தாய்வான் பாதுகாப்பு அமைச்சின் ஏவுகணை தொழில்நுட்ப முன்னணி நிபுணர் விடுதி அறையில் சடலமாக மீட்பு

By Rajeeban

06 Aug, 2022 | 03:27 PM
image

தாய்வான் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் ஓ யாங் (Ou Yang) அவர் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தாய்வான் அரசின் உத்தியோகபூர்வ மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இராணுவத்திற்குச் சொந்தமான தேசிய சுங்-ஷான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைத் தலைவரான ஓ யாங் தெற்கு தாய்வானில் உள்ள ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஓ யாங் தெற்கு பிங்டங் (Pingtung) மாவட்டத்துக்கு பயணம் செய்த நிலையிலேயே அவர் தங்கியிருந்த விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் இன்று காலை காணப்பட்டார்.

தாய்வான் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவராக ஓ யாங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பதவி ஏற்றுக்கொண்டார். தாய்வானின் பல்வேறு ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை அவர் மேற்பார்வையிட்டுவந்தார்.

தாய்வானின் இராணுவ திறன்கள் அதிகரித்து வருவது தனக்கு அச்சுறுத்தலாக சீனா கருதுகிறது. இந்நிலையில் தங்களது கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக தாய்வான் அருகே சீனா போர்ப் பயிற்சிகளை நேற்று ஆரம்பித்தது.

தாய்வான் மீதான தாக்குதலுக்கான ஒத்திகை போன்ற போர் பயிற்சியில் இன்று சனிக்கிழமையும் சீன விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் ஈடுபட்டுள்ளதாக தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் தாய்வான் பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் ஓ யாங் விடுதி அறையில் உயிரிழந்தமை பரபரப்பையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right