இன்று பல்வேறு தரப்பினர் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதுதொடர்பில் நாட்டின் அனைத்து பொதுமக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிங்கள, முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து சாதாரண பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

காலம்சென்ற சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அங்கவீனமுற்ற படைவீரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற 4 மாதங்களுக்கு முன்னரே அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும், சிலரது அரசியல் தேவைகளுக்காக அந்த அப்பாவிப் படையினரை பிழையாக வழிநடத்தி குழப்ப நிலையை உருவாக்க சிலர் முயற்சித்தனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்த நாட்டை ஒரு சிறந்த நாடாகக் கட்டியெழுப்புவதற்காக சங்கைக்குரிய சோபித தேரர் துணிவோடு செயற்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சமய ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார் என்றும் இந்த அர்ப்பணிப்பும் தியாகமும் பொது அபேட்சகர் தேர்தல் பிரசாரங்களுக்கும் முன்பிருந்தே அவரிடம் நீண்ட காலமாக இருந்துவந்ததாகும் என்றும் கூறினார்.

சோபித தேரரின் சமூகப் பணியை முன்கொண்டு சென்று ஒரு சிறந்த தேசியப் பணியை ஆரம்பிப்பதற்காக ஒரு மத்திய நிலையத்தை அமைப்பதற்கு டாக்டர் ராஜா விஜேதுங்கவினால் ஒரு காணி இதன்போது அன்பளிப்புச் செய்யப்பட்டது.

சோபித தேரரின் தேசியப் பணி தொடர்பான ஒரு குறுந் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், சோபித தேரர் நினைவு நூல் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்கிவைக்கப்பட்டது.

கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர், சமயத் தலைவர்கள், பிரதமர் ரனில் விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், முன்னால் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.