( எம்.எப்.எம்.பஸீர்)
காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தை பலவந்தமாக அகற்றுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு எழுத்தாணை மனுக்களையும் வாபஸ் பெற, மனுதாரர்கள் சார்பில் இன்று ( 10) மேன் முறையீட்டு நீதிமன்றில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கையை அந் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
அதன்படி அந்த நான்கு மனுக்களையும் வாபஸ் பெற மேன் முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்தது.
காலிமுகத்திடல், 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமானது எனக் கூறப்படும் கட்டுமானங்கள், பயிர்ச்செய்கைகளை கடந்த 5 ஆம் திகதி மாலை 5 மணிக்குள் அகற்றிக்கொள்ளுமாறு கோட்டை பொலிஸார் அதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தனர்.
கோட்டை பொலிஸாரின் குறித்த அறிவிப்புக்கு எதிராக 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தின் போராட்டக்காரர்களான மிரஹவத்தே காஷியப்ப தேரர், இரோஷ் அல்போன்சு, அஸங்க அபயரத்ன மற்றும் லஹிரு அன்ரன் மதுஷான் பெர்னாண்டோ ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் எழுத்தாணைகோரி (ரிட்) மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களில் கோட்டை நிலையப் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ்மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் குறித்த மனுக்கள், கடந்த வெள்ளியன்று முதன் முதலாக பரிசீலிக்கப்பட்ட போது, உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றுவதைத் தவிர்த்து, இன்று 10 ஆம் திகதிவரை காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்களத்தின் தற்காலிகக் கூடாரங்களை அகற்றப்போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு உறுதிமொழியளித்தார்.
அதன்படி அம்மனுக்கள் இன்று ( 10) மீள பரிசீலனைக்கு வந்தன.
இதன்போது மனுதாரர்களுக்காக மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தனது சேவை பெறுநர்கள் இன்று கோட்டா கோ கம போராட்ட கலத்திலிருந்து வெளியேறி செல்ல நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், குறித்த மனுக்களை வாபஸ் பெற அனுமதிக்குமாறு கோரினார். தனது சேவை பெறுநர்களின் உரிமைகளை தக்கவைத்துக்கொண்டு அக்கோரிக்கையை முன் வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பிரதிவாதிகளில் ஒருவரான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, மனுக்களை வாபஸ் பெறுவது தொடர்பில் தமக்கு ஆட்சேபனை இல்லை என அறிவித்தார்.
ஏனைய பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் சுமதி தர்மவர்தனவும் ஆட்சேபனைகள் இல்லை என அறிவித்த நிலையில், மனுக்களை வாபஸ் பெற மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அனுமதித்து, வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM