இலங்கையின் முதல் தர பத்திரிகை வீரகேசரி 92 ஆவது வருடத்தை பூர்த்தி செய்கின்றது

06 Aug, 2022 | 06:59 AM
image

பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியாரினால் வீரகேசரி பத்திரிக்கை நிறுவனம் இன்றைய திகதியில் (06.08.1930) நிறுவப்பட்டு 92 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

வீரகேசரி நாளிதழ் 1930 -ஆம் ஆண்டில் ஒகஸ்ட் 6 ஆம் திகதி புதன்கிழமை அன்று 8 பக்கங்களுடன் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் தொடங்கப்பட்டது. 

இலக்கம் 196, கொழும்பு செட்டியார் தெருவில் நிறுவப்பட்ட வீரகேசரி அச்சகத்திலிருந்து முதலில் வெளியிடப்பட்டது. 

இதன் அப்போதைய விலை 5 சதம். அக்காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு, சுதேசமித்திரன், நவசக்தி, மலேசியாவில் இருந்து தமிழ்நேசன் ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன. வீரகேசரியின் ஆரம்பகால ஆசிரியர் பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார்.

செட்டியார் ஆசிரியராகப் பதவி வகித்த போதும், ஆசிரியப் பகுதியின் பெரும் பொறுப்புகளை அவரது நெருங்கிய நண்பரும் வங்கியாளருமான எச். நெல்லையா என்பவரே கவனித்து வந்தார். 

இவர் ஒரு புதின எழுத்தாளரும் ஆவார். இவர் வீரகேசரியில் பல புதினத் தொடர்களை எழுதி வந்தார். ஈஸ்வரய்யர் என்ற வழக்கறிஞர் வீரகேசரின் பொது முகாமையாளராகப் பணியாற்றினார்.

வீரகேசரி ஆரம்பிக்கப்பட்டு ஓரிரண்டு ஆண்டுகளில் கொழும்பில் கிராண்ட்பாஸ் வீதி 185 ஆம் இலக்கத்துக்கு அதன் அச்சகம் மாற்றப்பட்டது. ஆரம்பத்தில் இலங்கையில் வாழும் இந்தியத் தமிழர் தொடர்பான செய்திகளையும் தலைநகர் கொழும்பை மையமாகக் கொண்ட செய்திகளையுமே வெளியிட்டு வந்தது. 

நாளடைவில், இது ஒரு தேசியப் பத்திரிகையாக உருவெடுத்தது. 1943 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வீரகேசரி ஒரு இலாபகரமான நிறுவனமாக மாறியது. சுப்பிரமணியம் செட்டியாரின் தனிச் சொத்தாக இருந்த இந்நிறுவனம், 1950களின் ஆரம்பத்தில் பொறுப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனமாகியது. 

பொது முகாமையாளராக இருந்த ஈஸ்வர ஐயர் மேலாண்மை இயக்குனரானார். கே. பி. ஹரன் (1939-1959) ஆசிரியராக இருந்தார். சங்கரநாராயணன் பொது முகாமையாளரானார். இவர்கள் மூவரையும் தனது சொந்த ஊரான தமிழ்நாடு ஆவணிப்பட்டியில் இருந்து சுப்பிரமணியம் செட்டியார் இயக்கினார்.

இன்று வீரகேசரியின் அபார வளர்ச்சியானது விசும்பளவு உயர்ந்துள்ளது. உகலகம் முழுதும் வாழும் தமிழறிந்த நெஞ்சங்களில் வீரகேசரி நாளிதழிலுக்கென்று ஓர் தனியிடம் உள்ளது என்பது சிறப்பிற்குரியது. வீரகேசரிக்கு இனிய நல்வாழ்த்துகள்...!

ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை இலங்கை .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right