(ந.ஜெகதீஸ்)

கோப் குழுவிற்கு சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை எனினும் வெளியிடப்பட்ட அறிக்கை நீதியானது. அவ்வறிக்கையினை கொண்டு  மத்திய வங்கி நிதி மோசடி மூடிமறைக்கப்படாமால் அரசின் அதிகாரத்தால் முறையான விசாரணை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ரில் வின் சில்வா தெரிவித்தார். 

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னனியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மத்திய வங்கியில் இடம் பெற்ற நிதி மோசடி குறித்து அன்மையில் கோப் அறிக்கை வெளியிடப்பட்டு அதன் மூலம் ஊழல் மோசடிகள் தொடர்பில் தெளிவுப்படுத்தியிருந்தும் இதுவரையில் முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த கோப் அறிக்கை வெளி வந்த நாட்களில் இருந்து அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பினர் ஊழலுடன் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படவேண்டும் என தங்களுக்குள் வாத விவாதங்களை முன்வைத்த வண்ணமுள்ளனர்.

இந்நிலையில் மத்திய வங்கியில் மிகப்பெரிய நிதி மோசடி இடம் பெற்றுள்ளது ஆகவே குற்றம் இழைத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படவெண்டுமென அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் ஆளும் தரப்பினரே கோசம் எழுப்பவதனூடாக யாரை மேற்கோள் காட்ட முற்படுகின்றனர் என்பது கேலிகூத்தாக இருக்கின்றது.

மேலும் கோப் அறிக்கை வெளிவந்தும் இதுவரையில் இவ்விடயம் தொடர்பில் பிரதமர் தொடர்ந்தும் மௌனம் சாதித்தே வருகின்றார் இதன் மூலம் அவர் அரஜூன் மகேந்திரனை பாதுகாக்க முன்னிற்பது தெளிவாகின்றது இந்நிலையில் பிரதமரின் பெயரையும் கோப் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டுமென கூட்டு எதிரணியினர் வலியுறுத்துவது வேடிக்கையாக இருக்கின்றது.

 ஏனெனில் கோப் அறிக்கைக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் இல்லை.பிரதமரின் பெயர் குறிப்பிடப்படுமாக இருந்தால குறித்த அறிக்கை நீதி மன்ற விசாரணைக்கு முரணாக அமைந்து விடும். சுயாதினமாக செயற்படும் கோப் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கை நீதியானதாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவ்வறிக்கையின் அடிப்படையில் அசாங்கத்தின் அதிகாரத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.எனவே காலதாமதமின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வெண்டும் என்றார்.