ஜனாதிபதியின் உரைக்கு ஏற்றமுறையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளும் அமையவேண்டும்

By Vishnu

05 Aug, 2022 | 07:44 PM
image

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடரை தொடக்கிவைத்து நிகழ்த்திய கொள்கை விளக்கவுரை உலகினால் பாராட்டப்படக்கூடிய அளவுக்கு நல்லாட்சிமுறைக்கான தொலைநோக்கை வகுப்பதாக பாராட்டியிருக்கும் இலங்கை தேசிய சமாதானப் பேரவை தனதுரையில் கூறிய விடயங்களுக்கு ஏற்றமுறையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைவதை அவர் உறுதிசெய்யவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் பிரத்தியேகமான தன்மையை அங்கீகரித்து ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டிருக்கும் அல்லது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் போராட்ட இயக்க முன்னணி உறுப்பினர்களுக்கு முழுமையான மன்னிப்பை வழங்கவேண்டும் என்றும் கலாநிதி ஜெகான் பெரேராவை நிறைவேற்று பணிப்பாளராகக் கொண்ட தேசாய சமாதானப் பேரவை கேட்டிருக்கிறது.

இது தொடர்பில் பேரவை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ;

தற்போதைய பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை சம்பிரதாயபூர்வமாக தொடக்கிவைத்து கடந்த புதன்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்த்திய கொள்கை விளக்கவுரை உலகினால் மெச்சப்படக்கூடிய நல்லாட்சி மற்றும் பண்பு நயத்துக்கான நோக்கை வகுப்பதாக அமைந்திருக்கிறது.முன்னாள் ஜனாதிபதியையும்  பிரதமரையும் அமைச்சரவையையும் பதவிவிலகச் செய்த மக்கள் போராட்டங்களின்போது சட்டத்தை மீறிச் செயற்பட்டதற்காக போராட்ட இயக்கத்தின் பல தலைவர்களும் இளம் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு நேரத்தில் ஜனாதிபதி அந்த உரையை நிகழ்த்தியிருக்கிறார்.

ஜனாதிபதி பதவியேற்றிருப்பதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் தேசிய சமாதானப் பேரவை அவரது நோக்கு மெய்ம்மையாவதற்கு ஆதரவை வழங்குகிறது.தற்போதைய நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பல்வேறு புதிய முன்முயற்சிகளை எடுப்பதை நாம் காண்கிறோம்.போராட்ட இயக்கமும் இந்நாட்டின் இளைஞர்களும் வேண்டிநிற்கின்ற முறைமை மாற்றம் (system Change) என்பது பொருளாதாரக் கட்டமைப்பின் நிலைகுலைவுக்கு பங்களிப்புச் செய்த தற்போதைய பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இருக்கும் தற்போதைய கட்டமைப்புக்களின் முற்றுமுழுதான மாற்றமேயாகும்.

இந்த தருணத்தில் ஜனாதிபதியிடம் நாம் ஐந்து விசேட வேண்டுகோள்களை முன்வைக்கின்றோம்.

(1) தடுப்புக்களையும் சமப்படுத்தல்களையும் (System of checks and balances ) வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்புக்கு கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டிருக்கும் 22 வது திருத்தத்தை அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது.அரசியலமைப்பு பேரவையின் பத்து உறுப்பினர்களில் மூவர் சிவில் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள்.ஆனால் அவர்களை தெரிவுசெய்வதற்கான தற்துணிபு அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகருக்கு வழங்கப்படுகிறது.அதனால் அந்த தெரிவுகள் அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையக்கூடிய சாத்தியம் இருக்கிறது.எனவே அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தில் இருந்ததைப் போன்று அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் சமூக பிரதிநிதிகளை பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் சேர்ந்து தெரிவு செய்வதாக இருக்கவேண்டும் என்று நாம் கோருகிறோம்.

(2) உள்ளடக்கத்திற்காகவும் எடுத்தியம்பப்பட்ட முறைக்காகவும் பலராலும் பாராட்டப்படுகின்ற தனது கொள்கை விளக்கவுரையில் ஜனாதிபதி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று அமைக்கப்படவேண்டும் எனற தனது யோசனையை மீண்டும் முன்வைத்தார்.முன்னதாக இது தொடர்பில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் கடிதங்களை எழுதியிருந்தார்.பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பருமன் மற்றும் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் சகல கட்சிகளுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்கக்கூடியதாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு நாம் ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம்.ஆட்சிமுறையில் தங்களுக்கு ஒரு உரிமை இருக்கிறது என்று ஒவ்வொரு கட்சியும் உணரக்கூடிய முறையில் அமைச்சரவையை அமைக்கவேண்டியது அவசியமாகும்.

