வெளிநாட்டுக்கொள்கையில் ரணிலின் சித்தாந்தம்

By Vishnu

16 Aug, 2022 | 10:32 AM
image

டாக்டர் ரங்க கலன்சூரிய

இந்த ஆண்டு பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது, அதன் விளைவாக ஏற்பட்ட நெருக்கடி குறித்த ரணில் விக்கிரமசிங்கவின் கருத்துக்கள் மற்றைய பா.உறுப்பினர்களிலிருந்து சற்று வேறுபட்டிருந்தது. பாராளுமன்றத்தில் தனது கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு, விக்ரமசிங்க உக்ரைன் அமைதியான இராஜதந்திர தீர்வை நாடாமல் ரஷ்யாவை பகைத்துக்கொண்டதாகவும், மேற்குலகம் நெருக்கடியை உருவாக்குவதில் நாடகமாடியதாகவும் வாதிட்டார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும், அவரது பார்வை ஆசியாவை நோக்கியதாகவே இருந்தன. அவரது உள்ளூர் நேர்காணல்களில், அவர் இந்தோனேசியாவை, ஆசியான் அமைப்பின் தலைவராக மற்றும் G20 இன் தற்போதைய தலைமை நாடாக, போரின் பாதகமான விளைவுகளைத் தணிப்பதில் பிரதானமான பங்கு வகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தக் கருத்துக்கள் மார்ச் மாத ஆரம்பத்தில் ஜகார்த்தாவில் உள்ள பிரதான ஊடக நிறுவனங்களில் இருந்தான உள்ளடக்கல் மற்றும் வர்ணனையை கட்டாயப்படுத்தியதுடன் இந்தோனேசிய ஊடகங்களுடனான நேர்காணல்களில் ரணில் விரிவாக இடம்பெற்றார், அங்கு அவர் எதிர்கொள்ளவுள்ள போரில் இலங்கையின் வகிபாகம் தொடர்பான தனது கருத்தை மிகவும் வலுவாக வெளிப்படுத்தினார்

"பாண்டுங் ஆசியா-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டின் மூலம் சர்வதேச கூட்டணியை கட்டியெழுப்புவது தொடர்பாக உங்களின் வரலாற்று பின்னணியுடன், இந்தோனேஷியாவை சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் இணைந்து அனைத்து ஆசிய நாடுகளின் மாநாட்டை நடாத்த பரிந்துரைக்கிறேன்."

Tempo.com உடனான நேர்காணல், மார்ச் 7, 2020

அப்போது குறைந்த பட்சம் அவ்வாறான ஒரு இராஜதந்திர முயற்சியில் ஈடுபடும் எண்ணமே இந்தோனேசியாவுக்கு இருக்கவில்லை.

இந்தோனேசிய ஊடகங்களுடனான தனது ஈடுபாடுகளில், அடுத்த தசாப்தத்தில் உலக வல்லரசாக ஆசியாவின் எழுச்சியை எதிர்வுகூறிய விக்கிரமசிங்க மேற்கு நாடுகளை விமர்சித்தார். அவரைப் பொறுத்த வரையில், ஆசியா தன்னந்தனியாக நின்று தனது குரலை உரக்க ஒலிக்க செய்ய வேண்டியதுடன், ஆப்பிரிக்காவில் இருந்தும் மேற்கு நாடுகளுக்கு இதேபோன்ற பதிலை உறுதி செய்ய வேண்டும்.

ரணிலின் ஆலோசனைப்படி நடைபெறுகின்றதோ இல்லையோ, இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஒருசில மாதங்களுக்குப் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தைத் தணிப்பதற்கான உறுதியுடன், கீவ் மற்றும் மாஸ்கோ இடையேயான இராஜதந்திர முயற்சியில் இறங்கினார். ஜூன் பிற்பகுதியில் ஜகார்த்தாவை விட்டு வெளியேறிய, அத்தகைய முயற்சியில் ஈடுபட்ட ஒரேயொரு ஆசியத் தலைவரான ஜோகோ விடோடோ, பணவீக்கத்தைத் ஏற்படுத்தி, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை ஏற்படுத்திய போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரேனிய மற்றும் ரஷ்ய தலைவர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பதாக ஊடகங்களிடம் கூறினார். 

சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யா-உக்ரைன் போரைத் தீர்க்க, ஆசியாவில், உலகின் மிகப் பெரிய முஸ்லீம் தேசத்தை தலைமையேற்குமாறு பரிந்துரைத்த அதே தனியான பாராளுமன்ற உறுப்பினர், இதுபோன்ற பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்ற ஆசிய தலைவர்களின் முழுமையானவர்களில் சமீபத்தியவராக தற்போது மாறியுள்ளார். 45 ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டின் பிரதி வெளிவிவகார அமைச்சராக தனது பாராளுமன்ற வாழ்க்கையைத் தொடங்கிய விக்கிரமசிங்க, உலகளாவிய இராஜதந்திரத்தில் குறிப்பாக நீண்ட அனுபவத்தைக் கொண்டவராவார். சர்வதேச உறவுகளின் அத்தகைய ஆழமான அறிவுடன் தெற்காசியாவில் நீண்ட காலமாக அரசியல்வாதியாக சேவையாற்றியவராக இருக்கின்ற போதிலும் உண்மையில் எவராலும் சொல்ல முடியாது.  இருப்பினும், அந்த ஒருவராலேயே, ஊகிக்க முடியும்.   

எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி, அமெரிக்காவிலுள்ள அமெரிக்க கேபிடல் ஹில் கட்டிடத்தின் மீதான தாக்குதலுக்கும், இலங்கையில் காலி முகத்திடலில் போராட்டத்திற்கும் இடையில் ஒரேமாதிரியான தன்மை இருந்தபோதிலும் இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்று தனது புதிய அலுவலகத்திற்குச் சென்ற 48 மணித்தியாலங்களுக்குள் விக்கிரமசிங்க ஒரு வலுவான அறிக்கையை வெளியிட்டு பலரின் புருவங்களை உயருமளவிற்கு  அதனை கையாண்டார். இரண்டு நிகழ்வுகளிலும் அரச தரப்பின் பதிலளிப்புகள் ஓரளவுக்கு ஒத்திருந்தன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஏற்கனவே ருவிற்றரில் பதிவிட்டிருந்த நேரத்தில், புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி, கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தனது செயற்பாடு குறித்த கருத்தை வலியுறுத்தினார்.

அது அத்துடன் முடிவடையவில்லை. சீனா தைவானை அண்மித்த பகுதிகளில் இராணுவ ஒத்திகைகளை ஆரம்பித்த நிலையில், கடந்த வாரம் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானில் இருந்து வெளியேறிய பின்னர், கொழும்பில் உள்ள சீனத் தூதரிடம் அவர் சில கருத்துக்களைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி, தற்போதைய உலகளாவிய பதட்டங்களை மேலும் அதிகரிக்கக்கூடிய ஆத்திரமூட்டல்களில் இருந்து நாடுகள் விலகியிருக்க வேண்டும் என்று வாதிட்ட அதேநேரத்தில் ஒரே சீனா கொள்கை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான ஐ.நா பிரகடனக் கொள்கைகளுக்கான இலங்கையின் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். பரஸ்பரமான மரியாதை மற்றும் நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாமை ஆகியவற்றை அமைதியான ஒத்துழைப்பு மற்றும் மோதலின்மைக்கு முக்கியமான அடித்தளங்கள் என்று அவர் மேற்கோள் காட்டினார்.

