(எம்.மனோசித்ரா)
சர்வகட்சி அரசாங்கத்துக்காக அரசியல் கட்சிகளுடன் பல நாட்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒவ்வொரு கட்சியும் முன்வைத்த முன்மொழிவுகள் இன்று 08 ஆம் திகதி திங்கட்கிழமை, கலந்துரையாடல்களில் பங்குபற்றிய அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சம்பிக ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணி ஆகியோருடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் இன்னும் சில தமிழ் அரசியல் கட்சிகளுடன் மாத்திரமே சர்வகட்சி அரசாங்கம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களின் அபிலாஷைகளுக்காக அரசியல் சித்தாந்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அனைவரது ஆர்வத்தையும் பாராட்டினார்.
19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீளக் கொண்டுவருவது தொடர்பில் ஜனாதிபதியின் நிலைப்பாட்டுடன் 43 ஆவது படையணி நம்பிக்கையுடன் செயற்படுவதாகவும், அரச நிறுவனங்களுக்கு தலைவர்களை நியமிக்கும்போது அரசியல் கட்சி அமைப்பை மறந்து நிபுணத்துவம் வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டிய தேவை வலுவாக இருப்பதாகவும் 43 ஆவது படையணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இதன் போது தெரிவித்துள்ளார்.
அரசியல் சீர்திருத்தங்களினால் மாத்திரம் ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த சம்பிக்க ரணவக்க , தொழில் வல்லுநர்களின் பங்களிப்பும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கல்வி சீர்திருத்தங்களில், எதிர்கால உலகுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை கட்டியெழுப்பும் பொதுவான வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் மூலம் படிப்படியாக முன்னேற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பிலான கலந்துரையாடலில் அனைத்து அரசியல் கட்சிகளின் தனித்துவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அடிப்படை ஆவணத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் மூலம் சர்வகட்சி அரசாங்கம் பற்றிய எதிர்பார்ப்புகளை அடைந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சர்வகட்சி அரசாங்கத்திற்கான பொதுவான வேலைத்திட்டம் தொடர்பில் தமது குழு கலந்துரையாடியதாகவும், அரசியல் கட்சிக் கொள்கைகள் தொடர்பில் இணக்கம் காண முடியாவிட்டாலும், பொதுவான இணக்கப்பாடு தேவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM