ஹிருணிகாவை சந்தேகநபராகப் பெயரிடமுடியாது - கோட்டை நீதிவான்

By T. Saranya

06 Aug, 2022 | 03:28 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கோட்டை, செத்தம் வீதியில் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டமையை மையப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட 10 பேரை சந்தேகநபர்களாகப் பெயரிட கோட்டை பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று (05) நிராகரித்தார்.

ஹிருணிகா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஃபர்மான் காஸிம், சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோருடன் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டே நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த ஜுலை 6 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஹிருணிகா உள்ளிட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் நீதிமன்றில் ஆஜராகினர். 

இதன்போது நீதிமன்றில் வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ், ஹிருணிகா உள்ளிட்டோர் ஜுலை 6 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாகவும் எனினும் அன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படாத அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான தயார்ப்படுத்தல் ஜுலை 25 ஆம் திகதியின் பின்னரேயே இடம்பெற்றதாக சுட்டிக்காட்டினார். அப்படியானால் ஆட்சிமாற்றத்தின் கரங்களும் ஹிருணிகாவிற்கு எதிரான வழக்கின் பின்னணியில் இருக்கின்றதாவென அவர் கேள்வி எழுப்பினார். 

இவ்வாறான நிலையில் சந்தேகத்திற்கிடமான, ஏற்றுக்கொள்ளமுடியாத ஆவணங்களை மையப்படுத்திய வழக்கொன்றில் ஒருவரை சந்தேகநபராகப் பெயரிடமுடியாது என அடிப்படை ஆட்சேபணையொன்றை சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் முன்வைத்தார்.

இந்நிலையில் ஹிருணிகா உள்ளிட்டோரை சந்தேகநபர் கூண்டில் கூட ஏற்றுவதற்கு மறுத்த நீதிவான் திலின கமகே, பொலிஸாரின் கோரிக்கை பிரகாரம் குறித்த 10 பேரையும் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதற்கு மறுத்து வழக்கை திகதி அறிவிப்பு எதுவுமின்றி மூடிவைக்க உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right