கப்பல் ஏற்படுத்தியுள்ள கலகம்

By Digital Desk 5

08 Aug, 2022 | 12:06 PM
image

-ஆர்.ராம்-

சீனாவின் நவீன கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் நிகழ்வுகள், உள்நாட்டிலும், பிராந்திய, பூகோள ரீதியிலும் கலகத்தை ஏற்படுத்துவதாக மாறிவிட்டன.

இதற்கு அடிப்படையில் காரணமாக இருப்பது, இந்தியா தனது தேசத்தின் தேசிய பாதுகாப்பு மீது கொண்டிருக்கும் அதீதமான கரிசனைகளும், அமெரிக்கா தலைமையிலான பங்காளிகளின் மூலோபாயங்களும் தான். 

இந்திய இராணுவத்தின் ஓய்வுநிலை  புலனாய்வு நிபுணரும் தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்தவர்களுள்  ஒருவருமான கேர்ணல் ஆர்.ஹரிகரன் கட்டுரையாளருடன் உரையாடிய போது அதனை மிகத்தெளிவாக குறிப்பிட்டார்.

“சிறிசேன - ரணில் கூட்டு அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோது, அம்பாந்தோட்டை துறைமுகத்தினை 99வருட குத்தகைக்கும், கொழும்பு துறைமுக நகரின் ஒட்டுமொத்தமான நிருவாகத்தையும் சீனாவிற்கு வழங்கியமையால் அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான உக்கிரமடைந்த பலப்பரீட்சை நீடிக்கப்போகின்றது”என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறிருக்கையில், 2014ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் தரித்து நின்று சென்றிருந்தது. அச்சமயத்தில், இந்துசமுத்திரப் பிராந்தியமே பதற்றமடைந்திருந்தது. இந்தியாவின் தென்பகுதி முழுவதிலும் தேவைக்கதிகமான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வை ஒட்டியதாகவே ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பதவியும் முடிவுக்கு வந்தது. பதவியிலிருந்து, இறங்கிய  மஹிந்த, 'என்னை தோற்கடிப்பதற்கு இந்தியப் புலனாய்வு அமைப்பான 'றோ' திரைமறைவில் செயற்பட்டிருந்தது' என்று பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

பின்னரான காலத்தில் பிரதமர் பதவிக்கு வந்த ரணில், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமான விஜயமொன்றைச் செய்திருந்தபோது, இந்திய இராஜதந்திர ஆலோசகர்களும் பங்கேற்ற இராப்போசன விருந்தில் பங்கேற்றார். அதன்போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவுக்கு வழங்கும் தீர்மானம் தொடர்பில் ரணிலிடத்தில் வினாத்தொடுக்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த ரணில், “இந்தியா 32கிலோமீற்றரில் உள்ளது, சீனா 3500 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரத்தில் இருக்கின்றது. எதற்காக அச்சப்படுகின்றீர்கள்” என்று சர்வசாதாரணமாகவும் சாணக்கியமாகவும் பதிலளித்திருந்தார். இது, இராஜதந்திர பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு 'திருப்திகரமானதாக' இருந்திருக்கவில்லை. அதுதான் ரணில் மீதான 'நெருடல்' தற்போது வரையில் நீள்வதற்கு காரணமாகின்றது.

அவ்வாறிருக்க, மேற்படி இருநிகழ்வுகளிலும், இந்தியாவின் கரிசனைக்குட்பட்டிருந்தவர்கள் தான் ரணிலும், மஹிந்தவும். தற்போது அவர்கள் இருவரும் ஓரணியில் உள்ளார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்கவுள்ளது.

அம்பாந்தோட்டைக்கு வருகை தரும் சீனாவின் 'யுவான் வாங் 5' என்ற கப்பல் அந்நாட்டின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு வகைக் கப்பலின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தது. இந்த வகையான ஏழு கப்பல்களை சீனா தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

இந்தக் கப்பலானது, சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டுமானத் தளத்தில் கட்டப்பட்டு 2007 செப்டெம்பரில் சேவையில் இணைக்கப்பட்டது. 222-மீற்றர் நீளமும் 25.2-மீற்றர் அகலமும் கொண்ட இந்த கப்பலை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) உத்தி ஆதரவுப் படை (எஸ்.எஸ்.எப்) ஆகியன கூட்டிணைந்து இயக்குகின்றன. 

அத்துடன் இந்தவகைக் கப்பல்களை சீனா, செயற்கைக்கோள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுதல், தகவல்தொடர்பாடல், மின்னணு வலையமைப்பு ஆகிய செயற்பாடுகளை கண்காணிக்கப் பயன்படுத்துகிறது. பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் முழுவதும் இயங்கும் திறன் கொண்ட இந்தக் கப்பல் பீஜிங்கின் 'நிலம் சார்ந்த கண்காணிப்பு' நிலையங்களுக்கும் துணைபுரிகின்றன.

இறுதியாக, 'யுவான் வாங் 5' கப்பலானது, சீனாவின் 'லாங் மார்ச் 5பி' ஏவுகணை டியாங்காங் விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டபோது ஆய்வகத்தொகுதி மற்றும் கடற்பரப்பினைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதன்பின்னர் அக்கப்பல் முக்கிய பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை.

அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவின் ஆய்வுகளின் படி இந்தக் கப்பலானது, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் உத்திகளை முன்னெடுப்பதாக உள்ளதோடு, சைபர், மின்னணு, தகவல், தகவல் தொடர்பு, உளவியல் போர் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தான், அம்பாந்தோட்டைக்கு வருகை தரும் 'யுவான் வாங் 5' கப்பல் தொடர்பில் இந்தியாவும் அதீதமான கரிசனையைக் கொண்டு, குறித்த கப்பல் அப்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்துள்ளது, எடுத்துக்கொண்டுமிருக்கின்றது.

ஏனென்றால், 750கிலோமீற்றர் சுற்றளவில் வான்வழி கண்காணிப்பை நடத்தும் திறனைக் கொண்டிருக்கும் குறித்த கப்பல் அம்பாந்தோட்டையில் நங்கூரமிட்டாலோ, அல்லது அதற்கு அண்மித்த பகுதியில் தரித்து நின்றாலோ அது நிச்சயமாக  இந்தியாவின் தென்பிராந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேராள ஆகியவற்றை 'உளவு' பார்க்கும் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.

குறிப்பாக, கூடங்குளம் மின்நிலையம், கல்பாக்கம் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள்;, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்னிந்தியாவின் ஆறு துறைமுகங்கள், தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள இந்தியப்படைகளின் தளங்கள், கேராளவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் ஆகியவற்றை சீனா இலக்கு வைக்கலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு உள்ளது.

இதனைவிடவும், குறித்த கப்பல் அம்பாந்தோட்டையில் தரித்துச் சென்றால் அதன்பின்னர் சீனாவின் இதர நவீன போர்க்கப்பல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அடைவதை இலங்கையால் மறுதலிக்கமுடியாத சூழல் தோற்றம் பெற்றுவிடும்.

அவ்வாறான நிலைமையானது, அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனா, தனது கடற்படை தளமாக பயன்படுத்துவதற்கு ஏதுவான நிலைமைகளை உருவாக்கிவிடும். ஏற்கனவே வடக்கு எல்லைகளில் சீனாவுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கும் இந்தியா தனது, தென்பிராந்தியத்திலும் பதற்றமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

அவ்விதமான சூழல் ஏற்படுவது, இந்தியாவுக்கு இரட்டைத் தலைவலியே. ஆகவே அவ்விதமான நிலைமைகளை ஏற்படுதை முளையிலேயே கிள்ளி எறிவதையே இந்தியா விரும்புகிறது. அதற்காக கங்கணங்கட்டிச் செயற்படுகின்றது.

அத்தோடு, 'யுவான் வாங் 5' இன் அம்பாந்தோட்டை வருகை விடயத்தில் அமெரிக்காவும் தீவிரமான கரிசனையைக் கொண்டிருக்கின்றது. தாய்வான் விவகரத்தில் தமக்கும், சீனாவுக்கும் இடையே நிலைமைகள் மேலும் முறுகலடைந்து போர் மூண்டால், அம்பாந்தோட்டையே சீனாவின் கடற்படைக்கான 'விநியோக மையமாக' மாறும் அதற்கான திட்டங்கள் சீனாவிடத்தில் உள்ளமையை அமெரிக்கா அறியாமலில். அது அமெரிக்காவின் போர் மூலோபாயத்திற்கு பாரிய பின்னடைவுகளைஏற்படுத்தலாம் என்ற அச்சம் அதற்குள்ளது.

