ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்தை ஏற்ற கோட்டை நீதிமன்றம் ஸ்டாலினுக்கு பிணை வழங்கியது

Published By: Vishnu

08 Aug, 2022 | 09:16 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு,  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்,  அவரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை அறிவித்தது.

கோட்டை நீதிவான் திலின கமகே, ஜோஸப் ஸ்டாலினை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவித்து  இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இவ்வழக்கு தொடர்பில் கடந்த 5 ஆம் திகதி வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய பிணைக் கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்  முன் வைத்த வாதங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த நீதிவான், பிணை வழங்க தீர்மானித்ததாக அறிவித்தார்.

பொது மக்கள் போராட்டங்களின் போது முன்னணி செயற்பாட்டாளராக விளங்கிய  ஜோசப் ஸ்டாலினை, உதவி பொலிஸ் அத்தியட்சர் தில்ருக் தலைமையில் கடந்த 3 ஆம் திகதி மாலை கோட்டையில் உள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்துக்கு திடீரென நுழைந்த சுமார் 50 வரையிலான பொலிஸார் (நான்கு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்கள்)  கைது செய்து அழைத்து சென்றனர்.

கடந்த மே 28 ஆம் திகதி, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் ஒன்றை மையப்படுத்தி  ஜோஸப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு  எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த 4 ஆம் திகதி கோட்டை நீதிவானின் இல்லத்தில் பொலிஸார் அவரை ஆஜர் செய்த போது எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 5 ஆம் திகதி நகர்த்தல் பத்திரம் ஊடாக  வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு,  ஜோஸப் ஸ்டாலின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், எமிர்சா டீகல்,  நுவன் போப்பகே உள்ளிட்ட குழுவினரால் வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.  

அதன்படி பிணை குறித்த உத்தரவுக்காக, பீ 22225/ 22 எனும் குறித்த வழக்கு இன்று 08 ஆம் திகதி விசாரணைக்கு வந்தது.

இன்று 08 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, 6 ஆவது சந்தேக நபர் ஜோஸப் ஸ்டாலின் மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருக்கவில்லை.

அத்துடன் 13 ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்ட  அமல் சாலிந்த என்பவர் இராணுவ பொலிஸாரின் பொறுப்பில் இருந்த நிலையில் அவரும் மன்றில் ஆஜர் செய்யப்ப்ட்டிருந்தார்.

அவர்கள் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகே மன்றில் முன்னிலையானார்.

பொலிஸார் சார்பில், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சரின் ஆலோசனைக்கு அமைய  பொலிஸ் பரிசோதகர் போதிரத்னவும், உப பொலிஸ் பரிசோதகர் லெஸ்லியும் மன்றில் ஆஜராகினர்.

இதன்போது மன்றில் விடயங்களை முன்வைத்த பொலிஸ் பரிசோதகர் போதிரத்ன,  ஜோஸப் ஸ்டாலின், இந்த நீதிமன்றின் உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்  நுழைந்ததாகவும்,  அதனால் நீதிமன்றம் பொருத்தமான உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரினார்.

இதனையடுத்து நீதிவான் திலின கமகே தனது பிணை குறித்த உத்தரவை அறிவித்தார்.

'வழக்கின் 13 ஆவது சந்தேக நபரான அமல் சாலிந்த கடந்த ஜூலை 5 ஆம் திகதி இராணுவ பொலிஸாரின் பொறுப்பில் அனுப்பட்ட நிலையில், அவர் தொடர்பில் கடந்த ஜூலை 25 ஆம் திகதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

6 ஆம் சந்தேக நபரான ஜோசப் ஸ்டாலின்  கடந்த நான்காம் திகதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.

இருவருக்கு எதிராகவும் கடந்த மே 28 ஆம் திகதி பீ 22225/22 எனும் வழக்கில் நீதிமன்ற உத்தரவை  மீறி செயற்பட்டதாகவும், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழும்,  தண்டனை சட்டக் கோவையின் கீழும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந் நிலையில் கடந்த 5 ஆம் திகதி 6 ஆம் சந்தேக நபரான ஜோசப் ஸ்டாலின் சார்பில் பிணை கோரி வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 

இந்த நீதிமன்றின் உத்தரவை மீறி செயற்பட்டதாக கூறி, ஒருவருக்கு எதிராக இதே நீதிமன்றம் வழக்கு விசாரிக்க முடியாது எனவும், நீதிமன்ற அவமதிப்பு குறித்து மேன் முறையீட்டு நீதிமன்றிலேயே வழக்கு விசாரணைகள் நடாத்தப்படல் வேண்டும் எனவும்  இதன்போது வாதங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில்  மேன் முறையீட்டு நீதிமன்றின் இரு வழக்குத் தீர்ப்புக்களையும் அவர் மன்றுக்கு எடுத்துக்காட்டியிருந்தார்.

