யுத்தத்தில் அங்கவீனமுற்ற ஓய்வுபெற்ற படைவீரர்களின் கோரிக்கையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வு திட்டமிட்டவகையில் அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதற்கும் படைவீரர்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையே பிளவை ஏற்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சியாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

ஜனாதிபதி அலுவலக வளாகத்திற்கு வந்த அப்பாவிகளான அங்கவீனமுற்ற படையினர் அவர்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதை அறிந்திருக்கவில்லை என்பது தெளிவானதாகும். பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்து தேவைப்பாடுகளும் முழுமை பெற்றிருந்த நிலையில் இத்தகையதொரு சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்பதே அரசாங்க எதிர்ப்புச் சக்திகளின் நோக்கமாகும். 

இந்தக் கோரிக்கையைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு திறைசேரியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு அது குறித்து பாதுகாப்பு அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த வகையில் ஜனாதிபதி இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டிருந்தபோதும் நீண்டகாலமாக அரசாங்கத்தை எதிர்த்துவரும் அரசியல் அமைப்புகளில் செயற்பட்டுவரும் சில பிக்குகளினதும் இன்னும் சில வெளியாட்களினதும் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட நேற்றைய நிகழ்வுகள் அரசியல் நோக்கம் கொண்டதாகும் என்பது தெளிவானதாகும். 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி அலுவலக பிரதிநிதிகளுக்கும் படைவீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையே பாதுகாப்பு அமைச்சில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே இந்த அசம்பாவித நிகழ்வு இடம்பெற்றுள்ளது. 

இந்த சேவை ஓய்வூதியக் கொடுப்பனவை 12 வருடங்களுக்குக் குறைந்த காலம் சேவையில் ஈடுபட்ட அங்கவீனமுற்ற படைவீரர்களுக்குப் பெற்றுக்கொடுப்பது இராணுவத்தின் ஓய்வூதிய பணிக்கொடை சட்டக்கோவையின் ஏற்பாடுகளுக்கு ஏற்புடையதல்லாதபோதிலும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் அந்த சட்டதிட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு சேவை ஓய்வூதியத்தை இந்த படைவீரர்களுக்கும் பெற்றுக்கொடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்  இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அலுவலகத்தில் சில வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஒரு விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததுடன், ஜனாதிபதி அலுவலக பாதுகாப்பு அதிகாரிகளை அசௌகரியத்திற்குள்ளாக்கி அலுவலக வளாகத்திற்குள் அத்துமீறிப் பிரவேசிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஓய்வுபெற்ற படைவீரர்களின் கோரிக்கையை முன்னிறுத்தி அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் வகையில் ஒரு கலகத்தை உண்டுபண்ண வேண்டும் என்பது சூழ்ச்சிக்காரர்களுக்கு தேவையாக இருந்தது. கடந்த சில நாட்களாக அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பொலிஸாரும் பாதுகாப்புப் பிடையினரும் விளங்கிக்கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பதும் உறுதியாகியுள்ளது.  

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் தற்போது வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவுகள், இடர் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக சேவை ஓய்வூதியத்தையும் வழங்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு 2016 நவம்பர் மாதம் 06 ஆம் திகதி ஒரு விசேட ஊடக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.