எழுத்தாளர், கவிதாயினி கவிமகள் ஜெயவதியுடனான நேர்காணல்...
உங்களை பற்றிய அறிமுகம்
கவிமகள் ஜெயவதி எனும் புனைபெயர் கொண்ட நான், அம்பாறையில் உள்ள அட்டப்பள்ளத்தில் சீனித்தம்பி - அமராவதி தம்பதியின் மகள். விபுலானந்தா தேசிய பாடசாலையில் ஆரம்பக்கல்வியை தொடங்கி வன்செயல் காரணமாக இடம்பெயர்ந்து, மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் உள்ள பட்டிருப்பு தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கற்றேன். வறுமை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாமல் பல கனவுகளை மனதில் புதைத்துக்கொண்டேன்.
என் கணவர் நித்தியானந்தன் ஓர் ஆசிரியர். இப்போது எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தாய், சிறந்த இல்லத்தரசியான போதும் மீண்டும் கவிதை, சிறுகதை, பட்டிமன்றப் பேச்சு, அறிவிப்பு என பல துறைகளில் சாதிக்க, எனது கனவுகளை நனவாக்க இக்கலைப் பயணத்தை தொடர்கிறேன்.
வறிய மாணவர்களுக்கு நீங்கள் எவ்வாறான உதவிகளை செய்து வருகிறீர்கள்?
இனம் இனத்தை அறியும் என்பார்கள். வறுமையால் கல்வியை இழந்த நானும், என் பள்ளித் தோழர்களும் குழுவொன்றை அமைத்து, நிதி சேகரித்து, நாங்கள் கல்வி கற்ற பாடசாலைக்கும், அங்கு கற்கும் மாணவர்களுக்குமென கட்டடங்களை புனரமைத்தல், சேதமடைந்த தளபாடங்களினை திருத்தியமைத்துக் கொடுத்தல், மாணவத் தலைவர்களுக்கான சின்னங்களை வழங்க நிதியுதவி செய்தல் போன்ற பணிகளை ஆற்றி வருகிறோம். இனிவரும் காலங்களிலும் எமது பணி தொடரும்.
இதுவரை நீங்கள் பங்குபற்றிய இலக்கிய நிகழ்வுகள் பாடசாலை மட்டத்தோடு மட்டுமே தொடர்புபட்டனவா?
பள்ளி நாட்களில் பேச்சு மட்டுமன்றி விவாதப் போட்டிகளிலும் பங்குபற்றி நிறைய பரிசுகளை பெற்றிருக்கிறேன். அது தவிர கடந்த மகளிர் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தின் கலாசா உத்தியோகத்தர்களால் ஒருங்கமைக்கப்பட்ட 'துணிந்தெழு பெண்ணே' கவியரங்கத்தை தலைமையேற்று, நடத்திய பெருமையும் எனக்குண்டு.
சமீபத்தில் நீங்கள் வெளியிட்ட நூலை பற்றி கூறுங்கள்...
'அணங்கே அகிலம் வெல்' எனும் பெண்ணியம் சார்ந்த நூல். நான் கடந்து வந்த பலரது நிராகரிப்பும் புறக்கணிப்புகளுமே இந்த நூல் உருப்பெற காரணமாயிற்று. என்னை போல் எத்தனையோ பெண்கள் வீட்டுக்குள் முடங்கி கனவுகளோடு வாழலாம். அவர்களை வெளிக்கொண்டு வரும் ஓர் ஊக்கியாக இந்நூலும், இதன் ஒவ்வொரு கவிதைகளும் ஆக்கப்பட்டுள்ளது.
திருமணத்துக்குப் பின் முடக்கப்பட்ட படைப்புத் திறமைகள், முகநூல் வாயிலாக மீண்டும் வெளிவருவது ஒரு வரம் என பல முறை கூறி வருகிறீர்கள்... அப்படியானால், முகநூலை பற்றிய உங்கள் பார்வை...
பள்ளிக்காலத்தில் பளிச்சிட்ட கனவுகள் திருமணத்துக்குப் பின் முடக்கப்படுவது, பெண்கள் அனைவருக்குமே பொதுவாக நேரும் ஒன்றே. சில அதிர்ஷ்டசாலிப் பெண்களை தவிர. அந்த வகையில் முடக்கப்பட்ட கலை, இலக்கியம் மீதான எனது ஆர்வம் மீண்டும் உயிர்பெற வரமாக அமைந்தது, முகநூலே.
முகநூல் தவறான சமூக ஊடகம் என பலர் கூறுகின்றனர். அதன் பயனாளர்களையும் தவறாகவே பார்க்கிறார்கள், பேசுகிறார்கள். முகநூல் உயிர் கொல்லும் விஷம் போன்றும் கருதுகின்றனர். அந்நாட்களில் நானும் பயந்திருக்கிறேன். எனினும், அதே வேகத்தில் இன்று முகநூலினால் மீண்டும் உயிர்த்தெழுந்த ஒருத்தியாக நிற்கிறேன்.
நாம் எதை, எவ்வாறு கையாள்கிறோமோ, அவ்வாறே நமக்கான பலன்களும் அமையும் என்பது என் கருத்து.
வட்ஸப் தளத்திலிருந்து முகநூலுக்குள் நுழைந்த எனது கிறுக்கல்களையும் என்னையும் என் முகநூல் நண்பர்கள் வரவேற்றனர், வழிகாட்டினர். ஆக்கங்களை பதிவிட தொடங்கினேன். தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்தன.