நிச்சயமாக, எதிர்மாறான கருத்துக்கள் இருந்தாலும், இது ஒரு சிறிய அரசுக்கு எதிராக ஒரு சக்திவாய்ந்த தேசத்தை விரோதிக்க வேண்டாம் என மேற்கு நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மேல் இன்னுமொரு நெருக்கடியை உலகத்தால் தாங்கிக் கொள்ள முடியாது, மேலும் தெற்காசியாவில் பல நாடுகள் கடுமையான பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆசியாவால் இத்தகைய ஆத்திரமூட்டல்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ளதுடன் அதனது அண்டை நாடுகளில் சில அதன் தாக்கத்தை உணர ஆரம்பித்திருக்கின்றன. 

அந்த வகையில், விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளபடி, அத்தகைய ஆத்திரமூட்டலை நாம் எந்த வகையிலும் எதிர்க்க வேண்டியிருக்கும் என்பது உண்மையாகும். ஆனால் எங்களைப் போன்ற குரல்கள் கவனமீர்க்குமளவிற்கு வலுவாக இருக்காது. அதனால்தான், அவர் ஜனாதிபதியாக வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, இந்தோனேசியா, இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளை தலைமையேற்குமாறு வலியுறுத்தினார்.

எல்லா சந்தர்ப்பங்களிலும், விக்கிரமசிங்கவின் தர்க்கம் சரியானதுடன் நியாயமானதுமாகும். ஆனால் மில்லியன் டொலர் கேள்வி இந்த உலகளாவிய பிரச்சினைகளில் இலங்கையின் நிலைப்பாட்டின் செல்லுபடியாகும் மற்றும் நியாயத்தன்மை தொடர்பானதல்ல, மாறாக நாட்டின் தற்போதைய தலைவிதி தொடர்பானதாகும். இலங்கை தற்போது தனது வரலாற்றில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதுடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற உலகளாவிய கடன் வழங்குநர்களுடன் பதட்டமான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், நாம் சக்திவாய்ந்த நாடுகளை விமர்சிக்க முடியுமா என்ற ஒன்று ஆச்சரியப்படுத்துவதாகும். இது தவறான நேரத்தில் சரியான நிலைப்பாட்டை மேற்கொள்ளும் ஓர் சம்பவமாகுமா?

மேற்குலகின் வலுவான கூட்டாளியாகக் காணப்பட்ட அவரது மாமா ஜே ஆர் ஜெயவர்தனவைப் போலல்லாமல், விக்கிரமசிங்க எதிர்வரும் தசாப்தத்தில் ஆசியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தின் வலுவான விசுவாசியாகக் கருதப்படுகிறார். அவ்வாறானால், அவர் இந்தியாவையும் சீனாவையும் பிராந்தியத்தில் இரண்டு முக்கிய வல்லரசுகளாகவும், அதனைத் தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளையும் பார்ப்பதில் ஆச்சரியமில்லை. அவர் மத்திய கிழக்கையும் இந்தக் தொகுதியில் சேர்த்துள்ளார் என்ற ஒன்றை உறுதியாக நம்பலாம்.

உண்மையில், கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆரம்ப உரை, அவரது புதிய வெளியுறவுக் கொள்கை தொடர்பான தெளிவான அறிகுறியாகும். பல அவதானிப்பாளர்கள் இது அனைத்து முக்கிய சர்வதேச தரப்பினரையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாகவோ அல்லது ஜப்பான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடனான இறுக்கமான உறவுகளை சரிசெய்வதற்கான முயற்சியாகவோ பார்க்கிறார்கள்.

எதிர்மாறாக, அடுத்த பெரிய உலகத் தலைவர்களாக அவர் ஊக்குவிக்கும் அதே இரண்டு வல்லரசுகளும் அவருக்கு கடினமான நேரத்தை வழங்குகின்றார்கள். தவறு விக்கிரமசிங்கவினுடையது அல்ல: இங்கு அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகள் நாட்டை இந்தியாவிற்கும் சீனாவிற்குமான விளையாடும் களமாக மாற்றி, ஒன்றையொன்று மோத வைக்கின்றன.

