சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கவே மஹிந்த, கோட்டாபய பதவி விலகினார்கள் - நாமல் ராஜபக்ஷ

By T. Saranya

06 Aug, 2022 | 12:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகினார்கள். 

நாட்டு நலனுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டகாரர்கள் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின்னரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படுவது முறையற்றது கலவரத்தை அடக்கு முறையாலயே அடக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று இரவு இடம்பெற்றது. இச்சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவோம். பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக தீவிரமடைந்தது.

பாராமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகினார்கள்.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து அமைக்கப்படும் சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என பிரதமரிடம் குறிப்பிட்டுள்ளோம். நாட்டு நலனுக்கான ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்படுவோம்.

கோ ஹோம் கோட்டா என வலியுறுத்தியே காலி முகத்திடல் போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை தொடர்ந்து போராட்டகாரர்களுக்கு அடுத்தக்கட்ட திட்டமிடல் ஏதும் கிடையாது.

காலி முகத்திடலில் போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுப்படுவது முறையற்றதாகும். கலவரத்தை அடக்குமுறையாலேயே அடக்க முடியும். ஜனநாயக ரீதியிலான போராட்டங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் தடையேற்படுத்தாது. ஜனநாயகம் என்று குறிப்பிட்டுக் கொண்டு முன்னெடுக்கப்படும் வன்முறை சம்பவங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right