மின்சார கட்டணங்கள்  75 சதவீதத்தால் அதிகரிப்பு : டொலரில் கட்டணம் செலுத்தினால் விலைக்கழிவு - முழு விபரம் இதோ !

By Vishnu

09 Aug, 2022 | 09:07 PM
image

• வீட்டு பாவனை பிரிவில் 120 அலகுகள் வரை மானியம்

• சுற்றுலாத் துறையினருக்கு 3 மாதங்களுக்கு விலை உயர்வில் 50 % சலுகை

• டொலரில் மின் கட்டணம் செலுத்தினால் 1.5% விலைக்கழிவு 

 (எம்.எம்.சில்வெஸ்டர்)

புதிய மின்சார கட்டணங்கள்  75 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான அனுமதியை  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை  மின்சார சபைக்கு வழங்கியுள்ளது.  இந்த புதிய மின்சார கட்டணங்கள் இன்று முதல்  (ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி 2022) அமுல்படுத்தப்படும்.

நாட்டில் டொலரின் கையிருப்பை அதிகரிப்பதன்  நோக்கில் மின்சார கட்டணத்தை டொலரில் செலுத்தினால் 1.5 சதவீத கழிவு கொடுக்கப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார். 

இலங்கை மின்சார சபைக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளோம். குறிப்பாக, அவர்கள் தங்களை இலாபகரமான நிறுவனமாக மாற்றிக்கொள்ளும் வரையில் அவர்களுக்கு போனஸ் கிடையாது.

தற்போது அவர்களுக்கு வழங்கியுள்ள புதிய கட்டணம் தொடர்பில் மாத்திரமல்லாது, இனிமேல் அவர்கள் எந்தவொரு குறையும் கூறு முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 கொழும்பில் அமைந்துள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

உண்மையிலேயே, 229 வீதத்தால் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்சார சபையால் முன்மொழியப்பட்ட யோசனையை நாம் 75 வீதமாக மட்டுப்படுத்த தீர்மானித்தோம். இதற்காக விசேட நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொண்டதுடன், பல்வேறு கட்ட கூட்டங்களை நடத்தியதன் பின்னரே நாம் இந்த தீர்மானத்திற்கு வந்தோம். 

இந்த புதிய கட்டண அறவீடு முறையில் வீட்டு பாவனையாளர்களுக்கு 120 அலகுகள் வரையில் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, 0 முதல் 30 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 264 சதவீதத்தாலும்,  31  தொடக்கம் 60 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 211 சதவீதத்தாலும், 61  தொடக்கம் 90 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 125 சதவீதத்தாலும், 91  தொடக்கம் 120 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 89 சதவீதத்தாலும், 121  தொடக்கம் 180 வரையிலான அலகுகளை பயன்படுத்துபவர்களுக்கு 79 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே அறவீடு முறைமையே  வணக்கஸ்தலங்களுக்கும் அறவிடப்படும்.

நிறுவன மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட ஏனைய துறை சார்ந்தவர்களில் 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு 39 சதவீதத்தாலும்,  180 அலகுகளை அதிகமான GP1 பிரிவினருக்கு 44 சதவீதத்தாலும், GP2  பிரிவினருக்கு 29 சதவீதத்தாலும், GP3 பிரிவினருக்கு 31 சதவீதத்தாலும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டு நிறுவனங்கள், ஹோட்டல் துறை மற்றும் கைத்தொழில் துறைக்கு மானியம் வழங்கும் வகையில் புதிய கட்டண திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு குறித்த கட்டண உயர்வில் 50 சதவீத சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையானது, மூன்று மாத காலத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

 2014 ஆம் ஆண்டிலேயே  கடைசியாக மின்சார கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக்காலத்தில் மின்சார கட்டணம் 25 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. தற்போது மின்சார உற்பத்திக்கான செலவு 250 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் 143 டொலராக காணப்பட்ட ஒரு மெட்ரிக் டொன் நிலக்கரியின் விலை, தற்போது 321 டொலராக அதிகரித்துள்ளது. இது ரூபாவின் மதிப்பின்படி கணக்கிடும் போது, 550 சதவீதம் அதிகரித்துள்ளது.  அதுபோன்று, ஒரு லீற்றர் டீசலின் விலை 121 ரூபாவிலிருந்து 430 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது 350 சதவீத அதிகரிப்பாகும். 2013 ஆம் ஆண்டு 90 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் கச்சா எண்ணெய் விலை தற்போது 419 ரூபாவாக உள்ளது. இது 365 சதவீத விலை உயர்வாகும்.  