இந்த இரு நாடுகளும் நாட்டின் மிக முக்கியமான நண்பர்களில் இடம்பிடித்துள்ளதுடன், தேவைப்படும்போது உதவிகரம் நீட்டுகின்றன. ஆனால், இலங்கை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலவீனமான நிலையில் காணப்படுகின்ற இவ்வேளையில், போட்டியிடும் இந்த இரண்டு நாடுகளின் புவிசார் அரசியல் நலன்களை நிர்வகிப்பது புதிய அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான பணியாக மாறியுள்ளது.

விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் இலங்கை அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்த சீன "உளவுக் கப்பலை" சுற்றிய நாடகம் இது தொடர்பான சமீபத்திய வளர்ச்சியாகும்.

ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் ஏவுகணை தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்துவது இயல்பானது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நங்கூரமிடுவதை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி விக்கிரமசிங்க ஏற்கனவே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார், ஆனால் பெய்ஜிங்குடனான மோசமடைந்த உறவுகளை சீர்செய்ய முற்படும் நேரத்தில், அத்தகைய கோரிக்கையானது நாட்டிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம். மறுபுறம், இலங்கையில் ஏற்கனவே சர்ச்சைக்குரிய சீனாவால் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதித்தால் இந்தியாவின் பிரச்சினைகள் அதிகரிக்கும்.

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இரண்டு சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையே இந்த நாடு தொடர்ந்து சிக்கிக் கொண்டே இருக்கும் என்பதே இதற்கெல்லாம் அடிப்படையாகும். அந்த வகையில் இந்த சம்பவங்கள் நிச்சயமாக எதிர்காலத்தில் வெளிவரும்.

யுவான் வாங் 5 கண்காணிப்புக் கப்பல் தொடர்பில் கொழும்பில் இருந்து தெளிவுபடுத்தும் வரை புதுடெல்லிக்கு அறிவிக்கப்படவில்லை என்பது இந்திய ஊடகங்கள் முன்னிலைப்படுத்திய ஒரு பிரச்சினையாகும். இதன் பின்னணியிலுள்ள உண்மையான கதை எதுவாக இருந்தாலும், 1955 இல் இந்தோனேசியாவில் நடந்த பாண்டுங் மாநாட்டில் அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல மற்றும் அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோருக்கு இடையே நடந்த ஒரு உரையாடலை இந்த பிரச்சினை சந்தேகத்திற்கு இடமின்றி நினைவூட்டுகிறது.

சேர் ஜோனின் பேச்சு நேருவுக்கு சௌகரியமாக இருக்கவில்லை, அவர் அதனை ஆழ்ந்த மேற்கத்திய சார்பாக பார்த்தார். இதன் விளைவாக, அவர் சேர் ஜோனை,  "நீங்கள் ஏன் அதைச் செய்தீர்கள்? உங்கள் பேச்சை வழங்குவதற்கு முன்பு ஏன் என்னிடம் காட்டவில்லை? என்று கேட்டதாகக் கூறப்படுகிறது, தன்னை ஒரு வலிமையானவர் என்று பெருமைப்படுத்திக் கொண்ட இலங்கையின் தலைவரின் பதில், வெளிப்படையாகவும் தௌிவாகவும் இல்லாவிட்டாலும், தன்னிச்சையாகவும் நேரடியானதாகவும் இருந்தது.

“நான் ஏன் காட்ட வேண்டும்? நீங்கள் உங்களுடைய பேச்சை வழங்க முன்னர்  எனக்குக் காட்டுவீர்களா?”

அது அப்போது. இது இப்போது. பல வழிகளில், காலம் மாறிவிட்டது. இருப்பினும், பலவற்றில், அவர்கள் இன்னமும் மாறவில்லை.

கலாநிதி ரங்க கலன்சூரிய ஆசியாவின் ஊடக ஆய்வாளர், இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் தகவல் பணிப்பாளர் நாயகம் மற்றும் முன்னாள் இராஜதந்திரியாவார். அவரை rkalansooriya@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

Factum என்பது இலங்கையை தளமாகக் கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய ஆசியாவை மையமாக கொண்ட சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right