(3) தன்னை இன்று ஜனாதிபதியாக ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்ததில் போராட்ட இயக்கம் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த பங்கை அவர் அங்கீகரித்திருக்கிறார்.அமைக்கப்படவிருக்கும் தேசிய கொள்கை சபையில் போராட்ட இயக்கத்தவர்களுக்கு இடம் கொடுக்க ஜனாதிபதி முன்வந்திருக்கிறார்.மேலும்,போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு சர்வகட்சி அரசாங்கத்தில்  பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்று நாம் கோருகின்றோம்.

(4) கொள்கை விளக்கவுரையில் ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று சகல சமூகங்களையும் சேர்ந்த இளைஞர்களையும் குடும்பங்களையும் உள்ளடக்கிய மக்கள் போராட்டத்தின் பிரத்தியேகமான தன்மையை அவர் அங்கீகரிக்கவேண்டும் என்று நாம் கோருகிறோம்.தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு அல்லது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுபவர்களுக்கு முற்றுமுழுதான மன்னிப்பை வழங்குமாறு ஜனாதிபதியை நாம் கேட்டுக்கொள்கிறோம்.அரசியல் தலைமைத்துவத்தில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பங்களிப்புச் செய்த இளைஞர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளவேண்டும். அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடாது.

(5) நாடு இன்று எதிர்நோக்குகின்ற பொருளாதார இடர்பாடுகளும் செலவைச் சமாளிக்கக்கூடியதாக சம்பாதிக்க இயலாமல் இருக்கின்ற நிலையும் மக்களின் பொருளாதாரம்,வாழ்க்கைத்தரம் மற்றும் ஜீவாதாரங்களில் பாரிய மறுசீரமைப்பை வேண்டிநிற்கின்றன.இதற்கு மக்களின் ஆதரவுடனும் புதிய ஆணையுடனும் கூடிய அரசாங்கம் ஒன்று தேவை. ஒரு வருட கால வரையறைக்குள் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும் என்று நாம் கோருகிறோம். சிறுபான்மைச் சமூகங்களுக்கு முக்கியமானதான -- நீண்டகாலமாக பின்போடப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தல்களும் நடத்தப்படவேண்டும். 

போராட்ட இயக்கத்தின் முன்னணி உறுப்பினர்களை தொடர்ச்சியாக கைது செய்யும் நடவடிக்கை துரதிர்ஷ்டவசமாக நாட்டின் மீது இருளைக் கவிய வைத்திருக்கிறது.ஜனாதிபதி தனது  கொள்கை விளக்கவுரையில் கூறியவற்றை நடைமுறையில் செய்துகாட்டினால் அந்த இருளை அகற்றமுடியும்.அதைச் செய்யாவிட்டால் அரசியல் உறுதிப்பாடு மற்றும் தேசிய பொருளாதார நெருக்கடியில் இருந்து  மீட்சிக்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நழுவிப்போகும்.

அரசியல் உறுதிப்பாட்டை மீளநிலைநிறுத்துவதே உடனடித்தேவையாகும்.அதற்கான மார்க்கம் போராட்டக்காரர்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் எதிராக அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதல்ல, மாறாக நாடுபூராவும் இலட்சக்கணக்கில் இளையவர்களையும் முதியவர்களையும் வீதிக்கு இறக்கிய மூலக்காரணிகளை களைவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அத்துடன் போராட்டக்காரர்களுடன் அமைதிவழியில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான வழிவகைகளை கண்டறியவேண்டும்.ஒரு சில மாதங்களுக்குள் தங்களது வாழ்க்கைத்தரம் நிலைகுலைந்துபோய்விட்டதனால் திணறிக்கொண்டிருக்கும் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் கையாளவேண்டுமே தவிர எதிர்க்குரல்களை மௌனப்படுத்துவதற்கு அவசரகால சட்ட அதிகாரங்களை பயன்படுத்தி வேட்டையாடக்கூடாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right