சீதா ராமம் - விமர்சனம்

By Digital Desk 5

06 Aug, 2022 | 07:22 PM
image

நடிகர்கள் : துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தானா, வெண்ணிலா கிஷோர், சுமந்த் மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் : ஹனு ராகவபுடி

ஒளிப்பதிவு : பி எஸ் வினோத் & ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

இசை : விஷால் சந்திரசேகர்

தயாரிப்பு : அஸ்வினி தத்  &  ஸ்வப்னா தத்

மலையாள நடிகர் துல்கர் சல்மான் காதல் கதைகளில் நடிப்பதில் தேர்ச்சி பெற்றவர். பொலிவுட் நடிகை மிருணாள் தாக்கூருடன், அவருடைய டிஜிட்டல் திரை காதல் எம்மாதிரியான மாயஜால எதிர்வினையை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதைக் காண்போம்.

இந்திய ராணுவத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றுகிறார் ராம் எனும் துல்கர் சல்மான். ஹைதராபாத் ராஜ வம்சத்து இளவரசி நூர்ஜஹானாக மிருணாள் தாக்கூர் இருக்கிறார். 1964 ஆம் ஆண்டில் காஷ்மீரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் போது சாமர்த்தியமாகவும், புத்திசாலித்தனத்துடனும் செயல்பட்ட ராம் மற்றும் அவரது குழுவினரை தேசம் முழுவதும் கதாநாயகர்களாகக் கொண்டாடுகிறது. 

இந்த கொண்டாட்டம், வானொலி மூலமாக தேச முழுவதும் பிரபலமாகிறது. இந்த தருணத்தில் ஹைதராபாத்தை சேர்ந்த ராஜ வம்சத்து இளவரசியான நூர்ஜஹான், ‘சீதா மகாலட்சுமி’ என்ற பெயரில் அன்றைய தேசத்து நாயகனான காஷ்மீர் ராணுவத்தில் பணியாற்றும் ராமிற்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். 

இந்த கடிதம் வாயிலாக காதல் அரும்புகிறது. இந்த காதலை ராம் எப்படி வளர்த்தெடுத்தார். தன் காதலியை தேடி கண்டறிந்து கை பிடித்தாரா? இல்லையா?  என்பதை ஒரு காலகட்டத்திய கதையாகவும்,  சூழ்நிலை கைதியாக பாகிஸ்தான் சிறையில் வாடும் ராம், தன் காதல் மனைவிக்காக எழுதிய காதல் கடிதத்தை கொண்டு சேர்க்குமாறு ,அந்நாட்டு ராணுவ தளபதியிடம் கேட்டுக்கொள்கிறார். அந்த கடிதம் அவரது பேத்தியான ரஷ்மிகா மந்தானா, சீதா மகாலட்சுமிடம் கொண்டு சேர்த்தாரா? இல்லையா? என்பதை 1985 ஆம் ஆண்டிற்கானக் காலகட்டத்திய கதையாகவும் ‘சீதா ராமம்’ உருவாகி இருக்கிறது.

அனுப்புநர் முகவரியற்ற தனக்கு வந்த காதல் கடிதத்தை வாசித்து.. வாசித்து... அதிலுள்ள தூய்மையான காதலை விரும்பி, நேசித்து, அவளைச் சந்திப்பதற்காக காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு பயணிக்கிறார் ராம்.பிறகு டெல்லியிலிருந்து ஹைதராபாத்திற்கு பயணிக்கிறார். 

ஹைதராபாத்தில் காதலியை சந்திக்கும் தருணம்.. இயக்குநர் = ஒளிப்பதிவாளர் =பின்னனியிசை இந்த மூவர் கூட்டணி திரையில் நிகழ்த்தும் மாயஜாலம், பார்வையாளர்களையும் காதல் வசப்பட வைத்திருக்கிறார்கள்.  படைப்பு முழுவதும் இந்த மூவர் கூட்டணியின் ஆளுமை ரசிகர்களை சோர்வடையச் செய்யாமல் உற்சாகத்துடன் கதையுடன் பயணிக்கவைக்கிறது.

காதல் அந்தஸ்தை பார்க்காது. மதத்தை பார்க்காது. அன்பை மட்டுமே பகிர்ந்து கொள்ளும். பரிமாறிக் கொள்ளும். ராமான துல்கர் சல்மானும், சீதா மகாலட்சுமியான மிருணான் தாக்கூரும் சந்தித்துக் கொள்ளும் ஒவ்வொரு காட்சிகளும், இயக்குநரின் ரசனையான கற்பனை, பார்வையாளர்களையும் குறிப்பாக தற்போது காதலித்துக் கொண்டிருக்கும் காதலர்களையும், காதலித்த காதலர்களும் கரவொலி எழுப்பி ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

காதலியுடன் தன் கடித தங்கையைக் காணச் செல்லும் ராம், அவர் ஒரு பாலியல் தொழிலாளி என்பதையறிந்தவுடன் செய்யும் செயல், ராமின் கதாப்பாத்திரம் அவர் ராணுவ வீரர் என்ற உயரத்தைக் கடந்து, மனித நேயமிக்க மாமனிதனாகக் காட்டியிருப்பது இயக்குநரின் திரையாளுமைக்கு சிறந்த சான்று. 

இந்திய தேசத்தின் மீது முழுமையான வெறுப்புணர்வை கொண்டிருக்கும் அஃப்ரின் என்ற கதாபாத்திரம், லண்டனில் படிக்கும் போது இந்தியர் ஒருவரின் காரை எரிக்கிறார். இது தொடர்பான விவகாரத்தில் காரின் உரிமையாளர் இழப்பீட்டை கேட்க, அந்த இழப்பீட்டுக்காக பாகிஸ்தான் திரும்பும் அவள், தன் தாத்தா (பாகிஸ்தான் ராணுவ அதிகாரி) ராம் எழுதி, சீதா மகாலட்சுமி என்பவரிடம் சேர்க்க வேண்டிய கடிதம் ஒன்றை சேர்ப்பித்த பிறகு தான் சொத்து கிடைக்கும் என்ற ஒரு நிபந்தனையை விதிக்கிறார்.

அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு பயணிக்கும் பாகிஸ்தானியான அப்ஃரீன், இந்திய ராணுவத்திற்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான அன்பை... காதலுடனான சம்பவங்களின் மூலம் உணர்ந்து, இறுதியில் பாகிஸ்தான் சிறையில் வாடும் ராம் எனும் இந்திய ராணுவ வீரருக்காக, அவரது காதலியான சீதா மகாலட்சுமியிடம் மனமுருகி மன்னிப்பு கேட்கும் போது.. தேசியமும், காதலும் ஒருங்கே உயரப் பறக்கிறது. காதல் கதையிலும் தேசிய உணர்வை ஊட்டிய இயக்குநருக்கு சல்யூட்.

காதல் கதை என்றாலும் வலிமையான அடர்த்தியுடன் நேர்த்தியாக எழுதப்பட்ட திரைக்கதையால் ‘சீதா ராமம்’ ரசிகர்களை உற்சாகமடைய செய்திருக்கிறது.

சீதாராமம் -- தேசியமும், காதலும் கலந்த காவியம்.  3.5 / 5 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right