குரங்கு அம்மை அச்சத்தில் உழலும் உலகம்

By Digital Desk 5

13 Aug, 2022 | 12:12 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

குரங்கு அம்மையை அதிசயம் எனலாம். அசட்டைப் போக்கின் விபரீத விளைவு எனவும் சொல்லலாம்.  இதனை உலக சுகாதார ஸ்தாபனம் பூகோள ரீதியான நெருக்கடியென பிரகடனம் செய்திருக்கிறது. இந்த நோயின் அவலட்சணமான அறிகுறிகளைக் கண்டு உலக மக்கள் அஞ்சுகிறார்கள்.

ஆபிரிக்காவின் மத்திய மற்றும் மேற்குப் பிராந்தியங்களிலும் குரங்கு அம்மை பத்து வருடங்களுக்கு மேலாக இருந்திருக்கிறது. உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் முளையிலேயே கிள்ளியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கட்டுரை எழுதப்படுகையில் 89 நாடுகளில் குரங்கு அம்மை தொற்றியவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். சுமார் 32 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழும் உலகம், குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தி விடுமா என்பது முக்கியமான கேள்வி. 

அதற்கு நோய் பற்றியும், அதில் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றியும் அறிந்து வைத்திருப்பது முக்கியமானது.

குரங்கு அம்மை வைரஸ் நோய் தான். இது சின்னம்மை வைரஸிற்கு சமமானது. மருத்துவரீதியாக பேசினால், குரங்கு அம்மை சின்னம்மை அளவிற்கு வேகமாக பரவக்கூடியதோ, ஆபத்தானதோ அல்ல.

இருந்தபோதிலும், இந்த வைரஸ் திரிபடைந்து மனிதகுலத்தை அச்சுறுத்தலாக மாறலாமென ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

உலகளாவிய ரீதியிலான தடுப்பு மருந்தேற்றல் முயற்சிகளின் மூலம் சின்னம்மையைக் கட்டுப்படுத்துவதி;ல் மனிதகுலம் 1980களிலேயே வெற்றி பெற்றது. 

முறையாக கட்டுப்படுத்தாவிட்டால் சின்னம்மையின் வெற்றிடத்தை குரங்கு அம்மை நிரப்பி விடலாம் என்பது ஆய்வாளர்களின் அச்சம்.

1958இல் குரங்குக் கூட்டமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டதால், இதற்கு குரங்கு அம்மை என்று பெயர். மற்றபடி, இது குரங்கில் தான் முதலில் உருவானதா என்பது தெளிவாகத் தெரியாது.

குரங்கு அம்மை பேராபத்தாக மாறுவதைத் தடுக்க, முதலில் அதற்குரிய வைரஸ் பற்றி அறிய வேண்டும். அடுத்து கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றல்.

கொரோனா வைரஸை ஒப்பிடுகையில், இதுவொன்றும் தடுக்க முடியாத சக்தி அல்ல. ஆரம்ப நாட்களில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டோம் என்றால், அது காற்றின் வழியாக பரவியதே பிரதான காரணம். 

குரங்கு அம்மை வைரஸ் அப்படியல்ல. அது மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு பரவ நெருங்கிய தொடுகை அவசியம். தொற்றுள்ள உடல் மேற்பரப்பில் இருந்து பரவலாம். முகத்தோடு முகத்தை நீண்ட நேரம் ஒட்டி வைத்திருக்கும்போதும் பரவக்கூடும். கிருமியுள்ள துவாய்களைப் பயன்படுத்துவதன் மூலமும் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். 

இது சின்னம்மையை விடவும் குறைவான வேகத்தில் பரவுகிறது என்பது ஆறுதல் தரக்கூடிய விடயம். குரங்கு அம்மை உடலுறவின் மூலம் பரவும் நோயாக விஞ்ஞானம் வகைப்படுத்துவது கிடையாது. 

ஆனால், ஒருபாலின உறவின் மூலம் 95சதவீதமான நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் ஆண்களுக்கு மத்தியிலான ஒருபாலின உறவின் மூலம் நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இது மாதிரியான உடலுறவைத் தவிர்ப்பதன் மூலம் குரங்கு அம்மை நோய் பரவுவதைத் தடுக்கலாம் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

அது எந்தளவிற்கு சாத்தியம் என்பது கேள்வியே. உடலுறவைத் தடுப்பதற்கான சட்டங்களை இயற்றி சிபிலிஸ் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றதாக சரித்திரம் கிடையாது.

மறுபுறத்தில், ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்ட நாடுகளிலும் கூட, ஆணும், ஆணுமோ அல்லது பெண்ணும் பெண்ணுமோ மறைவாக உடலுறவு கொள்வதைத் தடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முறையாக அமுற்படுத்த முடிவதில்லை.

ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்களைத் தேர்ந்தெடுத்து, நோய்த்தடுப்பு முயற்சிகள் பற்றி அறிவுரை கூறலாம். தடுப்பு மருந்தும் ஏற்றலாம்.