இந் நிலையில் 09 ஆம் திகதி பொலிஸ் தரப்பில் பொலிஸ் பரிசோதகர் போதிரத்ன ஆஜராகி பொருத்தமான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியுள்ளார்.

இந் நிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்தின் போது முன் வைக்கப்பட்ட மேன் முறையீட்டு நீதிமன்றின் வழக்குத் தீர்ப்புக்கள் தொடர்பில் இம்மன்று அவதானம் செலுத்துகின்றது.

6, 13 ஆம் சந்தேக நபர்களுக்கு எதிராக  இதே நீதிமன்றின் முன்னுள்ள 22225/22 எனும் வழக்கின் உத்தரவை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

6 ஆம் சந்தேக நபரான  ஜோசப் ஸ்டாலினுக்கு நீதிமன்ற உத்தரவு முறையாக கையளிக்கப்பட்டதாக பதிவுகள் இருந்தாலும் 13 ஆம் சந்தேக நபரான அமல் சாலிந்தவுக்கு அவ்வாறு கையளித்தமைக்கான பதிவுகள் வழக்குப் புத்தகத்தில் இல்லை.

எது எப்படியாயினும், இதே நீதிமன்றின்  முன்னுள்ள வழக்கின் உத்தரவை மீறியமைக்காக, இதே நீதிமன்றில் வழக்கு விசாரணை செய்ய முடியுமா என்பது குறித்து இம்மன்று ஆராய்கிறது. 

நீதிமன்ற அறைக்குள் இடம்பெறும் அவமதிப்பு தொடர்பில் செயற்பட அதே நீதிமன்றுக்கு அதிகாரம் இருந்தாலும், நீதிமன்றுக்கு வெளியே இடம்பெறும் ஒரு அவமதிப்பு குறித்து செயற்பட, உத்தரவை பிறப்பித்த நீதிமன்றுக்கு சட்ட ரீதியிலான அதிகாரம் இல்லை. 

இவர்கள் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளமை தெளிவாகினாலும், அது குறித்து மேன் முறையீட்டு நீதிமன்றிலேயே வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இது குறித்து ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனின் வாதத்தை இம்மன்று ஏற்றுக்கொள்கிறது.

அடுத்து சந்தேக நபர்களுக்கு எதிராக பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுள்ளது.

சேதப்படுத்தப்பட்டதாக கூறபப்டும் பொதுச் சொத்தின் பெறுமதி 33 ஆயிரத்து 650 ரூபா என பொலிஸாரால்  அறிக்கை இடப்பட்டுள்ளது.

சேதமான பொதுச் சொத்தின் பெறுமதி ஒரு இலட்சம் ரூபாவுக்கும் குறைவாக இருப்பின் அதனை தண்டனைச் சட்டக் கோவையின் கீழான சேதப்படுத்தலாக கருதுமாறு  சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு வழங்கியுள்ள ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில், பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் 8 (1) ஆம் அத்தியாயத்தின் கீழ், பெறுமதி ஒரு இலட்சத்துக்கும் குறைவு எனில் பிணை தொடர்பில் விஷேட காரணிகள் தேவையற்றது.

ஏனைய குற்றச்சாட்டுக்கள் தண்டனை சட்டக் கோவையின் கீழ்  பிணையளிக்க முடியுமான குற்றச்சாட்டுகளாகும்.

எனவே  சந்தேக நபர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இம்மன்று, இருவரையும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகலில்  விடுவிக்கிறது.' என கோட்டை நீதிவான் திலின கமகே அறிவித்தார். அதன்படி இவ்வழக்கை எதிர்வரும்  ஒக்டோபர் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இந் நிலையில்,  அதன் பின்னர் மன்றுக்கு ஜோஸப் ஸ்டாலின் அழைத்து வரப்பட்டு பிணை கையெழுத்திட்ட பின்னர் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார். பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த அமல் சாலிந்த, மீண்டும் இராணுவ பொலிஸாரின் பொறுப்பில் அழைத்து செல்லப்பட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43