யுவான் வோங் - 5 ஆய்வு கப்பல் அல்ல ! உளவுக் கப்பல் - கடும் சீற்றத்தின் உச்சத்தில் இந்தியா

Published By: Digital Desk 5

06 Aug, 2022 | 07:09 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

யுவான் வோங் - 5 என்ற சீன இராணுவ கப்பலின் இலங்கை விஜயமானது  பிராந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்பத்தியுள்ளது. இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்  குறித்த கப்பலின் வருகைக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.  

இதுவொரு ஆய்வு கப்பல் அல்ல. மாறாக செய்மதிகள் மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் செலுத்தப்படுவதை கண்காணிக்கும் திறன்  உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ள  சீன இராணுவத்தின் மூலோபாய படையணியின் கண்காணிப்பு கப்பலாகும். 

இதனை  இலங்கை அனுமதிப்பதானது இந்தியாவின் மூலோபாய நலன்களை நேரடியா பாதிப்பதுடன் இந்தியாவின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டிருக்கும் இலங்கையின் கொள்கைக்கு  முரணானது என்பதே டெல்லியின் அழுத்தங்களாக உள்ளன.

மறுப்புறம் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தையும் மீறுகின்றது. அதாவது வர்த்தக மற்றும் பொருளாதார நோக்கங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டிய அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுபாப்பு தொடர்பான சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் யுவான் வோங் - 5 போன்ற கப்பல்களை அனுமதிப்பதானது இலங்கை - இந்திய உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. 

ஏனெனில் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள நிலைiயில் இந்தியா பெரும் உதவிகளை செய்துள்ளது. எரிபொருள் உள்ளிட்ட இந்திய உதவிகள் கிடைத்திருக்கா விடின் இலங்கை முழு அளவில் ஸ்தம்பிக்கும் நிலையே ஏற்பட்டிருக்கும். 

அதே போன்று மீள் செலுத்த கூடிய தன்மை இலங்கைக்கு கிடையாது என்ற உணர்ந்தும் இந்தியா உதவி செய்துள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சீன இராணுவத்தின் யுவான் வோங் - 5 கப்பலை அனுமதித்து டெல்லியை  எரிச்சலடைய செய்துள்ளது கொழும்பு.

இந்த கொந்தளிப்பானது பிராந்தியத்தில் அதிகாரப் போட்டியை அதிகரித்துள்ளதுடன் அநாவசியமான பதற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவின் பரஸ்பர புரிதல் மற்றும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலான நகர்வாகவே அமைவதாக சீன கப்பலின் வருகையை சுட்டிக்காட்டி டெல்லி கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. 

இதனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார இலக்குகளுக்கு  சீன கப்பல் விவகாரம் பெரும் தலையிடியாகியுள்ளது. ஏனெனில் இந்திய – சீன அதிகாரப்போட்டியில் இலங்கை தற்போது நேரடியாகவே சிக்கி விட்டது. கப்பலை அனுமதித்தால் இந்தியா பகையாகும். 

அனுமதிக்கா விடின் சீனா பகையாகும். எனவே தான் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்ல விரும்புகிறாரா? அல்லது சீனர்களின் கோரிக்கைகளை வழங்கி மேலும் மோசமான கடன் பொறிக்குள் சிக்க போகின்றாரா என்று இராஜதந்திர மட்டத்தில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது. சீன கடன்களால் இலங்கை இன்று மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. 

இலங்கையின் மொத்த வெளிநாட்டு கடன்களில் 10 வீதம் சீன கடன்களாகும் என கூறப்படுவதுடன் இலங்கை கடன்  வரிசையில் சீன இரண்டாவது இடத்தில் உள்ளது. 

எனவே தான் சர்வதேச நாணய நிதியத்துடனான முன்னெடுப்புகளில்  கடன் மறுசீரமைப்பிற்கு சீனாவின் விட்டுக்கொடுப்பு அத்தியாவசியமாகின்றது. இதனை பயன்படுத்தியே சீன தற்போது இலங்கையுடனான நகர்வுகளை கையாள்கின்றது. 

இந்த நிலைமையானது இலங்கையை மேலும் மிக மோசமான வடிவமைப்பிற்குள் கொண்டுச் செல்லும் என பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

வடக்கு தீவுப்பகுதிகளில் சீன மின்திட்டத்தை ஆரம்பிக்க இருந்த நிலையில் இந்தியா அதனை கடுமையாக எதிர்த்து திட்டத்தை பின்வாங்க செய்தது. 

இதனால் கடும் அதிருப்தியடைந்த சீன தூதுவர் பருத்தித்துறைக்கு சென்று இங்கிருந்து இந்தியாவிற்கு எத்தனை மைல் தூரம் என கேட்டார். இவ்வாறு இலங்கையை மையப்படுத்திய இந்திய – சீன அதிகாரப்போட்டியும் பணிபோப்போரும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலைமையிலேயே சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலின் இலங்கை விஜயம் அமைகின்றது.

யுவான் வோங் - 5 இராணுவ கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது. ஜியாங்கியின் துறைமுகத்திலிருந்து கிழக்கு சீன கடல் ஊடாக யுவான் வோங் - 5 கப்பல் இலங்கை நோக்கிய பயணித்தை ஆரம்பித்துள்ளது. 

சீனாவின் மிக நவீன  செய்மதிகளை கண்காணிக்கும் கப்பலாக யுவான் வாங் - 5 குறிப்பிடப்படுகின்றது. மறுப்புறம் செய்மதிகள் மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் செலுத்தப்படுவதை கண்காணிக்கும் திறன்  உள்ளிட்ட பல்வேறு நவீன கண்காணிப்பு வசதிகளை கொண்டுள்ளது. 

எனவே தான் இதனை ஆய்வு கப்பலாக கருத முடியாது என்றும் இதுவொரு உளவு கப்பல் என்று இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குறிப்பிடுகின்றன.  

இவ்வாறான உளவு கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் அனுமதிப்பதானது சீனாவின் வெளிக்கள இராணுவ தளமாக பயன்படுத்த கூடும் என்று பன்னாட்டு ஐயப்பாடுகளை வலுப்படுத்துவதாகவே உள்ளதாக பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 எனவே தான் இந்தியா கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கை - இந்திய கடற்பரப்பை பொறுத்த வரையில் இரு தரப்புமே பரஸ்பர நன்மைகளின் அடிப்படையில் கையாளப்படுகின்றது. எனவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நகர்வுகள் இந்த கடல்பரப்பில் காணப்படுகின்றமையை ஏற்க முடியாது என்பதனை டெல்லி ஏற்கனவே இலங்கைக்கு தெரிவித்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்