அதுமட்டுமன்றி, இவ்விதமான சீனக்கப்பல்கள் இந்துசமுத்திரப் பிராந்தியத்திற்குள் பிரவேசிக்கும் நிலைமை தொடர்ந்தால் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தில் தமது சுதந்திரமானதும், சுயதீனமானதுமான கடற்போக்குவரத்தும் கேள்விகுள்ளாகும் என்ற அச்சம் அமெரிக்கா உட்பட இம்மூலோபாயத்தின் பங்காளிகள் அனைவருக்குமே உள்ளது.

ஏற்கனவே, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய நிலையில், 'மத்திய ஆசிய' மூலோபாயத்தை கைவிட்டுள்ள அமெரிக்கா, ஆசியாவில் செல்வாக்குச் செலுத்தவல்ல இந்தோ-பசுபிக் மூலோபாயத்தினையும் சிக்கலுக்கு உள்ளாக்குவதை ஒருபோதும் விரும்பாது.

அதுமட்டுமின்றி, சீனாவின் பாதை மற்றும் பாதை முன்முயற்சித் திட்டத்திற்கு(பி.ஆர்.ஐ) சமாந்தரமாக அமெரிக்கா முன்னெடுக்கும் 'மேம்பட்ட உலகத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் (பி.3.டபிள்யூ) முன்முயற்சியும் பாதிக்கப்படும் அபாயங்களும் உள்ளன.

இதனால் தான், இந்திய வெளியுறவு அமைச்சு, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட தரப்புக்கள் உயர்மட்ட சந்திப்புக்களை தொடர்ச்சியாக நடாத்தி கரிசனைகளை வெளியிட்டு வருகின்றன.

அதுமட்டுமன்றி, கம்போடியாவில் இடம்பெற்று வரும் 'ஆசியான்' மாநாட்டில் பங்கேற்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கனும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.எஸ்.ஜெய்சங்கரும் தனித்தனியாக சந்தித்துள்ளனர்.

அமைச்சர் ஜெய்சங்கரும், செயலாளர் அன்டனி பிளிங்கனும் பிறிதொரு சந்திப்பை நடத்தி இலங்கை விடயம் சம்பந்தமாக உரையாடியுள்ளனர். இந்தச் சந்திப்புக்களின் சாரம்சமான தகவல்கள் வெளியிடப்பட்டாலும், சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல் விவகாரம் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கும் என்பது நிச்சயமானது.

அதேநேரம், சீனா தரப்பும் அமைதியாக இருக்கவில்லை. 'யுவான் வாங் 5' அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடும் வரையில் ஓயப்போவதில்லை என்ற பாணியில் செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

மேற்கூறியபடி சீனாவின் 'யுவான் வாங் 5' வருகைக்கு பின்னால் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அதன் பங்காளிகளுக்கு தனித்தனியாகவும் கூட்டாகவும் ஆழமான கரிசனைகள் இருக்கின்றன. அதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நன்கு அறிவார்.  ஆனால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அனுமதியை வழங்கிவிட்டால் அவர் கையறு நிலையில் உள்ளார்.

இந்நிலையில் அமைச்சரவைப் பேச்சாளாரான அமைச்சர் பந்துல குணவர்த்தன, “விவகாரத்தின் ஆழம் அறியாது' சீனக்கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காகவே வருகின்றது” என்று வேடிக்கை கருத்துக்களை வெளியிடுகின்றார். பாவம் அவர்.

'யுவான் வாங் 5' திட்டமிட்டபடி வந்து சென்றால், அது சீனாவுக்கு முதற்கட்ட வெற்றியாகவும், அமெரிக்க, இந்தியா உள்ளிட்ட பங்காளிகளுக்கு தோல்வியாகவும் அமையலாம். ஆனால் அதன்பின்னர் ஏற்படப்போகும் கலகத்தால் பாதிக்கப்படப்போவது என்னமோ தீவு தேச மக்கள் தான்.

ஏனென்றால், அண்மைக்கால நெருக்கடிகளுக்கு கைகொடுத்துக்கொண்டிருப்பது இந்தியா, அடுத்துவரும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு கைகொடுக்கவிருப்பது அமெரிக்கா. ஆக, சீனக்கப்பல் வருகையால் இந்தியாவும், அமெரிக்காவும், பங்காளிகளும் சினங்கொண்டு கைவிரித்தால் நிலைமை எப்படியிருக்கும்?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19