சரியான களமும் ஊக்குவிக்கும் உறவுகளும் இருந்தால் உலகம் போற்றுமளவு சாதனை படைக்கலாம் என்பது முகநூல் வாயிலாக நானறிந்த உண்மை.
திருமணத்துக்கு பிறகு உங்களது படைப்புகள், திறன், ஆளுமைப் பண்புகள் எதனை சார்ந்து நிர்ணயிக்கப்படுகிறது?
திருமணத்துக்குப் பின்னர் அனைத்துப் பெண்களுக்குமே இரட்டை வாழ்க்கைதான். குடும்பத்துக்காக தன் கனவுகளை தியாகம் செய்யக்கூடியவள் பெண். அவ்வாறே நானும் எனது படைப்புகளையும் ஆளுமைகளையும் சுமார் 20 வருடங்களாக புதைத்து வைத்திருந்தேன். யாருடைய வற்புறுத்தலும் இன்றி, என் குடும்ப நலன் கருதி, நானாக எனக்கு இட்டுக்கொண்ட விலங்கு இது.
ஒன்லைன் வானொலி அறிவிப்பாளராக வலம் வர நீங்கள் அர்ப்பணித்த விடயங்கள்?
அர்ப்பணிப்பு - இது ஆண் - பெண் இரு பாலாருக்கும் சமமானது. நாம் எந்தவொரு துறையிலும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மட்டுமே சாதிக்க முடியும்.
நானும் நிறைய அர்ப்பணித்திருக்கிறேன். உறவினரின் நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்திருக்கிறேன். குடும்பத்தாரோடு அன்பாக உரையாடுவதற்கான நேரத்தை குறைத்துக்கொண்டுள்ளேன். எனது குரலை மெருகேற்ற எனக்கு பிடித்த பல உணவுகளை தூர தள்ளியிருக்கிறேன். இவ்வாறு சிறு விடயங்களை அர்ப்பணித்தே சிறப்பான இடத்தை தக்கவைத்துக்கொண்டேன்.
நவீன காலத்திலும் ஆண்கள் சம்பந்தமான விடயங்களில் சில பிற்போக்குத்தனமான புத்திமதிகள் பெண்களின் அடிமைத்தனத்தை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறதே... உங்கள் கருத்தென்ன?
என்னதான் நவீன யுகம் என்றாலும், பெண் என்கையில் அங்கே அடிமைத்தனம் அரங்கேறவே செய்யும்.
பெண்ணென்றால் ஆணுக்கு அடிமை, அவனை மீறி எந்த செயலையும் செய்துவிடக் கூடாது, ஆணை விட அவள் பேச்சால் கூட உயர்ந்திடக் கூடாது என்கிற கருத்தும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
இதில் கவலைக்கிடமான விடயம், பெண்ணுக்கு பெண்ணே எதிரியாவது தான்.
பெண்தான் வீட்டுப் பணிகளை செய்ய வேண்டும், குழந்தை வளர்க்க வேண்டும், சமைக்க வேண்டும்... எங்கு செல்வதாக இருந்தாலும், பெண் ஆண் துணையுடனே செல்ல வேண்டும் என்கிற பிற்போக்குத்தனமான புத்திமதிகளுக்கு நடுவே, ஆணே முதன்மையானவன் எனும் தொனி முன்நிற்கிறது.
உங்களது எழுத்துப் பயணத்தில் துணை நிற்பவர்கள்....
ஒரு பெண்ணோ ஆணோ சாதிக்க சரியான களமும் சில நல்ல உள்ளங்களும் வேண்டும். எனக்கும் நல்ல நண்பர்கள் உள்ளனர். அவர்களின் துணையோடு தான் எனது நூல் வெளியீடு எங்கள் ஊரில் நடைபெற்றது.
என் நண்பர்கள் மற்றும் உடன்பிறவா சகோதரர்களின் ஊக்கப்படுத்தலால் எனது தேடல் முயற்சியை ஆரம்பித்தேன். வலைத்தளங்கள் வாயிலாக பல நூல்களை, தகவல்களை படித்து வந்தேன்.
முகநூலே தவறு என முறைத்த உறவுகளின் முகச்சுளிப்பை ஒதுக்கிவிட்டு, எனது தேடலுக்கு முகநூலை முழுமையாக பயன்படுத்தினேன். பல குழுமங்களின் மூலமாக பல படிப்பினைகளை கற்று, என்னை மெருகேற்றிக்கொண்டேன். அந்த வகையில் எனக்கு உந்துசக்தியாக இருந்தவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது.
எமது வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?
ஆணோ பெண்ணோ... பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என வாழ்ந்து முடிக்காமல், நம் இறப்பை சரித்திரமாக ஆக்குவோம்.
அத்தோடு சிறந்த பிரஜையாக வாழ வேண்டும். நாம் வாழும் வாழ்க்கையின் பிரதிபலிப்பு நாம் இறந்தும் பலர் மனங்களில் நீங்காது நிறைந்திருக்க வேண்டும்.
அன்பு, பொறுமை, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, நீதி, நேர்மை, பண்பாட்டின் வழியே வாழ்ந்து தாய்நாட்டுக்கும் ஈன்ற தாய்க்கும் இந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.
ஆணோ பெண்ணோ, அவரவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மகானாக இல்லாவிடினும் மனசாட்சியுடன் வாழ்வோம்.
- பாத்திமா நளீரா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM