ஏ வி எம் மின் 'தமிழ் ராக்கர்ஸ்' வலைதள தொடர்

By Digital Desk 5

10 Aug, 2022 | 01:18 PM
image

கலை படைப்புகளை களவாடி திரை உலகினரை கலங்கடித்த சட்டவிரோத இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் எனும் இணையதளத்தினை மையமாக வைத்து, அதே பெயரில் பரபரப்பான இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜேனரிலான வலைதள தொடராக 'தமிழ் ராக்கர்ஸ்' உருவாகி இருக்கிறது என இதனை தயாரித்த இந்தியாவின் மூத்த மற்றும் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

'ஈரம்', 'வல்லினம்', 'ஆறாது சினம்', 'குற்றம் 23', 'பார்டர்' ஆகிய படங்களை இயக்கி திரை உலகில் தனித்துவமான முத்திரையை பதித்து வரும் படைப்பாளி அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் வலைதள தொடர் 'தமிழ் ராக்கர்ஸ்'. இதில் அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

இவர்களுடன் மாரிமுத்து, அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன், வினோத் சாகர், காக்கா முட்டை விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த தொடருக்கு அறிமுக இசை அமைப்பாளர் சரணேஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த தொடரை சோனி லைவ் டிஜிட்டல் தளத்திற்காக அசல் படைப்பாக ஏ வி எம் நிறுவனம் சார்பில் அருணா குகன் மற்றும் அபர்ணா குகன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

தொடரைப் பற்றி இயக்குநர் அறிவழகன் பேசுகையில், ''  திரை உலகில் நட்சத்திர அந்தஸ்தில் உள்ள நடிகர் ஒருவரின் நடிப்பில் 'கருடா' எனும் பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிறது. அந்த திரைப்படம் வெளியான குறுகிய காலத்திற்குள் சட்டவிரோத இணையத்தளமான 'தமிழ் ராக்கர்ஸ்' என்னும் இணையதளத்தில் வெளியாகவிருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரி ருத்ரா தலைமையில் ஒரு புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. 

இந்தக் குழு கருடா படத்தின் வெளியிட்டுத் தருணத்தில், அதனை சட்ட விரோதமாக பதிவேற்றும் 'தமிழ் ராக்கர்ஸ்' என்னும் இணையதளத்தின் முயற்சிகளை முறியடித்தாரா? இல்லையா? என்பதை பரபரப்பான திரைக்கதையுடன் எட்டு அத்தியாயங்கள் கொண்ட வலைத்த்தளத் தொடராக தயாராகி இருக்கிறது. இந்தத் தொடர் சோனி லைவ் ஒரிஜினல்ஸ் படைப்பாக சோனி லைவ் டிஜிட்டல் தளத்தில் ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் வெளியாகிறது.'' என்றார்.

கடந்த தசாப்தங்களில் தமிழ் திரை உலகிற்கு பெரும் தடைக்கல்லாக இருந்த தமிழ் ராக்கர்ஸ் எனும் சட்ட விரோத இணையதள கும்பல் குறித்து, எதிர்மறையாக இல்லாமல் நேர்மறையான அதிர்வினை பார்வையாளர்களிடத்தில் உருவாக்கும் வகையில் 'தமிழ் ராக்கர்ஸ்' என்னும் பெயரில் உருவாகி இருக்கும் இந்த வலைதள தொடரை அனைவரும் கண்டு ரசிப்பார்கள் என டிஜிட்டல் தள வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்