தொழிலாளர் சம்பள விவகாரம் ; வெற்றியும் தோல்வியும் இல்லா நிலை !

By Digital Desk 5

13 Aug, 2022 | 12:17 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

தோட்டத்தொழிலாளர்களுக்கு  நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்கும்படி மேன் முறையீட்டு நீதிமன்றம் பெருந்தோட்ட பிராந்திய கம்பனிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சம்பள நிர்ணய சபையின் மூலம் ஆயிரம் ரூபா வழங்க வேண்டுமென தொழில் அமைச்சின்  ஊடாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. 

அந்த தீர்மானத்துக்கு எதிராகவே முதலாளிமார் சம்மேளனம் மேன்முறையீட்டு நீதிமன்றில். கடந்த வருடம் மார் மாதம் 21ஆம் திகதி  மனுத்தாக்கல் செய்திருந்தது.  இடையில் ஏற்பட்ட கொரோனா முடக்கம் மற்றும் ஏனைய நெருக்கடிகளைத் தாண்டி கடந்த 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இவ்வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, குறித்த மனுவை தள்ளுபடி செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஆயிரம் ரூபா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு  கோரிக்கையும் மனுவில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் கடந்த வருடம் ஏப்ரல் 5ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைகளுக்கு வந்த போது அந்த கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை முக்கிய விடயம். அதுவே முதலாளிமார் சம்மேளனத்துக்கு இந்த விவகாரத்தில் கிடைத்த முதல் தோல்வி. 

 ஒரு வகையில்  இது அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரான ஒரு வழக்குத் தாக்கல் என்றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசார காலத்தில் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட்சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என கூறியிருந்தார். 

அவர் ஜனாதிபதியானவுடன், பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ அதை வலியுறுத்தியிருந்தார். எனினும்  2020ஆம் ஆண்டின் முதல் பகுதியில் கொரோனா தாக்கத்தால் நாடு முடுக்கப்பட்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் காரணத்தால் இந்த விடயம் பேசப்படவில்லை. 

பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவுற்று 2021ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆயிரம் ரூபா நாட்சம்பளத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டது. ஆனால் கம்பனிகள் அது குறித்து அலட்டிக்கொள்ளவில்லை. கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை. 

அதையடுத்தே அதிரடியாக செயற்பட்ட அரசாங்கம் சம்பள நிர்ணய சபையின் ஊடாக தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்பட வே்ண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை 2021 மார்ச்  5ஆம் திகதி வெளியிட்டது. அடிப்படை சம்பளம் 900 ரூபாவாகவும் வரவு,செலவு கொடுப்பனவு 100 ரூபா வாக சேர்த்தே ஆயிரம் ரூபா முடிவு செய்யப்பட்டது என்பது இங்கு முக்கிய விடயம்.

எனினும்  முதலாளிமார் சம்மேளனம்  ரிட் மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே சம்பள நிர்ணய சபையின் வர்த்தமானி அறிவித்தலை ஏற்று சில தோட்ட நிர்வாகங்கள்  நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வை ஏற்கனவே வழங்க ஆரம்பித்திருந்தன. 

வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் கூட சில தோட்டங்களில் தொழிலாளர்கள் நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா வை எந்த வித மேலதிக நிபந்தனைகளுமின்றி பெற்றிருந்தனர். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனாலும் சில கெடுபிடி நிர்வாகங்கள் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தொழிலாளர்களிடமிருந்து மேலதிக கொழுந்தை எதிர்ப்பார்த்தன. இதுவே முரண்பாடுகள் அதிகரிக்க காரணமாயிற்று.

சம்பள நிர்ணய சபையால் தொழிலாளர்களின் வேதனம் தீர்மானிக்கப்படுவதால் தாம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கம்பனிகள் அறிவித்தன. இது தொழிற்சங்கங்களை பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக கம்பனிகளுக்கு அமைந்தன. ஏனென்றால் அது வரை  தொழிலாளர் சந்தாவை  அவர்களின் சம்பளம் ஊடாகப் பெற்று அதை தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வரும் வேலையை தோட்ட நிர்வாகங்கள் செய்து வந்தன. 

கூட்டு ஒப்பந்தம் இல்லாது போகவும் அந்த முறை நிறுத்தப்பட்டது. இதனால் மாதாந்தம் கோடிக்கணக்காகவும், இலட்சக்கணக்காகவும் சந்தா பெற்று வந்த தொழிற்சங்கங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தமது காரியாலயங்களை நடத்தவும் அங்கு பணிபுரிவோருக்கு சம்பளம் வழங்கவும் திண்டாடின. 

ஆனால் தற்போது மீண்டும் பழைய நிலைமைகள் திரும்பும் என்று கூற முடியாது. அதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றமானது  கம்பனிகள் தொடுத்த வழக்கையே தள்ளுபடி செய்துள்ளது. தொழிற்சங்கங்கள் இது தொடர்பில் வழக்கு தொடுத்திருக்க வேண்டிய தேவை இருக்கவில்லை.

பிரதான தொழிற்சங்கமான இ.தொ.கா ஏழு வருடங்களுக்கு முன்பு நாட்சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தன்னிச்சையாக முன்வைத்திருந்தது. கூட்டு ஒப்பந்தம் மூலம் அது சாத்தியப்படவில்லை. 

ஆனால் அந்த ஏழு வருடங்களில் முறையாக கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தால் தற்போது தொழிலாளர்களின் நாட்சம்பளம் ஆயிரம் ரூபா வை இலகுவாக தாண்டியிருக்கும் என்பது நிதர்சனம். 

ஆகவே  சம்பள நிர்ணய சபையின் மூலமே இது சாத்தியப்படும் என்பதை உணர்ந்த அரசாங்கம் அந்த முடிவுக்கு வந்தது. தற்போது கம்பனிகளின் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை எவருக்கும் கிடைத்த வெற்றியாக எடுத்துக்கொள்ள முடியாது. இங்கு நீதி நிலைநாட்டப்பட்டிருக்கின்றது என்பதே உண்மை. 

ஏனென்றால் அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலையும் தீர்மானத்தையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள்  முதலாளிமார் சம்மேளனத்தினர். தாம் கொண்டு வந்த தீர்மானத்துக்கு சாதகமாக தீர்ப்பு  வந்தாலும் அதை அரசாங்க தரப்பின் தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம், சம்பள நிர்ணய சபையினரும் இதை வெற்றியாக கொண்டாட முடியாது. காரணம் இந்த ஆயிரம் ரூபா நாட்சம்பளம் தொழிலாளர்களுக்கு எந்த விதத்திலும் போதுமானதாக இல்லை என்ற விடயம் அவர்களுக்கே புரியும். 

ஆனால் சம்பள நிர்ணய சபையின் ஊடாக இலங்கையில் ஆயிரம் ரூபா நாட்சம்பளத்தைப் பெற்ற முதலாவது தரப்பினராக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் விளங்குகின்றனர். அதை செயற்படுத்தியதில் அப்போதைய அரசாங்க தரப்பினருக்கு பங்குள்ளது. ஆனால் இனித்தான் தொழிற்சங்கங்களின் பங்கு அதிகமாகவுள்ளது.

அதாவது தொழிலாளர் நலன்புரி விடயங்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்தை உடனடியாக பேச்சுக்கு அழைக்க வேண்டும். இது நாள் வரை தொழிலாளர் வேதனம் தொடர்பிலான கூட்டு ஒப்பந்தமே இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை கைச்சாத்திடப்பட்டு வந்தது. 

அவர்களின் நலன்புரி தொடர்பான ஒப்பந்தம் மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை கைச்சாத்திடப்படும் என்று கூறப்பட்டாலும் கூட, காலமாற்றத்துக்கேற்ப அது செய்யப்படவில்லை. இறுதியாக 2003ஆம் ஆண்டு இந்த தொழிலாளர் நலன்புரி தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இதில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் மிக அதிகம். உதாரணமாக தொழிலாளி ஒருவர் இறந்தால் அவரை இறுதி அடக்கம் செய்ய பிணப்பெட்டிக்கு தோட்ட நிர்வாகம் வழங்கும் தொகை இன்னும் இரண்டாயிரம் ரூபாவாகவே இருக்கின்றது. இது 19வருடங்களுக்கு முன்பு தீர்மானிக்கப்பட்ட தொகை. இப்போது அத்தொகைக்கு ஒரு இறுதி மரணச்சடங்கில் என்ன செய்ய முடியும்?

இது தொடர்பில் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள தொழிற்சங்கங்கள் முன்வரவேண்டிய அதேவேளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை குறித்து பேசுவதற்கான முயற்சிகளை  முன்னெடுக்க தயாராகி வருவதாகவும் தெரிகின்றது. ஆனால் கூட்டு ஒப்பந்தம் போலல்லாது, இவ்விடயத்தில் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று சேர்ந்து செயற்பட்டால் மட்டுமே கம்பனிகளை சவாலுக்குட்படுத்த முடியும். 

ஆயிரம் ரூபா நாட்சம்பளம் என்ற விடயத்தை தொழிலாளர்கள் மறந்து விட்டனர். அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உதாரணத்துக்கு கூறப்போனால் 9ஆம் திகதி அது குறித்த நீதிமன்ற உத்தரவு செய்தி வந்த பிறகும் கூட எந்த தோட்டங்களிலும் அது குறித்த எந்த உணர்ச்சிகளையும் தொழிலாளர்கள் வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

ஏனென்றால் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதை போன்று அத்தொகையை ஏற்கனவே பல தோட்ட நிர்வாகங்கள் கடந்த வருடத்திலிருந்தே வழங்க ஆரம்பித்து விட்டன. அதை அறிந்து தான் சில அரசியல் பிரமுகர்களும் வெடி கொளுத்தி போட கிளம்பவில்லை போலும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right