ஓரினச் சேர்க்கையை அங்கீகரிக்காத சமூகங்களில் தாம் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை எவரும் பகிரங்கமாக கூற முன்வர மாட்டார்கள். 

சில நாடுகள் ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் ஆகியோரது உரிமைகளை ஆதரிக்கின்றன.  அத்தகையோரை இலக்கு வைத்து தனிமைப்படுத்துவதோ, தடுப்பூசி ஏற்றுவதோ அசாத்தியமான காரியம்.

எனவே, சின்னம்மை போன்று குரங்கு அம்மையை முற்றுமுழுதாக ஒழிக்க வேண்டுமாயின், தடுப்பு மருந்தேற்றல் என்பதே ஒரே வழியென விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

தடுப்பு மருந்தேற்றல் என்றால், அரசியல் வணிகம் தான். உண்மையாக தேவைப்படுவோருக்கு கிடைக்கச் செய்தை விடவும் பலம் உள்ளவர்களைப் பாதுகாக்கும் சூட்சும் இந்த கார்ப்பரேட் அரசியல் வணிகத்தின் தாற்பர்யமாக இருக்கிறது.

இது கொரோனா பெருந்தொற்றைப் போன்று, குரங்கு அம்மைக்கும் பொருந்தும். முன்னைய நோய்க்கு முறையான தடுப்பூசியை உருவாக்க அதிக காலம் எடுத்தது. அதிர்ஷ்டவசமாக குரங்கு அம்மைக்கு தடுப்பூசி இருக்கிறது. 

பவேரியன் நோர்டிக் (டீயஎயசயைn ழேசனiஉ) என்ற நிறுவனம் உருவாக்கிய எம்விஏ (ஆஏயு) என்ற மருந்திற்கு அமெரிக்காவும், கனடாவும் அனுமதி வழங்கியிருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

பிரச்சினை யாதெனில், தடுப்பு மருந்துக்குள்ள பற்றாக்குறை தான். உள்ளதை வைத்துக் கொண்டு பகிர வேண்டும். குரங்கு அம்மையால் ஆகக்கூடுதலாக ஆபிரிக்க நாடுகள் பாதிக்கப்பட்டாலும், அந்நாடுகளுக்கு தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. ஆனால், ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிம் பல நாடுகளில் கிளினிக்குகள் ஊடாக தடுப்பு மருந்து ஏற்றப்பட்டு வருகின்றது.

இத்தகைய நாடுகளில் நோயின் தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டு வருவதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.  ஒவ்வொரு நாளும் குரங்கு அம்மைத் தொற்று உறுதி செய்யப்படுவோரின் பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது, நாளொன்றுக்கு 35 நோயாளிகள் மாத்திரமே இனங்காணப்படுவதாக தெரியவந்துள்ளது. 

ஆனால், அமெரிக்கா முதலான நாடுகளில் நாள்தோறும் கூடுதலான தொற்றானர்கள் இனங்காணப்பட்டு வருகிறார்கள். அந்நாட்டில் நோய் தொடர்பான அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில், வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குரங்கு அம்மை பரவியதாக அறிவிக்கப்படதா நாடுகளிலும் நோய் தொற்றியவர்கள் இனங்காணப்படுகிறார்கள். 

நோயின் தன்மைக்கு அமையவும், தடுப்பூசியை வாங்கக்கூடிய ஆற்றலின் அடிப்படையிலும் சில நாடுகள் நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி காணலாம்.

உலக சுகாதார ஸ்தாபனம் மாத்திரமன்றி தடுப்பு மருந்து விநியோக வலைப்பின்னலில் சம்பந்தப்பட்டுள்ள சகல தரப்புக்களும் நியாயமான பங்களிப்பை வழங்குவது அவசியம். அத்தகையதொரு பங்களிப்பு கிடைத்தால் மாத்திரமே நோயை முற்றாக ஒழித்துக் கட்டலாம்.

இல்லாவிட்டால், சில நாடுகளில் நோய் இல்லாமல் போகலாம். பல நாடுகளில் நோய் தொடர்ந்தும் இருக்கும். இதில் முக்கியமான விடயம் யாதெனில், குரங்கு அம்மைக்கு காரணமான வைரஸை வனவிலங்குகளில் இருந்து ஒழித்து விட முடியாது. வைரஸின் வடிவம் மாறினால், அது வெவ்வேறு வகையான விலங்குகள் மத்தியில் பரவும். கூடுதலாகவும் பரவலாம்.

எனவே, உலக நாடுகள் ஒன்றிணைந்து குரங்கு அம்மை விடயத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது அவசியம்.  பரவுதலைக் கட்டுப்படுத்தக்கூடிய தொற்றுநோயாகவே குரங்கு அம்மை உள்ளது. முளையிலேயே கிள்ளியெறியத் தவறியதால், இந்த நோய்க்கு உயிர்களையும் பலிகொடுத்துள்ளோம். இதனை எவ்வளவு தூரம் கவனிக்காமல் விடுகிறோமோ, அவ்வளவுக்கு நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் கடினமாகும். அதன் ஆபத்தும் தீவிரமாகலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right