Haircut போன்ற கடன் மறுசீரமைப்பை இலங்கையினால் தாங்கிக்கொள்ள முடியாது என்று குறிப்பிடுகிறார்.  

இந்த வகையில் ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக தற்போது நீதித்துறையில் இருக்கின்றவர்களும் ஏனைய பலதரப்பினரும் அவதானம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இது எக்காரணம் கொண்டும் ஏற்கனவே பாரிய நெருக்கடியில் சிக்கியிருக்கின்ற பொதுமக்களை பாதிப்பதாக அமையக்கூடாது. அதேபோன்று வங்கிகளில் வைப்பு செய்திருக்கின்றவர்கள் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்கள் ஆகியோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காக ஏங்கும்...

2024-05-27 16:39:16
news-image

ஒப்பந்த முறை கொடுப்பனவுகளுக்கு பழக்கப்பட்டுவிட்ட தோட்டத்...

2024-05-27 11:22:09
news-image

ஜனாதிபதித் தேர்தலும் மலையக மக்களும்..!

2024-05-27 14:16:32
news-image

ஈரான் ஜனாதிபதியின் மரணத்திற்கு யார் காரணம்?

2024-05-26 18:57:01
news-image

அஷ்ரப் அருங்காட்சியகமும் வாயால் சுட்ட வடைகளும்

2024-05-26 18:54:31
news-image

ஸ்லோவாக்கிய பிரதமர் கொலை முயற்சியும் மேற்குலகின்...

2024-05-26 18:53:55
news-image

நுணலும் தன் வாயால் கெடும்

2024-05-26 18:10:34
news-image

ஜனாதிபதி வேட்பாளராக மீண்டும் பொன்சேக்கா…?

2024-05-26 18:02:15
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சட்ட விரோத...

2024-05-26 18:00:51
news-image

ஒஸ்லோ அறிக்கையை துணைக்கு இழுப்பதேன் ?

2024-05-26 17:59:50
news-image

வரலாறு மன்னிக்காது

2024-05-26 17:57:06
news-image

உலக ஒழுங்கின் வீழ்ச்சி

2024-05-26 17:56:41