சர்வகட்சி அரசாங்கமல்ல சர்வகட்சி நிர்வாகம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் - ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஐக்கிய மக்கள் கூட்டணி வலியுறுத்தல்

By T Yuwaraj

05 Aug, 2022 | 09:32 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கமல்ல. சர்வகட்சி நிர்வாகமொன்றே ஸ்தாபிக்கப்பட வேண்டும். குறித்த சர்வகட்சி நிர்வாகத்தின் கீழ் பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்களை நியமித்து அதன் ஊடாக நிர்வாக நடவடிக்கைகள் முன்னெடுக்க்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்பதற்கு தாம் தயாக இல்லை என்றும், சர்வகட்சி நிர்வாகத்தில் நியமிக்கப்படவுள்ள பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்களுக்கு அதிகாரம் மிக்க தலைமைத்துவத்தினை வகிக்க தயார் என்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதனன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை பிரகடன உரையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு சகல கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார்.

அதற்கமைய இவ்வாரம் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தரப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

இந்நிலையிலேயே இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதமதாச , ஐக்கிய மக்கள் கூட்டணியின் பங்காளி கட்சிகளான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன், பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்ரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டோருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின்  பிரதி தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் வீரகேசரிக்கு தெரிவிக்கையில் ,

'சர்வகட்சி அரசாங்கம் என்பதை நாம் நிராகரிக்கின்றோம். மாறாக சர்வகட்சி நிர்வாகமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம்.

சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளை ஏற்பதற்கு நாம் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். அந்த குழுக்கள் அதிகாரம் மிக்க தலைமைத்துவப் பதவியை வகிப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

ஒரு வருட காலத்திற்கு இவ்வாறான சர்வகட்சி நிர்வாகத்தில் எவ்வித ஊதியமும் , கொடுப்பனவும் இன்றி பணியாற்ற நாம் தயாராக இருக்கின்றோம்.

இவை தவிர தற்போது அமுலில் உள்ள அவசர நிலைமை உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும் , ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களின் கைதுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினோம். விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவித்து அது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.' என்றார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right