சீயான் விக்ரமின் 'கோப்ரா' புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு

By Digital Desk 5

10 Aug, 2022 | 12:59 PM
image

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் 'கோப்ரா' படத்தின் புதிய வெளியீட்டு திகதியை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது.

'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கோப்ரா'. இதில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'கே ஜி எஃப்' பட புகழ் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிதாதிருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், கே எஸ் ரவிக்குமார், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், பத்மபிரியா, கனிகா, மிரிணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். 

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். சுப்பர் நேச்சுரல் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படம் ஓகஸ்ட் 12ஆம் திகதியன்று வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் இடம்பெற்று இருக்கும் கிறாபிக்ஸ் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், இப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இம்மாதம் 31 ஆம் திகதியன்று 'கோப்ரா' தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கோப்ரா' திரைப்படத்துடன் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'நட்சத்திரங்கள் நகருகிறது' என்ற திரைப்படமும் வெளியாகிறது. சீயான் விக்ரமும்- பா ரஞ்சித்தும் இணைந்து புதிய படத்தில் பணியாற்றி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்