சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்துக்கு மகா சங்கத்தினர் ஆசிர்வாதம்

By T. Saranya

06 Aug, 2022 | 01:56 PM
image

சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதி அவர்களின்  வேலைத்திட்டத்திற்கு தாங்கள் பூரண ஆசிர்வாதம் வழங்குவதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நேற்று (05) பிற்பகல் நாராஹேன்பிட்டி, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் மகா சங்கத் தலைமையகத்திற்குச் சென்று மகாநாயக்க வண.மகுலேவே விமல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

அங்கு வருகை தந்திருந்த மகா சங்கத்தினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  ஆசிர்வாதம் அளித்து மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து ராமன்ய மகா நிகாய தலைவர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

“சர்வகட்சி ஆட்சி அமைப்பது குறித்து பல அரசியல் கட்சிகளுடன் அரசு கலந்துரையாடியுள்ளது. அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்றுள்ளன. அவர்களில் பல்வேறு கருத்துகளைக் கொண்ட குழுக்கள் உள்ளன. மேலும் பல்வேறு திறமைகள் உள்ளவர்களும் உள்ளனர்.

அவர்கள் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு அவர்களின் திறமையின் அடிப்படையில் பொறுப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம். கலந்துரையாடல்கள் மூலம் மேலும் பல கருத்துக்களுக்கு இடமளித்து நாட்டிற்கான சரியான வேலைத்திட்டத்தை முன்வைப்பதே எமது நோக்கமாகும்.” எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தில் இன்று நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்த மகா சங்கத்தினர், அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா ராமன்ஞ மகா நிகாயவின் பிரதம பதிவாளர் வண. அத்தங்கனே சாசனரதன மற்றும் ஸ்ரீலங்கா ராமன்ஞ மகா நிகாயவின் பிரதி நீதித்துறை பதிவாளர் வண. ஹல்பன்வில பாலித தேரர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right