(எம்.எம்.மின்ஹாஜ்)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் காணி பெறுமதி எல்லையை 20 இலட்சம் வரை அதிகரித்துள்ளோம். இதற்காக விசேட மத்தியஸ்த சபையொன்றை நிறுவியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

சமாதானம் ஏற்படுத்தப்படாமையினால் சர்வதேச தலையீடுகள் ஏற்பட்டது. எனவே இனிமேலும் இவ்வாறான நிலைமை ஏற்படாதிருக்க வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு படிப்படியாக தீர்வினை கண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மத்தியஸ்த சபையின் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் சமாதானம் மற்றும் சமத்துவம் ஏற்படுத்தப்படாமையின் காரணமாக சர்வதேச தலையீடுகள் அதிகரிக்க ஆரம்பித்தது. இதன்காரணமாக இலங்கை தேசம் சர்வதேசத்தினால் முடக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை கண்டு வருகின்றோம். தற்போது எமது செயற்பாடுகளுக்கு சர்வதேசம் முழுமையாக ஆதரவினை நல்கி வருகின்றது. 

அத்துடன் யுத்ததிற்கு பின்னர் வடக்கு கிழக்கு காணி பிரச்சினை விடயத்தில் தேசிய மத்தியஸ்த சபையொன்றை நிறுவியுள்ளோம். இதன்போது காணி பெறுமதி எல்லையை 20 இலட்சம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.