இக்காலப்பகுதியில் டொலரின் பெறுமதி 127 ரூபாவிலிருந்து 368 ரூபாவாக அதாவது 190 சதத்தால் அதிகரித்துள்ளது. இவ்வாறான விலை உயர்வுகளின் காரணமாக ஒரு அலகு (யுனிட்) மின்சார உற்பத்திக்கான செலவு 16 ரூபாவிலிருந்து 32 ரூபா வரை உயர்ந்தது. 

மின்சார உற்பத்திக்கான செலவு அதிகரிப்புடன், இலங்கை மின்சார சபை 183% மற்றும் 229% என  இரண்டு முறையில் கட்டணத்தை அதிகரிப்பதற்கான இரு முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது. இந்த இரண்டு முன்மொழிவுகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக நியாயமான கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றே கூற வேண்டும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்ட விதிகளுக்கு அமைய, இந்தக் கருத்துகளையும் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, நியாயமான கட்டண திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆணைக்குழு முடிவு செய்தது. 

தற்போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 32 ரூபாய் செலவாகிறது என்ற போதிலும், வீட்டு பாவனை நுகர்வோரை பாதுகாக்க முழு செலவினச் சுமையும் அவர்கள் மீது சுமத்தவில்லை. 30 அலகுகளுக்கும் குறைவான நுகர்வினை கொண்ட பிரிவினருக்கு மொத்த செலவில் 25 சதவீதம் இன்னும் அறவிடப்படுகிறது. 

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, மின் நுகர்வோரை ஊக்குவிக்கும் வகையில் இந்த கட்டணத் தீர்மானத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் கலந்துரையாடலின் போது சூரிய சக்தி கட்டமைப்பு உரிமையாளர்கள் தங்கள் ஒட்டுமொத்த நுகர்வுக்கு மாதாந்த கட்டணம் அறவிடுவது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டினர். அதன்படி, அவற்றின் மொத்த நுகர்விலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சார அலகுகளின் அளவைக் கழித்த பின்னர் பெறப்பட்ட நிகர நுகர்வு அடிப்படையில் நிலையான கட்டணங்கள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று ஆணைகுழு முடிவு செய்தது. இதன் காரணமாக, நுகர்வை விட உற்பத்தி செய்யப்படும் அலகுகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது, சூரிய மின்சக்தி அமைப்புகளை வைத்திருக்கும் மின் நுகர்வோர் மாதாந்த நிலையான கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.

மின் கட்டண திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வின் போது 1,324 பேர் மற்றும் நிறுவனங்கள் தமது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பித்துள்ளனர். இதில் 46 பேர் நேரில் கலந்து கொண்டு வாய்மொழிமூலமாக கருத்து தெரிவித்தனர். பொதுமக்கள் முன்வைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, மின்சார சட்ட விதிகளின்படி புதிய கட்டண முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு நிபந்தனைகளை விதிக்க தீர்மானித்தோம். 

மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பாக, சுயேச்சையாக தணிக்கை நடத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள்  திகதிகளுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம், பொதுமக்கள் மின்சார கட்டணத்தின் நியாயம் குறித்து முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது நடவடிக்கை எடுக்கலாம். லங்கா மின்சார பிரைவேட் லிமிடெட் (LECO) கடந்த வருடம் மின்சார நுகர்வோர்களின் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வட்டியை செலுத்த ஆரம்பித்தது. நுகர்வோர் உத்தரவாத வைப்புத்தொகைக்கான வட்டியை இலங்கை மின்சார சபையும் செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வட்டியை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதல் செலுத்தப்பட வேண்டும்" என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆட்சியாளர்கள் சிலரின் ஊழல்மோசடிகளே நாட்டின் வங்குரோத்து...

2022-09-28 22:41:33
news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31