இலங்கைக்கு மற்றொரு பதக்கம் உறுதி - நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் சாரங்கி

By T Yuwaraj

05 Aug, 2022 | 09:11 PM
image

(இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமிலிருந்து நெவில் அன்தனி)

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

பெண்களுக்கான ஜூடோ போட்டியில் அரை இறுதிக்கு நெத்மி அஹின்சா பெர்னாண்டோ முன்னேறியுள்ளதால் அவருக்கு ஏதேனும் பதக்கம் ஒன்று கிடைப்பது உறுதி ஆகியுள்ளது.

இன்று இரவு நடைபெறவுள்ள அரை இறுதியில் தோல்வி அடைந்ததால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்கும். வெற்றிபெற்றால் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டியில் அவர் பங்குபற்றுவார்.

இன்று பகல் நடைபெற்ற பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப்பிரிவு கால் இறுதிப் போட்டியில் கெமறூன் வீராங்கனை எமிலியேன் எசொம்பே பங்குபற்ற தவறியதால் நெத்மிக்கு வெற்றி அளிக்கப்பட்டது.

பெண்களுக்கான நீளம் பாய்தல் இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் சாரங்கி சில்வா தகுதிபெற்றுள்ளார்.

எனினும் பெண்களுக்கான 1500 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் 7ஆம் இடத்தைப் பெற்ற கயன்திகா அபேரட்ன போட்டியிலிருந்து வெளியேறினார்.

பேர்மிங்ஹாம் அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான நீளம் பாய்தலில் 1ஆவது முயற்சியில் 6.42 மீற்றர் தூரம் பாய்ந்த சாரங்கி சில்வா 6ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றார்.

எனினும் 17 வீராங்கனைகள் பங்குபற்றிய 2 திறன்காண் போட்டிகளின் முடிவுகள் பிரகாரம் சாரங்கி சில்வா 10ஆவது இடத்தைப் பெற்றார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவர் நிலைநாட்டிய தேசிய சாதனையை (6.65 மீற்றர்) விட பேர்மிங்ஹாமில் அவர் பதிவுசெய்த தூரப் பெறுதி குறைவாகும்.

பெண்களுக்கான 1500 மீற்றர் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய கயன்திகா அபேரட்ன 7ஆம் இடத்தைப் பெற்று போட்டியிலிருந்து வெளியேறினார்.

போட்டியின் கடைசிக் கட்டத்தில் கடும் முயற்சியுடன் ஓடிய போதிலும் அவரால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. அவர் அப் போட்டியை 4 நிமிடங்கள் 16.97 செக்கன்களில் நிறைவு செய்து ஒட்டுமொத்த நிலையில் 13ஆவது இடத்தைப் பெற்றார்.

ஸ்மித்பீல்ட் கடற்கரை கரப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் இலங்கை தோல்வி அடைந்தது.

முதல் செட்டில் 18-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வி அடைந்த இலங்கைஇ 2ஆவது செட்டில் 21-16 என தோல்வி அடைந்தது. இலங்கை அணியில் அஷேன் ரஷ்மிக்க, ஷ ஷிமல் மலின்த ஆகியோர் இடம்பெற்றனர்.

என்ஈசீ 4ஆம் இலக்க அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான பட்மின்டன் ஒற்றையர் போட்டியில் இலங்கையின் துமிந்து அபேவிக்ரம (0-2) என்ற செட்கள் (9-21, 12-21) வித்தியாசத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் நம்மாழ்வாரிடம் தோல்வி அடைந்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right